You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய - சீன வீரர்கள் மோதல்: "சீன ராணுவத்தினரோடு கைகலப்புக்கு அனுமதி தந்திருக்க கூடாது" - முன்னாள் தளபதி வி.பி.மாலிக்
எல்லையோரத்தில் சீனப் படையினரோடு கைகளால் சண்டை போடுவதற்கு இந்தியப் படையினருக்கு அனுமதி அளித்திருக்க கூடாது என கருத்துத் தெரிவித்துள்ளார் இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி வி.பி.மாலிக்.
இந்தியா - சீனா இடையே உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் பதற்றம் ஏற்படுவதற்கு எதிராளிதான் காரணம் என்று இரு நாடுகளும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டிக்கொள்கின்றன.
ஜூன் - 15/16 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையிலான மோதலில் தங்கள் தரப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தங்கள் தரப்பு இழப்பு குறித்து இதுவரை சீனா ஏதும் தெரிவிக்கவில்லை.
இரு தரப்பும் துப்பாக்கிகளால் சுட்டுக்கொள்ளவில்லை என்றும், நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதாகவும் அதனால் காயம் ஏற்பட்டே மரணங்கள் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கார்கில் போர்க்காலத்தில் இந்திய ராணுவத்துக்கு தலைமை வகித்தவரான முன்னாள் இந்தியத் தளபதி வி.பி.மாலிக்கிடம் இந்த எல்லைப் பதற்றம் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்று கேட்டார் பிபிசியின் நிதின் ஸ்ரீவத்சவா.
அதற்கு பதில் அளித்த ஜெனரல் மாலிக், "எல்லையோர சூழ்நிலை இப்போதைக்கு பதற்றமாகவே உள்ளது. ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ளும் நிலைமைக்குப் போகவும் வாய்ப்பிருக்கிறது. இந்த மரணங்களுக்குப் பிறகு எல்லையோரத்தில் இறுக்கம் கூடியிருக்கலாம். படையினர் தற்போது கோபத்தில் இருப்பார்கள். ராஜீயத் துறையினரும், அரசியல் மட்டத்தில் உள்ள தலைவர்களும் நிலைமையை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பிரச்சனைக்கு ராணுவத் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்று சில வாரங்களுக்கு முன்பே சொன்னேன்" என்றார் மாலிக்.
"தவறுகள் நடந்திருக்கின்றன. பல ஆண்டுகளாக இந்தியா இங்கே சுடுவதில்லை. ராணுவப் பேச்சுகள் நடக்கின்றன. பிறகு இந்தியா ஏன் கைகளால் சண்டை போட்டுக்கொள்ள அனுமதித்தது? கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளைப் பார்த்தால் இது போன்ற சூழ்நிலைகள் வெகுசில எல்லைச்சாவடிகளில்தான் ஏற்பட்டுள்ளன" என்று பிபிசியுடனான காணொளி உரையாடலில் தெரிவித்தார் மாலிக்.
"1967ல் இப்படி கைகளால் அடித்துக்கொள்வதற்கு அளிக்கப்பட்ட அனுமதி இந்தியா - சீனா இடையே பெரிய மோதலுக்கு வழிவகுத்தது. இருதரப்பும் 3 - 4 நாள்களுக்கு சுட்டுக்கொண்டன. இத்தகைய அனுமதி தரப்பட்டிருக்கக்கூடாது. எதிரியின் எல்லையோரச் சாவடிகளுக்கு அருகே செல்லும்போது உண்மையில் வெள்ளைக் கொடிகளை ஏந்திச் செல்லவேண்டும்" என்று தெரிவித்தார் அவர்.
"இரு தரப்பிலும் தவறு"
ஆயுதம் ஏந்தாத இந்திய ரோந்துப் படையினர் சீனர்களை நெருங்கிச் சென்றதாகவும், வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்து மரணங்கள் ஏற்பட்டதாகவும் கூறும் உறுதி செய்யப்படாத ஊடகத் தகவல்களுக்கு பதில் அளித்த மாலிக், "இருதரப்பும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆயுதம் எடுத்துச் செல்லக்கூடாது என்று ஒப்பந்தம் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், சீனப்படையினர் மரக்கட்டைகளில் கற்களைக் கட்டி எடுத்துவந்தனர் என்று கேள்விப்படுகிறேன். எப்படி இருந்தாலும் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தவறு. இது போன்ற உணர்ச்சிபூர்வமான பிரச்சனையைக் கையாள்வதில் இரு தரப்பும் தவறிழைக்கின்றன" என்று குறிப்பிட்டார் மாலிக்.
பதற்றத்தை தணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பயனளிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்கப்பட்டது.
"சீனாவுடனான நம்முடைய உறவுகள் திருப்புமுனையை அடைந்துள்ளன என்பதை ஊடகங்களிலும், பிற இடங்களிலும் பார்க்க முடியும். 1962ம் ஆண்டினைப் பற்றி மக்கள் பேசத் தொடங்கியுள்ளார்கள். தாங்கள் சொல்வதைச் செய்வதில் சீனர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் சீனாவுடன் பேசுவதில் பயனில்லை. இந்தியாதான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி மிகப் பெரிய அளவில் ராணுவக் குவிப்பு நடக்கக் கூடும்" என்று பதில் அளித்தார் மாலிக்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: