உம்பானுக்கு அடுத்த அச்சுறுத்தல் நிசர்கா மற்றும் பிற செய்திகள்

இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இரு வாரங்களுக்கு முன்பு கரையைக் கடந்த உம்பான் புயலால், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் சுமார் 85 பேர் உயிரிழந்த நிலையில் இந்தப் புயல் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இன்று கரையைக் கடக்கிறது.

நிசர்கா புயல் கரையைக் கடப்பதையொட்டி மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒருவேளை மும்பை பகுதியில் நிசர்கா இன்று கரையைக் கடந்தால், சுமார் நூறு ஆண்டுகளில் மும்பையை தாக்கும் முதல் புயலாக நிசர்கா இருக்கும்.

இந்தியாவிலேயே அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நகரமாக உள்ள மும்பையில், நிசர்கா உண்டாக்கும் மழையால் மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் பரவலாம் என்று அஞ்சப்படுகிறது.

'பிரபாகரனை பெரிதும் மதிக்கிறேன்' - சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் இலங்கை ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.

இலங்கையின் பிரபல செய்தி ஊடக நிறுவனமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் குறித்து அவதூறு காணொளி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பற்றி அவதூறாகப் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜிஎஸ்விம் மருத்துவக்கல்லூரியின் முதல்வர், அந்த காணொளி மார்பிங் செய்யப்பட்டது என தற்போது கூறியுள்ளார்.

சில பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஜிஎஸ்விம் மருத்துவக்கல்லூரியின் முதல்வர் மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானி பேசும் காணொளி சமீபத்தில் வைரல் ஆனது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: அமைதியான போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், போலீஸ் பிடியில் இருந்தபோது கழுத்து நெறித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் ஏழாவது நாளாக தொடர்கின்றன.

பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும் அதை மீறி ஏராளமான மக்கள் இந்த மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றனர்.

தமிழகத்தில் எவ்வளவு கொரோனா பரிசோதனை கிட்கள்?

தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படும் பரிசோதனை கிட்கள் குறித்து மு.க. ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கமளித்துள்ளார். தமிழ்நாட்டில் நோயாளிகளுக்கு பெரிய அளவில் வென்டிலேட்டர்கள் தேவைப்படவில்லையென்றும் அவர் கூறினார்.

சென்னையில் கொரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர், அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: