You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளாவில் பலத்த மழை, நிலச்சரிவு - 15 பேர் மீட்கப்பட்டதாக முதல்வர் தகவல்
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான மூணாறில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு ஒன்றில் சிக்கி உயிரிழந்த 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 60 பேர் அதில் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை குறைந்தது 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
கேரள அரசாங்கம் மீட்புப் பணிகளுக்காக இந்திய விமானப் படையின் உதவியை கோரியுள்ளது.
பாலம் ஒன்றும், சாலை ஒன்றும் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்புப் பணியில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
மூணாறில் ராஜமாலா என்னும் இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
முன்னதாக, அந்த மாநில வருவாய் துறை அமைச்சர் சந்திர சேகரன் கூறுகையில், "சம்பவ பகுதிக்கு அருகாமையில் உள்ள சில வனத்துறை அதிகாரிகள் மீட்புப் பணியை தொடங்கியுள்ளனர்" என்றார்.
ஆனால் "சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் முடக்கம் ஏற்பட்டுள்ளது," என கேரள காவல்துறையின் மக்கள் தொடர்பு பிரிவின் இணை இயக்குநர் வி.பி.பிரமோத் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
நிலச்சரிவு ஏற்பட்டுள்ள ராஜமாலா பகுதியில் பெரிதும் பழங்குடியின மக்களே வாழ்கின்றனர்.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில் தொடர்ந்து கனமழை
தமிழகத்தின் நீலகிரியிலும் கடந்த ஆகஸ்டு 2ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து பெருமழை பெய்து வருகிறது. அங்கு 24 மணி நேரத்தில் 131.75 மி.மீ மழை பதிவாகியுள்ளது
நீலகிரியில் நேற்று பெய்த கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் மின்வாரிய குடியிருப்புக்கு அருகே இருந்த நிலப்பகுதி மொத்தமாக சரிந்தது. அப்பகுதியினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
அவலாஞ்சி, கூடலூர், பாடந்தொறை, செருமுள்ளி மற்றும் மேல்பவானி பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து வருகிறது.
பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருவதால் மின்சார வினியோகம் மற்றும் சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பர்லியார், எடப்பள்ளி, ஹெலிக்கல் மற்றும் கீழ்கோத்தகிரி ஆகிய பகுதிகளில் குறைந்த அளவில் மழை பதிவாகியுள்ளது.
பிற செய்திகள்:
- கு.க. செல்வம்: திமுகவிடமிருந்து விலகி நிற்பது ஏன்? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
- அயோத்தி ராமர் கோயில் தமிழகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
- 500 வார்த்தைகளில் அயோத்தியின் 500 ஆண்டுகால வரலாறு
- இலங்கை தேர்தல்: 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்றது மஹிந்தவின் "தாமரை மொட்டு"
- மு. கருணாநிதியின் மரணத்தின்போது வட இந்திய ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: