கொரோனா வைரஸ்: தமிழகத்தில் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க பரிந்துரை Coronavirus Tamil Nadu Update

பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தி இருந்த 14 மணி நேர சுய ஊரடங்கு இன்று மாலை 9 மணியுடன் முடிவுக்கு வருகிறது. மோதி கேட்டுக் கொண்டிருந்தபடி மக்கள் வீதிக்கு வந்து 5 மணிக்கு கரவொலி எழுப்பினர்.

இப்படியான சூழலில் கொரோனாவால் பாதித்த நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது மத்திய அரசு.

அவசியத் தேவைகளைத் தவிர மற்ற நடவடிக்கைகளை முடக்கும் படி மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது.

அதன்படி தமிழகத்தில் சென்னை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று நோயாளர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த மூன்று மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டுமே மக்கள் வெளியேற வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மார்ச் 22 மதியம் 2.30 மணி நிலவரப்படி 341 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

23 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக் குணப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை மார்ச் 31ஆம் தேதி வரை நிறுத்தி உள்ளது தமிழக அரசு.

மேலும் இருவருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கலிஃபோர்னியாவில் இருந்து வந்த 64 வயதான பெண் ஒருவரும் துபாயில் இருந்து வந்த 43 வயதான ஆண் ஒருவரும் திருநெல்வேலி மாவட்ட மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் 9 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :