மதுரையில் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?

மதுரையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஜூன் 23ஆம் தேதி முதல் மதுரை நகரத்திலும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுரை நகரில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு மதுரை நகரிலும் அதனை ஒட்டியுள்ள பரவை உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளிலும் முழு ஊரடங்கை அறிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளிலும் பரவை டவுன் பஞ்சாயத்துப் பகுதியிலும் மதுரை கிழக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் திருப்பரங்குன்றம் பகுதியிலும் ஜூன் 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 30ஆம் தேதி நள்ளிரவுவரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின் போது சில அத்தியாவசியப் பணிகளுக்குத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

1. மருத்துவமனைகள், மருத்துவ சோதனைக்கூடங்கள், மருந்துக் கடைகள், ஆம்புலன்ஸ்கள், அமரர் ஊர்திகள், மருத்துவம் தொடர்பான பிற பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2. வாடகை டாக்ஸி, ஆட்டோ ஓட்டுவதற்கும் தனியார் வாகனங்களை இயக்குவதற்கும் அனுமதி கிடையாது. ஆனால், அவசர மருத்துவப் பணிகளுக்கு இவற்றைப் பயன்படுத்தலாம். இ- பாஸ் பெற்று மதுரைக்கு வரும் பயணிகளை ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லலாம்.

3. மாநில அரசுத் துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். தலைமைச் செயலகம், சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மை, மின்சாரத் துறை, உள்ளாட்சித் துறை போன்ற அத்தியாவசியத் துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

4. மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசியத் துறைகளில் தேவையான பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

5. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும்.

6. வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய இரு நாட்களில் மட்டும் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். ஏடிஎம் போன்றவை தொடர்ந்து இயங்கும்.

7. பொது விநியோகக் கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.

8. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்த நிவாரணங்கள் நியாயவிலைக் கடைகளின் பணியாளர்களால் நேரடியாக வீடுகளில் வழங்கப்படும்.

9. காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்படும்.

10. அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் பொதுமக்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் தங்கள் வீடுகளுக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள கடைகளிலேயே வாங்க வேண்டும்.

11. உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணிவரை அனுமதிக்கப்படும். ஆனால், பார்சல் விற்க மட்டுமே அனுமதி. தேநீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது. உணவுகளை வீடுகளுக்குச் சென்று அளிக்கும் சேவைகளுக்கு அனுமதி உண்டு.

12. அம்மா உணவகங்கள், கம்யூனிட்டி சமையலறைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

13. தொண்டு நிறுவனங்கள், என்ஜிஓக்கள் அரசின் அனுமதி பெற்று இயங்கலாம்.

14. அச்சு மற்று மின்னணு ஊடகங்கள், நீதிமன்றங்கள் ஆகியவை இயங்கலாம்.

15. பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து செயல்படும் பணியாளர்களை வைத்து கட்டுமானப் பணிகளை நடத்தலாம்.

16. இந்த காலகட்டத்தில் சரக்குப் போக்குவரத்திற்கும் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி உண்டு.

ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை அன்று கடுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் கடைகளைத் தவிர வேறு எந்தக் கடைகளும் திறக்கப்பட மாட்டாது. மருத்துவ வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனங்களும் இயங்கக்கூடாது என தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: