You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Tirupur Accident: பேருந்தும் லாரியும் எதிரெதிரே மோதி விபத்து: 19 பேர் பலி; உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் குறைந்தது 19 பேர் பலியாகியுள்ளனர்.
இறந்தவர்களில் 18 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கேரள காவல்துறையினரின் பாதுகாப்போடு சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஒருவரின் உடல் மட்டும் நாளை ஒப்படைக்கப்படவுள்ளது. தகவல் அறிந்த உறவினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
இதுவரை இறந்தவர்களில் ஐந்து பேர் பெண்கள் என்பதும், 14 பேர் ஆண்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. மொத்தம் 48 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சூழலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விபத்துக்கு காரணமான கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் ஹேமராஜ் பகல் 2 மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த 19 பேரில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் ஒன்பது பேர் ஆண்கள், இரண்டு பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள எட்டு பேரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் விபத்து குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், துயரத்தில் உள்ள குடும்பத்தினர் குறித்து தனது சிந்தனைகளும் பிரார்த்தனைகளும் உள்ளதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
உயிர் பிழைத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
அவிநாசி சாலை விபத்தில் பெரிய அளவிலான காயங்கள் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பியவர்களில் ஒருவர் பாலக்காட்டில் வசிக்கும் ஜோர்டின் சேவியர். தனது மனைவியின் தேர்வுக்காக பெங்களூர் சென்றவர், அங்கிருந்து எர்ணாகுளத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
"விபத்து நடந்தபோது உறங்கிக்கொண்டிருந்தேன். விபத்துக்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பேருந்தின் நடுப்பக்கத்துக்கு சற்று பின்னால் அமர்ந்திருந்தேன்," என்று தனக்கு நேர்ந்த அதிர்ச்சியை பிபிசி தமிழிடம் விவரித்தார்.
சுமார் 2.30 மணி முதல் 3.00 மணிக்குள் விபத்து நடந்தது என்கிறார் சித்து மாதவன் எனும் பயணி.
"நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன். திடீரென ஒரு பெரிய சட்டம் கேட்டது. கண்விழித்துப் பார்த்தபோது பலரும் தங்கள் இருக்கைகளில் இறந்த நிலையில் கிடந்தனர்," என்றார் அவர்.
பெண்கள் உள்பட பலர் இறந்தது மிகவும் வேதனைக்குரிய சம்பவம் என்று அவர் தெரிவித்தார்.
விபத்து நடந்தது எப்படி?
பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசுக்கு சொந்தமான பேருந்தின் மீது கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி நேருக்குநேர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
டைல்ஸ் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து மையத்தடுப்பை தாண்டி எதிரே வந்த பேருந்தின் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
மீட்பு மற்றும் தகவல் தொடர்பு பணிகளை ஒருங்கிணைக்க கேரளாவின் பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவா விக்ரம் அவிநாசி வந்துள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அவிநாசி மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்கள் அவிநாசி, திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: