You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாய் கறிக்கு தடை விதித்த நாகாலாந்து: விலங்குகள் அமைப்புகள் வரவேற்பு
வட கிழக்கு இந்திய மாநிலமான நாகாலாந்தில் நாய்களின் இறைச்சியை இறக்குமதி செய்வது மற்றும் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விலங்குகள் நல உரிமை செயல்பாட்டாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நாய் இறைச்சி உண்பதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று பல காலமாகவே விலங்குகள் நல அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதையொட்டி நாகலாந்து மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாய்களுக்கு எதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்துவதில் இது ஒரு முக்கிய திருப்புமுனை என்று விலங்குகள் நல செயல்பாட்டாளர்கள் இந்த நடவடிக்கை குறித்து கூறுகின்றனர்.
ஆனால் அங்குள்ள பொது மக்களின் உணவுப் பழக்கத்தின் மீதான தாக்குதல் இது என்று சில சமூக செயல்பாட்டாளர்கள் இந்த முடிவு குறித்து விமர்சித்துள்ளனர்.
நாய்களின் இறைச்சியை பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஆனால் வட கிழக்கு இந்திய மாநிலங்களின் சில பகுதிகளில் நாய்க்கறி உண்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
"சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத வர்த்தக ரீதியாக இறக்குமதி செய்வது, அவற்றை விற்பனை செய்வது, நாய் இறைச்சி விற்பனைக்காக சந்தைகளை திறப்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்க நாகாலாந்து மாநில அரசு முடிவு செய்துள்ளது; மாநில அமைச்சரவையின் இந்த புத்திசாலித்தனமான முடிவை நான் பாராட்டுகிறேன்," என்று நாகாலாந்து மாநில தலைமைச் செயலாளர் டெம்ஜெம் டாய் வெள்ளிக்கிழமையன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ஆனால் இந்த முடிவை நாகாலாந்து அரசு எவ்வாறு செயல்படுத்த போகிறது என்பது குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இறைச்சி சந்தை ஒன்றில் சாக்குப்பையில் கட்டப்பட்ட நாய்களின் புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரல் ஆனதால் உண்டான கோபத்தின் காரணமாக நாகாலாந்து அரசு இந்த தடையை விதித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளியான கொடூரமான படங்களால் அதிர்ச்சி அடைந்ததாக பெடரேஷன் ஆஃ இந்தியன் அனிமல் புரொடக்சன் எனும் கூட்டமைப்பு கருத்து தெரிவித்திருந்தது.
அரசு உடனடியாக நாய் இறைச்சி விற்பனைக்கு தடை செய்ய வேண்டும் என்றும் அந்தக் கூட்டமைப்பு அப்போது கூறியிருந்தது.
பீட்டா உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் நல அமைப்புகளும் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ளன.
நாகாலாந்து மாநில அரசின் முடிவை இன்னொரு விலங்குகள் நல அமைப்பான ஹியூமேன் சொசைட்டி இன்டர்நேஷனல் வரவேற்றுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் நாய்கள் இறைச்சி தேவைக்காக நாகாலாந்து மாநிலத்திற்கு கடத்தி வரப்படுவதாகவும், அவை கட்டைகளால் அடித்து கொல்லப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இன்னொரு வடகிழக்கு மாநிலமான மிசோரம் நாய் இறைச்சி விற்பனைக்குத் தடை விதித்தது. இறைச்சிக்காக கொல்லப்படும் விலங்குகளின் பட்டியலில் இருந்து நாய்களை மிசோரம் மாநில அரசு நீக்கியது.
மிகவும் பரவலாக இல்லாவிட்டாலும் சீனா, தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நாய் இறைச்சியை உண்ணும் வழக்கம் இன்னும் தொடர்ந்து வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: