ஜெயலலிதாவின் வேதா இல்லம்: நினைவு இல்லமாக மாற்ற தடை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக்க தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டில் மறைந்த நிலையில், அவரது வீட்டை நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இது தொடர்பான அரசாணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஆனால், ஜெயலலிதாவின் வீடு அமைந்திருந்த போயஸ் கார்டன் பகுதியில் வசித்தவர்கள் கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர்.

கொரோனா பரவல் காலகட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும் உடனடியாக கையகப்படுத்தப்படும் பணிகள் துவங்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லாததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் குறுகிய சாலைகளைக் கொண்ட இந்தப் பகுதியில் ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாகவும் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளின் கருத்தைக் கேட்கவில்லையென்றும் கருத்துக் கேட்பு சரியாக நடக்கவில்லையென்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், இது தொடர்பான முயற்சிகள் 2017ல் இருந்தே நடந்துவருவதாகவும் கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கமே 2019ல்தான் துவங்கப்பட்டது என்றும் தமிழ்நாட்டில் ஏற்கனவே காமராஜர், வ.உ.சி. உள்ளிட்ட பலருக்கு நினைவில்லங்கள் இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எல்லா அறிவிப்புகளும் முறைப்படி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், ஜெயலலிதாவின் நினைவில்லம் தொடர்பாக ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச் உத்தரவளித்திருப்பதாகவும் அதனை மாற்றுவதற்கான தேவை ஏதும் எழவில்லையென்றும் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக்கவும் தடை ஏதும் இல்லையென்றும் உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :