You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண் சிசுக்கொலை: மதுரை அருகே கள்ளிப்பால் ஊற்றி குழந்தையை கொன்றதாக பெற்றோர், தாத்தா கைது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பி.மீனாட்சிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்துள்ளனர் என வழக்கு பதிவாகியுள்ளது.
வைரமுருகன்-செளமியா தம்பதிக்குப் பிறந்த இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் கொன்று புதைத்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட தம்பதி, குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு (உதவி எண் 100) வந்த தொலைபேசி தகவலை அடுத்து பெற்றோரை விசாரிக்க காவல்துறையினர் சென்றபோது, அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டனர் என தெரியவந்தது.
ஆனால் அவர்கள் வழக்கறிஞரின் துணையோடு அடுத்தநாள் காவல்துறையிடம் சரண் அடைந்தனர் என்றனர்.
வைரமுத்து - சௌமியா அளித்த வாக்குமூலத்தின்படி, கொலை செய்யப்பட்ட குழந்தையை தாத்தா சிங்கத்தேவன் வீட்டுக்கு அருகே புதைத்தது கண்டறியப்பட்டது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
கூலித் தொழிலாளியான வைரமுருகன்-செளமியாவுக்கு ஏற்கனவே மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது என்றும் அடுத்த குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால், சிசுக்கொலை செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. ஜனவரி 30ம் தேதி பிறந்த குழந்தை, மார்ச் 2ம் தேதி கொலை செய்யப்பட்டது என விசாரணையில் பெற்றோர் தெரிவித்துள்ளனர் என்கிறது காவல்துறை.
பிபிசி தமிழிடம் பேசிய மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், '' சிசுக்கொலை செய்ய முதலில் முடிவு செய்தது யார் என விசாரித்துவருகிறோம். பெற்றோர் மற்றும் வைரமுருகனின் தந்தை சிங்கத்தேவன் ஆகியோர் வாக்குமூலம் அளிக்கவுள்ளனர். தற்போது மூவரையும் கைது செய்துள்ளோம்,'' என்றார்.
புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் மார்ச் 5ம் தேதி தோண்டி எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் குழந்தையின் மரணம் இயற்கை மரணமில்லை எனத் தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கள்ளிப்பால் ஊற்றி குழந்தை கொலை செய்யப்பட்டதா என கண்டறிய விரிவான மருத்துவ சோதனைகள் அவசியம் என்பதால், உடனடியாக தகவலை அறிவிக்க முடியாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் பெண் சிசுக்கொலைகளை தடுக்க, 1992-ம் ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தைக் கொண்டுவந்தார். தமிழகம் முழுவதும் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்கப்படும் குழந்தைகள், அரசு இல்லங்களில் வளர்க்கப்படுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: