You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரயில், விமானப் போக்குவரத்து இந்தியாவில் மீண்டும் தொடங்குகிறது - கொரோனா வைரஸ் ஊரடங்கால் கட்டுப்பாடுகள்
இந்தியாவில் ரயில் மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. அவை குறித்து மத்திய அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் இயக்கப்படவுள்ள 200 சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்த நிலையில் இதுதொடர்பாகவும், மற்ற ரயில் சேவைகள் தொடர்பாகவும் இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களை தொகுத்தளிக்கிறோம்.
(விமானப் போக்குவரத்துக்கான விதிமுறைகள் செய்தியின் பிற்பாதியில் உள்ளன.)
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துடடான ஆலோசனைக்கு பிறகு ஜூன் 1ஆம் தேதி இந்தியாவில் பகுதியளவு ரயில் சேவைகளை தொடங்குவதற்கு ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
- ஷ்ரமிக் ரயில்களை விடுத்து சொந்த ஊர் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்தவர்கள் இந்த சிறப்பு ரயில்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- கடந்த மே 1ஆம் தேதி முதல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்க இயக்கப்பட்டு வரும் ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் மற்றும் மே 12ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் குளிர்சாதன வசதி கொண்ட சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயங்கும்.
- வழக்கமாக இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான பயணிகள் ரயில்களும் மறு அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து ரத்து செய்யப்படுகிறது.
- இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பயணங்களுக்கு அனுமதி கிடையாது.
- மேலும், தட்கல், பிரீமியம் தட்கல் முறைகளிலும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.
- வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். சாதாரண (GS) ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கு முன்பதிவு செய்பவர்களுக்கு இரண்டாம் தர அமர்ந்து செல்லும் (2S) ரயில் பெட்டிக்கான கட்டணம் வசூலிக்கப்படும். ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் இருக்கை ஒதுக்கப்படும்.
- இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவோ அல்லது திறன்பேசி செயலி வாயிலாகவோ மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்ய முடியாது.
- இந்த சிறப்பு ரயில்களில் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை மட்டுமே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
- பயணம் உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டுகளை கொண்டுள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
- ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 90 நிமிடங்களுக்கு முன்னதாக பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வர வேண்டும்.
- பயணிகள் முகக்கவசங்கள்/ முக மறைப்புகளை அணிந்திருப்பது கட்டாயம்.
- பயணிகள் தங்கள் சொந்த உணவு மற்றும் குடிநீரை எடுத்துச் செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
- அனைத்து பயணிகளும் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
- பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு முன்னர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நோய் அறிகுறியற்ற பயணிகள் ரயிலில் நுழைய / ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.
- ரயிலில் பயணிக்க மறுப்பு தெரிவிக்கப்படும் பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய முழு பயணச்சீட்டு கட்டணமும் திரும்ப அளிக்கப்படும்.
- இந்த சிறப்பு ரயில்களில் திவ்யாங்ஜன் சலுகையின் நான்கு பிரிவுகளுக்கும் 11 வகை நோயாளிகளுக்கும் சலுகை விலையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தாங்கள் இறங்கும் மாநிலம்/ யூனியன் பிரதேச அரசின் சுகாதார நெறிமுறைகளை பயணிகள் கடைபிடிக்க வேண்டும்.
- ரயிலுக்குள் துணி, போர்வைகள் மற்றும் திரைச்சீலைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது.
உள்நாட்டு விமான சேவை - புதிய நடைமுறை என்ன?
- இந்தியாவில் வரும் மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி அளித்திருந்த நிலையில், விமான சேவைக்கான வழிகாட்டுதலை இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வெளியிட்டுள்ளது.
- முன்னதாக, வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
- "மே 25 முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து துவக்கப்படும். இதற்காக அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்திருந்தார்.
- இந்த நிலையில், தற்போது விமான சேவைகளின் இயக்கம் தொடர்பாக இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் முக்கிய தகவல்களை தொகுத்தளிக்கிறோம்.
- விமான சேவை பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் சரியான பொது போக்குவரத்து மற்றும் தனியார் டாக்ஸிகள் கிடைப்பதை மாநில அரசுங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
- நெரிசலைத் தடுக்கவும், சமூக விலகலை பராமரிக்கவும் போக்குவரத்து காவல்துறையினர் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினருடன் ஒருங்கிணைந்து நகர போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிடங்களை கண்காணிக்க வேண்டும்.
- விமான பயணிகள் மற்றும் ஊழியர்கள் விமானம் நிலையம் வருவதற்கும் அங்கிருந்து வெளியே செல்வதற்கும் தங்களது தனிப்பட்ட வாகனங்களையோ அல்லது குறிப்பிட்ட சில அங்கீகரிக்கப்பட்ட டாக்ஸி சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் மற்றும் அதிகபட்சம் நான்கு மணிநேரத்திற்கு முன்னதாகவே பயணிகள் விமான நிலையத்துக்கு வந்துவிட வேண்டும்.
- அனைத்து பயணிகளும் முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை அணிந்திருப்பது அவசியம்.
- அனைத்து பயணிகளும் தங்களது திறன்பேசிகளில் 'ஆரோக்கிய சேது' செயலிகளை பதிந்திருப்பது கட்டாயம். இதை விமான நிலையங்களின் முகப்பு பகுதியில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படையினர் நேரடியாக உறுதி செய்வார்கள். எனினும், 14 வயதிற்குட்பட்டவர்கள் இந்த செயலியை பதிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே விமான பயணிகள் தங்களது உடல் வெப்பநிலையை அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இடத்தில் கட்டாயம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.
- ஆரோக்கிய சேது செயலியில் 'பச்சை' நிறம் காணப்படாதவர்களுக்கு விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது.
- சமூக விலகலை உறுதிசெய்யும் வகையில் பயணிகளுக்கு விமானத்தில் இருக்கைகள் ஒதுக்கப்படும்.
- விமான நிலையத்தில் பயணிகள் தங்களது பொருட்களை ஒப்படைக்கும் இடத்தில் போதுமான அளவு பணியாளர்கள் இருப்பதை விமான சேவை நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
- அனைத்து விமான பணியாளர்களுக்கும் கிருமி நாசினிகள் உள்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும்.
- விமான நிலைய கட்டடத்தின் அனைத்து இடங்களும் அடிக்கடி தூய்மைப்படுத்தப்பட்டு, கிருதி நீக்கம் செய்யப்படும்.
- விமான நிலையத்தின் முனையத்தில் செய்தித்தாள்கள்/ இதழ்கள் வழங்கப்படமாட்டாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்