You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளாவில் கர்ப்பிணி யானை பலி: அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்த கொடூரம்
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்தி
கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை கர்ப்பமாக இருந்த யானை உட்கொண்டதால், அந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அடையாளம் அறியப்படாத நபர்களின் இந்தக் கொடூரச் செயலுக்கு உள்ளான, அந்த யானைக்கு சுமார் 14-15 வயது இருக்கும் என கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை என்றும் பிறகு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த யானையின் வாய் மற்றும் தும்பிக்கை பகுதி மூன்று நாட்களாக நீருக்குள்ளேயே இருந்துள்ளது.
"அந்த யானைக்கு எங்கு அடிபட்டது என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை. வலி தெரியாமல் இருக்க, அந்த யானை நிறைய தண்ணீர் குடித்திருக்கும் என்று நினைக்கிறேன். வாயின் இரு பக்கங்களிலும் பல காயங்கள் இருந்தன. பற்கள் இருக்கவில்லை," என்கிறார் இதுகுறித்து பிபிசி இந்தி சேவையிடம் பேசிய, சைலன்ட் வேலி தேசிய பூங்காவின் வனக் காப்பாளர் சாமுவேல்.
இந்த யானை தொடர்பாக வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பிறகுதான் இந்த முழு சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்தது.
வலியோடு அந்த யானை அருகில் உள்ள கிராமத்தின் வீதிகளில் உதவிக்காக சுற்றி திறிந்தபோது கூட, ஒரு மனிதரையும் அது தாக்கவில்லை என்று உணர்ச்சிபூர்வமாக அவர் எழுதியிருந்தார்.
அந்த கர்ப்பிணி யானையில் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.
"வலியுடன் தண்ணீரில் நின்று கொண்டிருந்த யானையை மீட்க, விரைவுக்குழுவோடு, இரண்டு கும்கி யானைகளையும் பயன்படுத்தினோம். அங்கிருந்து யானையை வெளியே கொண்டுவந்தால், அறுவை சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், அநத் யானை அதற்கு ஒத்துழைக்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு தயார் செய்யும் முன் இறந்துவிட்டது," என பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பிரிவு வன அலுவலர் சுனில் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
மே 27ஆம் தேதியன்று தண்ணீரில் நின்றபடியே அந்த யானை இறந்திருக்கிறது. பின்னர் அதன் உடல் அருகில் உள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
அப்போதுதான் அந்த யானை கர்ப்பமாக இருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
பின்னர் அந்த யானை புதைக்கப்பட்டு, அதற்கு இறுதி மரியாதையையும் அதிகாரிகள் செலுத்தினர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய சாமுவேல், இதற்கு யார் காரணம் என்பதை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் மனித - விலங்கு மோதல் சம்பவங்கள் இதற்கு முன்னரே பல முறை நிகழ்ந்திருந்தாலும், இப்படி ஒரு கொடூரமான நிகழ்வு நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: