மருத்துவக் கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட வேண்டிய 50 சதவீத இடங்களை வழங்க மத்திய அரசு மறுத்துவருவதாகவும் அதனை செயல்படுத்த உத்தரவிட வேண்டுமென்றும் கோரி தி.மு.க., அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன.

மருத்துவக் கவுன்சிலின் விதிகளின் படி ஒவ்வொரு மாநிலமும் இளநிலை மற்றும் பட்டயப் படிப்புகளில் 15 சதவீத இடங்களையும் முதுகலை படிப்புகளில் 50 சதவீத இடங்களையும் மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்குகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இடங்களை நிரப்பும்போது அந்தந்த மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி அவற்றை நிரப்ப வேண்டுமென மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 69 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அகில இந்திய அளவில் இடங்களை நிரப்பும்போது, மாநில இட ஒதுக்கீடு கொள்கையின்படி இடங்கள் நிரப்பப்படுவதில்லை என தி.மு.க. தொடர்ந்திருந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.

மாநில அரசுகள் அளிக்கும் இடஒதுக்கீடு ஒருபுறமிருக்க, மத்திய அரசின் '2006ஆம் ஆண்டின் மத்திய கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம்' கூறுவதுபடி 27 சதவீத இடஒதுக்கீடு கூட அளிக்கப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆகவே, அகில இந்தியப் பிரிவில் 2019ஆம் ஆண்டுக்கான மருத்துவ முதுகலை இடங்களை நிரப்புவது தொடர்பான முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கின் முடிவு தெரியும்வரை மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் இந்த ஆண்டு இளநிலை நீட் தேர்வுகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு கோரப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கிய இடங்களை நிரப்புவது தொடர்பாக மே 9 ஆம் தேதி பதிப்பிக்கப்பட்ட முடிவுகளை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் மாநில அரசு ஒதுக்கும் இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட வேண்டுமென்றும் கோரப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த வழக்கில் இணைந்திருந்தன. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி எல். நாகேஸ்வரராவ், "தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்படோருக்காக எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்திருக்கின்றன. இது அசாதாரணமானது. ஆனால், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையில்லையென உச்ச நீதிமன்றம் கருதுகிறது" என்று குறிப்பிட்டார்.

ஆனால், மனுதாரர்கள் விரும்பினால் உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து மனுதாரர்கள் தங்கள் மனுக்களை விலக்கிக்கொண்டனர்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், "ஒரு விஷயம் அடிப்படை உரிமையில்லையென்றால் நீதிமன்றம் விசாரிக்காதா? இந்த விவகாரத்தில் பிற்படுத்தப்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அது அப்படியே தொடரவேண்டுமென நீதிமன்றம் விரும்புகிறதா?" எனக் கேள்வியெழுப்புகிறார்.

மத்திய அரசு ஒரு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை வைத்திருக்கிறது, மாநில அரசு ஒரு பட்டியலை வைத்திருக்கிறது. எந்தப் பட்டியலின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பதுதான் குழப்பம் என்கிறது மத்திய அரசு. ஆனால், எந்தப் பிரிவிலும் வராதவர்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தவறாமல் வழங்குகிறது. யார் பிற்படுத்தப்பட்டோர் என்று தெரியாத நிலையில், அதைத் தவிர்த்த ஜாதியினர் யார் என்பது மட்டும் எப்படித் தெரிந்தது எனக் கேள்வியெழுப்புகிறார் ராஜேந்திரன்.

இதற்கிடையில், தி.மு.கவின் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் டிகே.எஸ். இளங்கோவன் வழக்கறிஞர் வில்சன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிட வேண்டுமெனக் கோரியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: