You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விகாஸ் துபேயை என்கவுண்டர் செய்த தமிழகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: “விகாஸ் துபேயை என்கவுண்டர் செய்த தமிழகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி”
பிரபல வடமாநில ரௌடி விகாஸ் துபேவை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றது சேலத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரபல ரௌடி விகாஸ் துபே. இவரை கைது செய்ய காவல்துறையினர் சென்றபோது விகாஸ் துபே தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 8 காவல்துறையினரை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் தப்பி ஓடிய விகாஸ் துபேவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்து வந்த கார் விபத்தில் சிக்கியது. இதனால் விகாஸ் துபே காவல்துறையினரை தாக்கி விட்டு, தப்பி ஓட முயன்றபோது, அவரை சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.எஸ்.பி.) தினேஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்த என்கவுண்ட்டருக்கு தலைமை தாங்கிய, சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே மலையடிவாரத்தில் உள்ள லக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னதண்டா ஆகும். இவரது தந்தை பிரபு (வயது 63), விவசாயி. தாயார் சுபத்ரா (54). இவர்களது ஒரே மகன் தான் தினேஷ்குமார் (34).
இது குறித்து தினேஷ்குமாரின் தந்தை பிரபு பேசியபோது, “எனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து, மகனை படிக்க வைத்தேன். எங்களது கிராமத்துக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், எனது மகன் தொடர்ந்து விடுதியில் தங்கி படித்தான். எதிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பான். போலீஸ் பதவி என்னுடைய நேர்மையை மேலும் உயர்த்தும் என்று எங்களிடம் அடிக்கடி கூறுவான். பிரபல ரௌடியை அவன் சுட்டுக்கொன்றது தமிழகத்துக்கும், இந்த கிராமத்துக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது” என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி: “தாராவியில் கட்டுக்குள் கொரோனா: உலக சுகாதார நிறுவனம் பாராட்டு”
உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவியில் கொரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு மும்பையில் உள்ள தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா பாதிப்பு தீவிரமானதை அடுத்து பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்து வந்தனர்.
மொத்தம் 2.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுகொண்ட இந்த தாராவி குடிசைப் பகுதியில் 6.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையில் கொரோனா பாதிப்பு தீவிரமான நிலையில், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள
தாராவி பகுதியில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டதோடு, பொது முடக்கமும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் மூலம், அந்தப் பகுதியில் இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற காணொலி வழி செய்தியாளார்கள் சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரிசஸ் கூறியதாவது:
கொரோனா பரவல் மிகத் தீவரமாக இருந்தாலும், அதை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதற்கு உலகம் முழுவதிலுமிருந்து பல உதாரணங்கள் கிடைத்துள்ளன. இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா நாடுகளைத் தொடர்ந்து மும்பையின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான தாராவியையும் இதற்கு உதாரணமாகக் கூற முடியும். பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சையளித்தல் ஆகிய நடவடிக்கைகளை சமூக ஒத்துழைப்புடன் தீவிரமாக மேற்கொண்டால்தான் அந்த நோய் பரவல் சங்கிலியை உடைக்கவும், நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் முடியும் என்பதும் இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது என்று அவர் கூறினார்” என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி இந்து (ஆங்கிலம்): “மாநிலங்கள் பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்ய முடியாது” - மத்திய அரசு
பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவின்படி செப்டம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு படிப்பவர்களின் தேர்வுகளை அனைத்து மாநில அரசுகளும் நடத்திட வேண்டுமென்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலால் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் இன்னமும் திறக்கப்படவில்லை. பள்ளி மாணவர்கள் இறுதி தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக பல்வேறு மாநில அரசுகளும் அறிவித்துள்ளன.
இதேபோன்று, சில மாநில அரசுகள் பல்கலைக்கழக தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவிட்ருந்த நிலையில், மாநிலங்கள் கண்டிப்பாக வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு படிப்பவர்களின் தேர்வுகளை நடத்திட வேண்டுமென்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது.
இந்த நிலையில், செப்டம்பர் மாதத்திற்கு பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை என்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மத்திய உயர்கல்வித்துறை செயலாளர், “பள்ளிகள் மட்டுமே மாநில பட்டியலுக்குள் வருகின்றன. உயர்கல்வி பொதுப் பட்டியலில் உள்ளதால், பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுரைகளை மாநில அரசுகள் கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும். இல்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: