You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை வழக்கு: மீண்டும் வெடிக்கும் எதிர்ப்பு
சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கை ஆன்லைன் விசாரணையில் நடத்தக்கூடாது எனத் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜூன் 4-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.
தமிழக அரசின் நகர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் விவசாயிகள் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் சூரியபிரகாஷிடம் பேசியபோது, தற்போது இந்த வழக்கு ஆன்லைன் விசாரணை மூலமாக நடைபெறக்கூடாது என விவசாயிகள் கோரியுள்ளனர் என்றார்.
''கொரோனா ஊரடங்கு காரணமாக உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் முறையில் விசாரணை நடந்துவருகிறது. ஆனால் தங்களது வாதங்களை எடுத்துரைக்க ஆன்லைன் முறை ஏற்றதாக இருக்காது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவானது புதிய மனு அல்ல. ஏற்கனவே இந்த வழக்கு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தது என்பதால் பட்டியலில் சேர்ப்பதற்காகத் தேதி கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த முடிவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊரடங்கு முடிந்த பின்னர் நேரடியாக விசாரணை நடத்தவேண்டும் என கோரியுள்ளனர்,'' என்றார்.
சேலம்- சென்னை இடையே பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசும் தமிழக அரசும் முடிவு செய்திருந்தது.
சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை வழியாகக் காஞ்சிபுரம் வரை 277.3 கிலோமீட்டர் எட்டு வழிச்சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்காக, 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது.
இச்சாலை அமையவுள்ள இடத்தில் பல்லாயிரக் கணக்கான விவசாயிகளின் விளைநிலம் உள்ளது என்றும் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பல கட்டங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர்.
எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் என பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த ஏப்ரல்2019ல் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த திட்டத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்காமல், காவல்துறையினர் உதவியுடன் நிலத்தைக் கையகப்படுத்திய நடவடிக்கைதவறு என்றும் எட்டுவழிச்சாலைத் திட்டம் தொடர்பான அரசாணையை உடனடியாக ரத்து செய்வதுடன், கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் முன்பிருந்த நிலையின்படிஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசும் அந்தவழக்கில் இணைக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது ஆன்லைன் மூலம் நீதிமன்றசெயல்பாடுகள் தொடங்கியுள்ளதால், அடுத்த நகர்வை தமிழக அரசு எடுத்துவைத்துள்ளது.
தமிழக அரசின் முடிவை அடுத்து, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்புதெரிவிக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்த்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியும், கொரோனா ஊரடங்கு நிலை கருதியும், இந்த வழக்கை தற்போதுவிசாரிக்கக்கூடாது என்றும் ஊரடங்கு முடிந்த பின்னர், நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.
அதேபோல அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன், கொரோனா ஊரடங்கினால் மிகுந்த நட்டத்தை விவசாயிகள்சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இன்றைய நிலையில் எந்தவித உதவியையும் செய்யாத மத்திய அரசு, அவர்களுடைய நிலங்களை மீண்டும் கையகப்படுத்தும்முயற்சியில் இறங்கியுள்ளது என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், ரூ.10,000 கோடி சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றி, தமது சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொள்ள 'தேசியமுக்கியத்துவம் வாய்ந்த திட்டம்' என பா.ஜ.க.- அ.தி.மு.க. அரசுகள் கை கோர்த்துள்ளன கடுமையாக விமர்சித்துள்ளார்.
''சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைப் பாதிக்கும் இந்தத் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து,
"மேல்முறையீடு செய்ய மாட்டேன்" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குறுதியளித்தார். ஆனால், தமிழகத்தில் 39க்கு 38 தொகுதிகளிலும் - குறிப்பாக, இந்தத் திட்டத்தின் பாதிப்பு உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியை அ.தி.மு.க. சந்தித்தது.
உடனே அந்த வாக்காளர்களைப் பழிவாங்க சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்,''என தனதுகண்டனத்தை மு.க ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: