You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
TN SSLC தேர்வுகள் 2020: ஏன் இவ்வளவு பிடிவாதம்? - அரசு மீது கல்வியாளர்கள் காட்டம்
- எழுதியவர், காயத்ரி அகல்யா
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசாங்கம் உறுதியாக உள்ளது.
இது தொடர்பாக பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே ஜூன் 1ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் இதன் பிறகும் கொரோனா தொற்று அதிகம் பரவிய காரணத்தால், தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்கள் தயாரிக்கும் பணிகளும் தொடங்கிவிட்டன. ஆனால் தற்போது மீண்டும் தேர்வுகள் நடத்தப்படுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாணவர்களின் "உயிருடன் விளையாடாதீர்கள்" என குறிப்பிட்டு அரசைக் கண்டித்தார். மேலும் தேர்வு நடத்துவதில் ஏன் அரசாங்கம் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாகவும், தேர்வு நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் கல்வியாளர் ராஜகோபாலனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
''பிளேக் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன''
70 ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் நோய் அதிகம் பரவியபோது, ஒரு சில இடங்களில் பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. ஆனால் தற்போது எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நடத்துவதில் பிரச்சனை உள்ளது. முன்னொரு காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் கல்லூரி படிப்பை தேர்ந்தெடுக்க முடியும். தற்போது அந்த நிலை இல்லை. எனவே மிகவும் மென்மையான பருவத்தில் உள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தியாக வேண்டும் என ஏன் அரசாங்கம் பிடிவாதம் பிடிக்ககிறது என கல்வியாளர் ராஜகோபாலன் கேள்வி எழுப்புகிறார்.
''எஸ்.எஸ்.எல்.சி என்ற தேர்வில் பாஸ் ஆகிறார்களா அல்லது ஃபெயில் ஆகிறார்களா என்பது பிரச்சனை இல்லை. உயர்நிலை பள்ளி படிப்பை முடித்துவிட்டார்கள் என்பதுதான் அதன் பொருள். Secondary School Leaving Certificate என்ற அர்த்தத்தையே எஸ்.எஸ்.எல்.சி கொண்டுள்ளது. எனவே பள்ளியில் இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்களை கூட்டி சராசரி மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்கிவிடலாம்'' என்றும் கல்வியாளர் ராஜகோபாலன் குறிப்பிடுகிறார்.
மூன்று மாதங்களாக பள்ளிக்கே செல்லாமல், பள்ளியை பார்க்காமல் புதிதாக பள்ளிக்கு சென்று எப்படி தேர்வு எழுத முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது.
வீடு இன்றி, குடும்பத்தினரின் ஆதரவு இன்றி தமிழ்நாட்டில் பல மாணவர்கள் பள்ளிக்கு வந்து கல்வி கற்கின்றனர். அவ்வாறு ஆதரவு இன்றி கல்வி கற்கும் மாணவர்கள் இவ்வாறு தொற்று பரவும் நேரத்தில் எப்படி தேர்வுக்கு வரமுடியும். அவர்களின் புத்தகம் எங்கிருக்கிறது, அவர்கள் தேவையான உணவு உட்கொள்கிறார்களா என்பதையெல்லாம் அதிகாரிகள் வீடுவீடாக சென்று பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்திருந்தால் இப்படியான நெருக்கடி நிலையில் தேர்வுகளை ஏற்பாடு செய்திருக்கமாட்டார்கள் என்கிறார் கல்வியாளர் ராஜகோபாலன்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
தேர்வு நடத்துவதில் தமிழக அரசாங்கத்திற்கு நல்ல அனுபவம் உண்டு - அந்த அனுபவம் எங்கே?
2011ஆம் ஆண்டு சமச்சீர்க் கல்வி முறையை அமல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. அப்போது பாட புத்தகங்களே இல்லாமல் மூன்று மாதம் பள்ளிகள் இயங்கின. ஆனாலும் மார்ச் மாதம் சரியான நேரத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
2004ஆம் ஆண்டு சுனாமி வந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இவ்வாறு பல நெருக்கடி நிலையிலும் தேர்வுகள் நடத்துவதை சரியான முறையில் கையாண்ட தமிழகம் தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக எடுத்த முடிவு மிகவும் ஆபத்தானது என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
10ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்த 11ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடப்பிரிவுகளை அவர்கள் தேர்வு செய்யலாம். ஆனால் அனைத்து மாணவர்களும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பாடப்பிரிவை தேர்வு செய்கிறார்களா என்ற கேள்வி உள்ளது. விருப்பத்தின் அடிப்படையிலும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவை தேர்வு செய்வார்கள். 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவன் 12ஆம் வகுப்பு தேர்வில் அதே கணித பாடத்தில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த கதைகள் தமிழகத்தில் உள்ளன. எனவே இம்முறை தேர்வுகள் நடத்தப்படாமல், மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பாட பிரிவுகளை தேர்வு செய்ய அனுமதி வழங்கலாம்.
எனவே இவ்வாறான அசாதாரண சூழ்நிலையில் அரசாங்கம் அசாதாரண முடிவுகள் மேற்கொள்ளலாம். ஆனால் அந்த முடிவுகள் யாரையும் பாதிக்கக்கூடாது. தற்போது தேர்வுகள் நடத்தியே ஆக வேண்டும் என தமிழக அரசாங்கம் எடுத்த முடிவால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.
நோய் தொற்று பரவும் இந்த நேரத்தில் குழந்தைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க வேண்டும் எனவும் அரசாங்கம் அறிவுறுத்துகிறது. அதே அரசாங்கம் தொற்று பரவும் இந்த நேரத்தில் மாணவர்கள் கட்டாயம் வீட்டை விட்டு வெளியே வந்து தேர்வு எழுதவேண்டும் என்றும் ஆணையிடுகிறது. மேலும் தேர்வுகள் குறித்த முடிவுகளில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே இந்த மாற்றங்களால் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இந்த குழப்பத்தில் மாணவர்கள் படித்து சரியான நேரத்திற்கு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதுவது சாத்தியமில்லை என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
அரசாங்கம் ஏன் மாணவர்களுக்கு என புதிய போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தது?
மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுதவேண்டாம். அவரவர் தங்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என அறிவித்தபிறகு ஏன் புதிய அரசாங்கப் பேருந்துகளை தேர்வுக்காக இயக்கவேண்டும்? எனவே மிக தொலைவில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என அரசாங்கத்திற்கு தெரிகிறது. அவ்வாறு பல பகுதிகளில் இருந்து ஒரு பள்ளிக்கு அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் வந்து ஒரே இடத்தில் 4 மணிநேரம் நேரம் செலவழிப்பதால் நோய் தொற்று அதிக எண்ணிக்கையில் பரவாதா? என பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்புகிறார்.
"கொரோனாவை சின்னம்மை போல கருத வேண்டாம்"
நோய்க்கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு தனி வேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் தனி அறையில் தேர்வு எழுத வழிவகை செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகையில், "சின்னம்மை நோய் போன்று கொரோனா வைரஸை அரசாங்கம் அணுகுகிறது. இரண்டும் வைரஸ் தொற்றுதான். ஆனால் அதன் பாதிப்பும் அபாயகட்டங்களும் வெவ்வேறாக உள்ளன. கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் பரவிய வைரசுக்கும் தற்போது பரவும் வைரசுக்கும் வித்தியாசம் உள்ளது என பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர் தனி அறையில் அமர்ந்தாலும் இதுகுறித்து அறிந்த மற்ற மாணவர்களின் கவனம் சிதறும்; தேர்வில் கவனம் செலுத்த முடியாது" என்று அவர் கூறுகிறார்.
"சின்னம்மையால் பாதிக்கப்பட்ட மாணவர் வேப்பிலையை அருகில் வைத்துக்கொண்டு, மஞ்சள் நீரில் குளித்துவிட்டு வந்து தேர்வு எழுத பெற்றோர்கள் உதவ முடியும். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு பெற்றோர்கள் எந்த விதத்திலும் உதவ முடியாது. அவர்களும் ஏதோ ஒரு மருத்துவமனையிலோ வீட்டிலோ தனிமைப்படுத்தப்பட்டுதான் இருப்பார்கள். தனி அறை வழங்குவது வேன் வசதி செய்து தருவது மிகச் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கையாக கருத்தில்கொள்ள முடியாது" என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- கொரோனா பாதிப்பில் சீனாவை விஞ்சிய மகாராஷ்டிரா - சர்வதேச நிலவரம் என்ன?
- இந்தியாவில் இன்று முதல் திறக்கப்படும் வழிபாட்டுதலங்கள், ஷாப்பிங் மால்கள் - சில முக்கிய தகவல்கள்
- 'வந்தே பாரத்' விமானங்களின் கட்டணம் உயர்வு: வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்
- ''அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறிச் செல்கிறார் டிரம்ப்'' - குடியரசு கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: