கொரோனா வைரஸ்: தமிழகத்திற்குள் பயணம் செய்பவர்கள், பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு என்னென்ன விதிமுறைகள்?

தமிழகத்திற்குள் பயணம் செய்பவர்கள், தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்து உள்ளே வருவோர் உள்ளிட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்பவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா சோதனை செய்யப்படும்.

வேறு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்து வருபவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும். சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்களுக்கு தொற்று இல்லாவிட்டால், அவர்கள் தில்லி, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அரசின் தனிமைப்படுத்தும் மையத்தில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். அறிகுறிகள் இல்லாவிட்டால் வீட்டிலேயே 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அனுப்பப்படுவார்கள். ஆனால், வீட்டில் வசதி இல்லாவிட்டால், அரசின் முகாம்களிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள்.

பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு நோய்த் தொற்று இல்லையென்றால், 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுப்பப்படுவார்கள்.

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும். அவர்களுக்கு நோய்த் தொற்று இருந்தால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். இல்லையென்றால் 7 நாட்கள் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். ஏழு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சோதனை செய்யப்படும். அதிலும் நோய்த் தொற்று இல்லையென்றால் வீட்டிலோ, அரசு மையங்களிலோ 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இதில் சில பிரிவினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மிக மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர், குடும்ப உறுப்பினரின் இறப்பிற்காக வந்துள்ளவர், கர்ப்பிணிப் பெண்கள், 75 வயதுக்கு மேற்பட்ட, உதவி தேவைப்படும் முதியவர்கள் ஆகியோருக்கு உடனடியாக சோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், சோதனை முடிவுகளில் அவர்களுக்கு நோய் இருப்பதாகத் தெரிந்தால், அவர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினரின் இறப்புக்காக வந்துள்ளவர்களைப் பொறுத்தவரை, அதே விமானம் அல்லது வாகனத்தில் இறந்தவரின் உடல் இருந்தால் மட்டுமே இந்தச் சலுகை அளிக்கப்படும்.

வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களின் விவரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர், ஆணையர் ஆகியோரிடம் இருக்க வேண்டும். தனிமைப்படுத்தும் முகாமை விட்டு வெளியேறுவோர், ஈ- பாஸ் இணைய தளத்தின் மூலம் பாஸைப் பெற வேண்டுமென அரசு கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: