You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்புக்கு சித்த மருத்துவ பொடியை சோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா தடுப்புக்காக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட இம்ப்ரோ சித்த மருத்துவப் பொடியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து ஆகஸ்ட் 3ம்தேதி விளக்க அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கிளை நீதிமன்றத்தில், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் சித்த மருத்துவர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
பாளையம்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் சித்த மருத்துவர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில், அவர் உருவாக்கியுள்ள இம்ப்ரோ பொடியில் 66 விதமான மூலிகைகள் உள்ளதாகவும், இந்த பொடியை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பலவிதமான வைரஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்தாக செயல்படும் எனவும் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுப்பிரமணியனின் 30 ஆண்டு கால மருத்துவ அனுபவத்தை கருத்தில் கொண்டு அவரின் மருந்தை சோதனை செய்து பார்க்கவேண்டும் என தெரிவித்தனர். மேலும் கொரோனா காரணாமாக சுமார் 100 நாட்களாக மக்கள் ஊரடங்கு நிலையை பின்பற்றி, ''எதை தின்றால் பித்தம் தெளியும்'' என்பது போன்ற நிலையில் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டனர்.
''நவீன மருத்துவம் என்ற பெயரில் விற்கப்படும் மருந்துகளின் விலை அச்சமூட்டுவதாக உள்ளது. போதுமான ஆராய்ச்சி வசதிகள் இருப்பதால் மற்றும் பரிசோதனைகள் செய்யப்படுவதால், மற்ற மருத்துவ முறைகளை விட நவீன மருத்துவத்தை மக்கள் ஏற்கிறார்கள். ஆனால் அந்த மருத்துவம் பெரிய வியாபாரமாகவும் உள்ளது. சித்த மருந்துகளை ஆராய்ச்சி செய்வதற்கு போதுமான கவனம் கொடுக்கப்படவேண்டும்,'' என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கல்லீரலை பாதிக்கும் ஹெப்பாடிட்டீஸ் பி நோய்க்கு கீழாநெல்லி மூலிகையை அடிப்படையாக கொண்டு மாத்திரை தயாரிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்திய மருத்துவ முறைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்தால், சாதரண மக்களின் மருத்துவ செலவுகளை குறைக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- கோவாக்ஸின்: இந்தியாவில் தடுப்பு மருந்துகள் எவ்வாறு சோதிக்கப்படுகின்றன? - விரிவான தகவல்கள்
- குவைத்தில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தால் 8 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் ஆபத்து
- சென்னைக்கு மற்றுமொரு பேராபத்து: “மீண்டும் பெருவெள்ளம் ஏற்படலாம்” - எச்சரிக்கும் ஐஐடி ஆய்வு
- இந்த ஆண்டிற்குள் தடுப்பு மருந்து தயாரிக்கப்படுமா? – டிரம்பின் கருத்தை மறுக்கும் அதிகாரி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :