கொரோனா வைரஸால் இந்திய பொருளாதாரத்துக்கு ஒரு நற்செய்தி: மகிழ்ச்சி நீடிக்குமா?

    • எழுதியவர், விக்னேஷ்.அ
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்திய அரசு அமலாக்கியுள்ள முடக்கநிலை 18 ஆண்டுகளில் நடக்காத ஒன்றை நிகழ்த்திக் காட்டியுள்ளது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதியை விடவும் அதிகமாக உள்ளது. ஆனால், இது உண்மையாகவே மகிழ்ச்சிக்குரிய செய்திதானா? இது மகிழ்ச்சிதான் என்றால் இந்த மகிழ்ச்சி நீடிக்குமா?

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் இந்த வாரம் வெளியிட்ட தரவுகளின்படி ஜூன் மாதத்துக்கான (சேவைத் துறைகள் அல்லாத) இந்தியாவின் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி, அவற்றின் இறக்குமதியைவிட 79 கோடி அமெரிக்க டாலர் அதிகமாக உள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய்.

இதற்கும் முன்னதாக இந்தியாவின் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு இறக்குமதியைவிட அதிகமாக இருந்தது 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான். 18 ஆண்டுகள் 5 மாதங்கள் கழித்து மீண்டும் இந்த நிலையை இந்தியா அடைந்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு நாட்டின் இலக்கும், தங்கள் இறக்குமதியைவிட ஏற்றுமதியின் மதிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

வர்த்தகப் பற்றாக்குறை - வர்த்தக உபரி

ஏற்றுமதியைவிட இறக்குமதியின் மதிப்பு அதிகமாக இருப்பது வர்த்தகப் பற்றாக்குறை எனப்படும். இறக்குமதியைவிட ஏற்றுமதியின் மதிப்பு அதிகமாக இருப்பது வர்த்தக உபரி எனப்படும்.

வர்த்தக உபரி இப்போது இந்தியாவுக்கு நிகழ்ந்திருக்கிறது என்று முழுமையாக மகிழ்ச்சிகொள்ள முடியாது. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.

சர்வதேச பொருளாதார வீழ்ச்சி - முதல் காரணம்

இப்போது ஏற்றுமதி அதிகரித்திருப்பதன் காரணம் அரசின் கொள்கைகளோ, நடவடிக்கைகளோ அல்ல. இது சர்வதே நிலவரத்தின் ஒரு பிரதிபலிப்பு.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக, கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளுமே பொருளாதார சரிவை எதிர்கொண்டுள்ளன.

1930இல் உலகையே உலுக்கிய பெருமந்தத்தை (Great Depression) விடவும் மோசமான ஒரு பொருளாதாரத் சூழலுக்குள் நாம் நுழைந்திருக்கிறோம் என்கிறது சர்வதேச நாணய நிதியம்.

இப்போது உலகளவில் சந்தைத் தேவை, உற்பத்தி, மக்களின் வாங்கும் திறன் அனைத்துமே அதள பாதாளத்தில் இருப்பதால் அனைத்து நாடுகளுமே இறக்குமதியைக் குறைத்துக் கொண்டன; முன்பைப்போல ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளன.

இந்தியாவிலும் இப்போது இதே நிலைதான். ஊரடங்கு அமலான ஒரு வாரத்தில் 2020-2021 புதிய நிதியாண்டு பிறந்தது.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) சென்ற நிதியாண்டில் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 36.71 சதவிகிதமும், இறக்குமதி 52.41 சதவிகிதமும் குறைவாக உள்ளன என இந்திய அரசின் தரவுகள் காட்டுகின்றன.

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அந்த வகையில் தற்போதைய வர்த்தக உபரி ஏற்றுமதி அதிகரித்ததால் வந்ததல்ல; ஏற்றுமதியைவிட இறக்குமதி பெரிய அளவில் குறைந்துள்ளதால் வந்தது.

மிகவும் சிறிய வேறுபாடு - இரண்டாவது காரணம்

2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவுக்கு இருந்த வர்த்தகப் பற்றாக்குறையின் மதிப்பு 1,528 கோடி அமெரிக்க டாலர். அதாவது சென்ற ஆண்டு இருந்த வர்த்தகப் பற்றாக்குறையின் மதிப்பு, இந்த ஆண்டின் வர்த்தக உபரியைவிட சுமார் 20 மடங்கு அதிகம்.

18 ஆண்டுகளுக்கு முன், ஜனவரி 2002இல் இந்தியாவின் ஏற்றுமதிகளைவிட இறக்குமதி குறைவாக இருந்தபோதும் வர்த்தக உபரியின் மதிப்பு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர்தான். இதன் அன்றைய மதிப்பு சுமார் 49 கோடி ரூபாய்.

இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் 49 கோடி ரூபாய் என்பது நூலிழையைவிட மெல்லிய தொகை.

ஆனால், இப்போதைய வர்த்தக உபரி 6000 கோடி ரூபாய் என்பதால் பெரிய வேறுபாடு உள்ளது என்று கருத முடியாது.

ஏனெனில், இந்தியாவின் 18 ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார மதிப்பு, வளர்ச்சி ஆகியன இன்று இருக்கும் நிலையைவிடக் குறைவுதான்.

அன்றைய நிலையில் 49 கோடி என்பது சிறு தொகை என்றால், இன்றைய நிலையில் 6,000 கோடி ரூபாய் என்பதும் ஒப்பீட்டளவில் சிறு தொகைதான்.

அதனால், இன்னும் சில மாதங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இந்தியாவிலும், உலக அளவிலும் மீண்டும் பொருளாதாரம் பழைய நிலைக்கே திரும்பினால் அல்லது மீண்டும் பழைய நிலையை நோக்கி நகரத் தொடங்கினால், மீண்டும் இந்தியா ஏற்றுமதி செய்வதைவிட அதிகமா இறக்குமதி செய்யவே வாய்ப்பு அதிகம்.

இப்போது இருக்கும் வர்த்தக உபரி என்பது விதிவிலக்குதானே ஒழிய, விதியல்ல.

ஏற்றுமதி இறக்குமதியைவிட நிரந்தரமாக அதிகரிக்குமா?

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளுக்கு பரவுவதைத் தடுக்க சீனா தவறிவிட்டதாக உலக நாடுகள் பலவும் சீனாவை வெளிப்படையாகவே விமர்சித்துள்ளன.

இதனால் உண்டான அதிருப்தியால், சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்திக் கூடங்களை வேறு நாடுகளுக்கு மாற்ற விரும்புகின்றன; இந்த வாய்ப்பை இந்தியாவுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அந்த நிறுவனங்களை இங்கே முதலீடு செய்ய வைப்போம் என அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட இந்திய அரசின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளைச் சார்ந்துள்ள நிலையை மாற்றி தற்சார்பு பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் சமீப காலமாகப் பேசி வருகின்றனர்.

இவையெல்லாம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிகழ்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வலிமை பெருகும், இறக்குமதித் தேவை குறையும். அப்போது வர்த்தகப் பற்றாக்குறைதான் இயல்பான நிலைமை என்பது மாறி வர்த்தக உபரி நீடித்திருக்கும் சூழல் உண்டாகும்.

அது எப்போது நடக்கும், எப்படி சாத்தியமாக்கப்படும் என்பதற்கு இந்திய அரசின் கொரோனாவுக்கு பிந்தையகால நடவடிக்கைகள் பதிலாக அமையும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :