You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி ராமர் கோவில் அடிக்கல்: மோதியின் இந்துத்துவ தோற்றம் மேலும் வலுவடையுமா?
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
வேட்டி, குர்தா மற்றும் கழுத்தில் அங்கவஸ்த்திரம், கூடவே கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் முககவசமும். அயோத்தியில் ராம ஜென்மபூமி கோவில் அடிக்கல்நாட்டு விழாவுக்காக வந்த பிரதமர் நரேந்திரமோதியின் உருவம் தொலைக்காட்சி சேனலில் தெரிந்தவுடனேயே அனைவரும் ஒரு விஷயத்தை கவனித்தனர்- அவரது வேட்டி மற்றும் குர்த்தாவின் நிறம்.
எதிர்பார்ப்புக்கு மாறாக, பிரதமர் மோதி, இளஞ்சிவப்பு நிற குர்த்தா அளியவில்லை.
சமூக ஊடகங்களில், மோதியின் 30 ஆண்டுகளுக்கு முந்தைய படமும், இன்றைய படமும் மிக அதிகமாக பகிரப்படுகின்றன. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொண்டர் மோதிக்கும், இன்றைய பிரதமர் மோதிக்கும் எத்தனை வித்தியாசம் - இதுகுறித்த விவாதம் நிச்சயமாக நடைபெறுகிறது.
உடை
நரேந்திர மோதி எப்போதுமே எதாவது புதிதாக செய்வதை விரும்புபவர். அவர் சூழ்நிலைக்கு ஏற்றவகையில் உடை அணிவார். ஆகவே அவர் ஃபேஷனபிள் டிரஸ்ஸர் (நவநாகரிக உடையணிபவர்) என அறியப்படாமல், அப்ராப்ரியேட் டிரஸ்ஸர் (பொருத்தமாக உடையணிபவர்) என்று அறியப்படுகிறார் என்று ப்ராண்ட் வல்லுநர் ஹரீஷ் பிஜூர் சொல்கிறார்.
பிரதமரின் இந்த உடை பற்றிய விவாதம் , உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நடக்கும் என்கிறார் ஹரீஷ். இந்த விஷயத்தை அவர் நன்கு அறிவார், ஆகவேதான் அவர் ஒரு பொதுவான நிறத்தை தேர்வு செய்தார் . " இந்த நிறம் இளம்சிவப்புடன் ஓரளவு ஒத்ததாக உள்ளது, அதன் ஒரு ஷேட் தான் இது, ஆனால் அத்தனை அழுத்தமாக இல்லை. இந்த விழாவில், பரஸ்பர நல்லிணக்கம் என்ற செய்தியையும் அவர் தர விரும்பினார். ஒரு நாட்டின் உயர் ஆட்சியாளர் என்ற முறையில் அவர் இந்த விஷயத்தை புரிந்துகொண்டுள்ளார்," என்று ஹரீஷ் மேலும் தெரிவித்தார்.
'நான் ஒரு இந்தியன் ', ' நான் ஒரு இந்து ', கூடவே ' நான் நடுநிலையானவன் '- இந்த மூன்று செய்திகளையும் ஒரே ஆடையில் பிரதமர் தருகிறார் என்று ஹரிஷ் கருதுகிறார்.
கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பூமி பூஜை நிகழ்ச்சியை, ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. அயோத்தி நிலத் தகராறில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப்பின்னர், இந்த அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கியது.
அறக்கட்டளையின் அழைப்பின் பேரில் பிரதமர் அங்கு சென்றார் . 'ஜெய் சியா ராம்' மற்றும் 'சியாபதி ராம்சந்திர கி ஜெய்' என்று கூறி தனது உரையைத் தொடங்கிய பிரதமர், இதே வார்த்தைகளுடன், உரையை நிறைவுசெய்தார். பூமி பூஜையில் பிரதமர் என்ற நிலையில் கலந்துகொண்டதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அசாதுதீன் ஒவைசியும், மோதியை விமர்சித்துள்ளனர். சர்ச்சைக்குரிய கோயில் தொடர்பான பிரச்சனை , உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு முடிவடைந்திருக்கலாம், ஆனால் அது எப்போதும் பிரதமர் மோதியின் அரசியல் வாழ்க்கையில் குறிப்பிடப்படும். இது அவருடைய அரசியல் வருங்காலத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இப்போது விவாதம் தொடங்கியுள்ளது.
இந்த விழாவுக்குப் பிறகு, இந்திய வரலாற்றில் மிக நீண்ட ஓர் அத்தியாயம் முடிவுக்கு வரப்போகிறது என்று இந்தியாவின் சில அரசியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். இந்த அத்தியாயத்தின் முடிவில் ஒரு புதிய இந்தியா தொடங்கும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
"நமது நாடு எவ்வளவு சக்திவாய்ந்ததாக உள்ளதோ, அத்தனை பாதுகாப்பாகவும் அச்சமின்றியும் நாம் இருப்போம். " என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சரியான தருணம்
இந்த விழா மற்றும் பூமி பூஜையில் மோதி கலந்துகொண்டிருப்பது, உலக அளவில் மோதியின் தோற்றத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது மதிப்பிட முடியாது என்று மூத்த பத்திரிக்கையாளர் நிஸ்துல்லா ஹெப்பர் கூறுகிறார். மோதி அயோத்தியில் இருக்கும் புகைப்படங்களை செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் பகிர்ந்துள்ளது. "இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, சர்ச்சைக்குரிய இந்து கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்," என்று தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு இந்த பூமி பூஜை நடக்கிறது என்றும் அறக்கட்டளையின் அழைப்பின்பேரில் பிரதமர் நரேந்திர மோதி அங்கு சென்றார் என்றும் முன்னதாகப் பார்க்கப்பட்டது. இது ஓரளவு விவாதங்களுக்கு ஓய்வை தந்தது . ஆனால், இப்போது அப்படி தெரியவில்லை.
"இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, இந்து உணர்வுகளின் பிரதிநிதி மற்றும் கோட்பாட்டளவில் அரசாங்க கொள்கைகளில் அதை முன்னிறுத்துகிறார் என்று ஏற்கனவே உலகம் முழுவதும் ஒரு விவாதம் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதால் அதில் எந்த மாற்றமும் இருக்காது ," என்று நிஸ்துல்லா கூறுகிறார்.
ஆனால் இந்தியாவில் அவர் , இந்துத்துவ தலைவரின் அடையாளமாக பார்க்கப்படுவார் என்று அவர் நம்புகிறார். இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அத்வானி- வாஜ்பேயி காலத்து பாஜக, அயோத்தியில் ராமர் ஆலையம் கட்டும் பிரசாரத்தை வழிநடத்தியது, அந்த இலக்கை நரேந்திர மோதி எட்டினார், இதற்கான பெயர் எப்போதும் மோதிக்கே கிடைக்கும்,என்று நிஸ்துல்லா குறிப்பிடுகிறார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம், ஜம்மு-காஷ்மீரில் , 370 வது பிரிவை ரத்து செய்தது, மற்றும் பொது சிவில் சட்டம் - இந்த மூன்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய லட்சியங்களாக இருந்தன. இவற்றில் இரண்டு, நரேந்திர மோதி ஆட்சிக் காலத்தில் நிறைவேறின. மேலும் முத்தலாக் மசோதாவும் வந்தது, இது நரேந்திர மோதியின் மிகப்பெரிய அடைவுகள் என்று நிஸ்துல்லா கருதுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மோதி கலந்துகொண்டது, அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை என்று சொல்லமுடியாது என்று அவர் மேலும் கூறுகிறார். பிரதமர் மோதியின் பதவிக்காலம் , மூன்று விஷயங்களுக்கு நினைவுகூரப்படும்.
முதலாவது, அவரது தலைமையின் கீழ், பாஜக இரண்டு முறை தனது சொந்த பலத்தால் அரசு அமைக்க முடிந்தது. இந்துத்துவ அரசியல் மூலமாகவும் இந்தியாவில் அதிகாரத்தை அடைய முடியும் என்பதை மோதி நிரூபித்துவிட்டார். நாட்டில் இந்துக்கள் சாதி அடிப்படையில் வாக்களிக்கிறார்கள், எனவே வாக்குகள் பிளவுபடுகின்றன, அரசு அமைக்க சிறுபான்மையினரின் ஆதரவும் தேவை என்ற கருத்து முன்னதாக நாட்டில் இருந்தது.
இரண்டாவதாக, அவர் பல காலமாக இருந்துவரும் பிரச்சனைகளான, 370வது பிரிவு மற்றும் ராமர் கோயில் ஆகிய இரண்டிலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினார்.
மூன்றாவதாக, அவர் பிரதமர் வீட்டுவசதி திட்டம், உஜ்வாலா திட்டம் போன்ற திட்டங்களைத் தொடங்கினார். நாட்டில் ஏழைகளின் கட்சியாக காங்கிரஸ் கருதப்படுகிறது, மோதி தலைமையில், பாஜக அந்த தோற்றத்தையும் காங்கிரஸிடமிருந்து பறித்துவிட்டது என்று நிஸ்துல்லா கூறுகிறார்.
கலவரத்தின் கறை
ஆனால் அரசியல்வாதியாக மோதி கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், 2002 கலவரங்களின் கறை கழுவப்படுமா?
கறை ஏற்கனவே கழுவப்பட்டுவிட்டது. அதன் பிறகு நரேந்திர மோதி ஒரு தேர்தலிலும் தோல்வியடையவில்லை. இன்று ஒவைசியின் கட்சியைத் தவிர வேறு எங்கிருந்தும் எதிர்ப்புக் குரலும் கேட்கவில்லை. இதை 25 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா? இன்று மோதியின் தலைமையிலான இந்திய அரசியலில், இந்துத்துவ கொள்கைக்கு எதிரான விமர்சனங்கள் காணாமல் போய்விட்டன என்று மூத்த பத்திரிக்கையாளர், பிரதீப் சிங், தெரிவிக்கிறார்.
ஆனால் இந்த விஷயம் எப்போதும் மோதியுடன் சேர்ந்தே இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் நீரஜா சவுத்ரி கூறுகிறார். குஜராத்தில், அவர், இந்து இதய சக்கரவர்த்தியாக உள்ளார். உலக அளவிலும் அதேபோலத்தான் உள்ளது . இந்த பூமி பூஜைக்கு பிறகு அது மேலும் வலுப்பெறும் என்றே தோன்றுகிறது..
அயோத்திக்கு பிறகு என்ன நடக்கும் என்பதைப்பொறுத்தே, பல விஷயங்கள் இருக்கும் என்பதும் உண்மைதான்.
1992 டிசம்பர் 6 முதல், கோவில் விஷயம், தேர்தல்களில் வாக்கு சேகரிப்பதற்கானதாக இல்லை. பாஜகவுக்கு , இந்துத்துவ கொள்கை மற்றும் தேசியவாத அடிப்படையில் வாக்குகள் கிடைத்தன, கோயில் விஷயத்தால் அல்ல என்று நீரஜா வாதிடுகிறார்.
அயோத்தி கோவிலால், 2022 உத்தரப்பிரதேச தேர்தலில், யோகி ஆதித்யநாத் பலன் பெறுவாரா என்ற கேள்வி இப்போது எழுகிறது என்றும் நீரஜா மேலும் கூறுகிறார்.
2024 இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு மீண்டும் கோயில் பெயரில் வாக்குகள் கிடைக்குமா? அல்லது அயோத்தியில் உள்ள கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் விஷ்வ இந்து பரிஷத் மீண்டும் காசி மற்றும் மதுரா என்ற முழக்கத்தை எழுப்புமா? அல்லது இந்து முஸ்லிம்களிடையே இணக்கமான சூழ்நிலை இருக்குமா?
பாபர் மசூதி இடிப்பு ஒரு கிரிமினல் குற்றம் என்று உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது, ஆனால், இதற்காக யாரும் இதுவரை குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், வரும் நாட்களில், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உறவு எப்படி இருக்கும், முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா என்று பல கேள்விகள் இன்று முதல் மீண்டும் எழும் என்று நீரஜா கருதுகிறார்.
இந்த கேள்விகளுக்கான பதிலில், அரசியல்வாதியாக மோதியின் எதிர்காலமும் இணைந்துள்ளது.
ராமர் கோயில் வரலாற்றில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முக்கியமானதாக கருதப்பட வேண்டும் என்று நீரஜா கூறுகிறார். நரேந்திர மோதியின் அரசியல் பயணத்தில் இந்த நாள் பெரியது அல்ல. மற்றொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்ட கண்ணோட்டத்தில் மட்டுமே இதை பார்க்கவேண்டும்.
மூத்த பத்திரிகையாளர் அதிதி ஃபட்னிஸும், நிஸ்துல்லா மற்றும் நீரஜாவை போன்றே, இந்த விழாவில் மோதியின் பங்கேற்பை மற்றொரு விழா போலவே கருதுகிறார்.
தன்னை இந்துத்துவ தலைவராகவே மட்டுமே பார்க்காமல், பொருளாதார மற்றும் சமூகத் துறையிலும் பல பணிகளைச்செய்த தலைவராகப்பார்க்கவேண்டும் என்றே மோதியும் விரும்புகிறார் என்று அதிதி கருதுகிறார்.
அடிக்கல்நாட்டு விழாவிற்கு பிரதமர் மோதியின் வருகை, நிச்சயமாக நாட்டின் இந்துத்துவ அரசியலுக்கு ஒரு திருப்புமுனையாகும் என்று பிபிசியிடம் பேசிய அதிதி கூறினார்.
மோதி தான் சொல்வதை எல்லாம் இந்துத்துவ கொள்கையின் பின்னணியில் சொல்கிறார், தான் செய்வதையெல்லாம், இந்துத்துவ கொள்கையின் பின்னணியில் செய்கிறார், ஆனால் மறுபுறம் அவர், இந்தியாவில் , குறிப்பாக சமூகப்பாதுகாப்புத்துறையில், முற்றிலும் புதிய பல கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்கியுள்ளார் என்பதில் பெருமிதம் கொள்கிறார். இதற்கான பெருமையை யாரும் தட்டிப்பறிப்பதையும் அவர் விரும்பவில்லை.
1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் எல்.கே. அத்வானி ஆற்றிய உரையை அதிதி நினைவு கூர்ந்தார். அப்போது அத்வானி தனது உரையில் 'கலாச்சார தேசியவாதம்' என்று குறிப்பிட்டார்.
அந்த நேரத்தில் யாருக்கும் அதன் பொருள் புரியவில்லை, ஆனால், அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டதாக, அதிதி கருதுகிறார்.
பிரதமர் மோதியும் தனது உரையில் கலாச்சார தேசியவாதம் பற்றிச்சொல்வதை கேட்கமுடிந்தது. "ராமர் பன்முகத்தன்மையின் சின்னம். அனைத்தும் ராமருக்கு சொந்தமானது, ராமர் அனைவருக்கும் சொந்தமானர். துளசியின் ராமர், சாகுன் ராமர்; நானக் மற்றும் கபீரின் ராமர், நிர்குண் ராமர். மகாத்மா காந்திக்கு ரகுபதி ராமர் . தமிழ், மலையாளம் , வங்கமொழி, காஷ்மீரி, பஞ்சாபியிலும் ராமர் இருக்கிறார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
70 ஆண்டுகளாக ஒரு வழக்கு நடந்தது, அதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப்பின்னர் கோயிலுக்கு வழி ஏற்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்திய மக்கள் இதற்கான பெருமையை, பிரதமர் மோதிக்கு அளித்துள்ளனர். பிரதமர் , அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டிருக்கும் செயலானது, அவர் இந்தப்பெருமையை தக்கவைத்துக்கொள்ளவே விரும்புகிறார் என்பதைக்காட்டுவதாக நீரஜா கருதுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: