கொரோனா வைரஸ்: நம்பிக்கை தரும் டெல்லியின் நிலை, அதிகரிக்கும் ஆய்வகங்கள் - அண்மைய தகவல்கள் Corona India Updates

உலகை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது இந்தியாவில் இதுவரை மொத்தம் 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (மார்ச் 24) மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 65 வயதான நபர் உயிரிழந்தார். இவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் வந்தவர். கஸ்துர்பா மருத்துவமனையில் இந்த நபர் உயிரிழந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கோவிட்-19 குறித்து நாட்டு மக்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு பிரதமர் மோதி பேச உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கடந்த மார்ச் 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி இரவு நாட்டு மக்களுடன் உரையாற்றினார்.

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள மார்ச் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அப்போது மோதி தெரிவித்தார்.

''இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளோர், போக்குவரத்து, உணவு, ஊடகம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் ஊரடங்கு நடக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் கைத்தட்டியோ, தங்கள் வீட்டின் அழைப்பு மணிகளை அடித்தோ நன்றி தெரிவிக்கவேண்டும்'' எனவும் மோதி அந்த உரையில் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உத்தரவு மல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நாட்டில் பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 24) மாலை ஆறு மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை ஆறு மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென மாநில அரசு அறிவித்துள்ளது. நாளை மாலை 6 மணியிலிருந்து மார்ச் 31 வரை சிக்கிம் மாநிலம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றிரவு பிரதமர் மோதியின் உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது.

கோவா மாநிலம் முழுவதும் இன்று இரவு முதல் மார்ச் 31 வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது என அம்மாநில முதல்வர் பிரமோத் சவாந்த் கூறியுள்ளார். 

இதனிடையே, அனைத்து மாநிலங்களிலும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் கொரோனா வைரஸ் குறித்து செய்திகள் வெளியிடுவதை அனுமதிக்க வேண்டும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

டெல்லி நிலைமை

கடந்த 40 மணி நேரத்தில் யாரும் புதிதாக கொரோனாவால் டெல்லியில் பாதிக்கப்படவில்லை என டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அனுமதிக்கப்பட்ட 53 நோயாளர்களில் 23 பேர் மட்டுமே இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர், "இது நல்ல சேதிதான். அதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டிய தேவையில்லை. கொரோனவிற்கு எதிரான போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. எண்ணிக்கை எப்போது வேண்டுமானாலும் உயரலாம். எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என அவர் கூறி உள்ளார்.

கட்டட தொழிலாளர்களுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் என்றும், இரவு தங்குவதற்காக தங்குமிடங்களை அதிகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.

12,000 மாதிரிகள் பரிசோதனை

இந்திய மருத்துவ ஆய்வு மன்ற கொரோனா பரிசோதனை குழுவுக்குள் 118 அரசாங்க ஆய்வகங்கள் இணைக்கப்படுகிறது.

இதன் மூலமாக ஒரு நாளுக்கு 12,000 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம்.

22 தனியார் பரிசோதனை மையங்களும், 15,500 மாதிரி சேகரிப்பு மையங்களும் இந்திய மருத்துவ ஆய்வு மன்றத்தில் இப்போது வரை பதிவு செய்துள்ளன.

முடிந்தது ஷாஹீன் பாக் போராட்டம்

கொரோனா வைரஸ் காரணமாக டெல்லியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாஹின் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றினர்.

இந்த நடவடிக்கையில் சில போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தென் கிழக்கு டெல்லி உதவி காவல் ஆணையர் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு கொடுத்த பேட்டியில், "ஊரடங்கு பிறப்பித்ததையடுத்து மக்கள் கூடுவது சட்டப்படி குற்றம். இதனால் அந்த இடத்தை விட்டு போராட்டக்காரர்களை வெளியேற்றினோம். இதில் விதிகளை மீறிய சிலரை தடுத்து நிறுத்தினோம்" என்றார்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை 5 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால், இந்த நிலையை நீட்டிப்பதே சிரமமாகும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

வடகிழக்கிலும் கொரோனா

பிரிட்டனில் இருந்து மணிப்பூர் வந்த 23 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் கொரோனா தொற்று உள்ள முதல் நபர் இவர் தான்.

மஹாராஷ்டிராவில் மேலும் 3 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் இருவருக்கும், சதராவில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறு தி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் நிலை என்ன?

மலேசியவிலிருந்து ஏர் ஏசியா மூலமாக 113 பேர் நேற்று இரவு சென்னைக்கு வந்தனர். இதில் 9 பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 104 பேரை தாம்பரத்திலுள்ள விமான படைக்கு சொந்தமான பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க தனி வார்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் செயல்படவுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 350 படுகைகள் கொண்ட தனிவார்டு ஒன்று ஓமந்தூரார் மருத்துவமனையில் தயார் செய்யப்பட்டுவருகின்றது என்றும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகளுடன் வார்டு செயல்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம்: தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் இலவசம், ரூ.1,000 நிவாரணத்தொகை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய், சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது என நேற்று(மார்ச் 23) முதல்வர் அறிவித்திருந்தார். தற்போது, ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிப்பது, ரேஷன் பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.3280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விலையின்றி கிடைக்கும் என்றும் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கட்டிடத்தொழிலாளர்கள், ஓட்டுநர் நலவாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதியுடன் மேலும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அங்கன்வாடிகளில் உணவருந்தும் முதியவர்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களில் உணவு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்றும், ஆதரவற்றோர்களுக்கு பொது சமையல் கூடங்கள் அமைத்து உணவு வழங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: