You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் இந்தியா வருகை: பிரதமர் மோதி உடனான சந்திப்பில் என்னென்ன நடக்கும்?
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் இருவரும் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகைத்தர இருக்கிறார்கள். அதிபரான பிறகு டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறை.
இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சில கையெழுத்தாக உள்ளன. அகமாதாபாத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் டெல்லி செல்ல உள்ளார்.
டிரம்பின் வருகைக்காக அகமாதாபாத் நகரம் தயாராகி வருகிறது. இதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாகியுள்ளன.
அதிபர் டிரம்பின் திட்டம் என்ன?
முதலில் டிரம்ப் அகமதாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்குவார்.
இதன் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் விமான நிலையத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மொடேரா அரங்கம் வரை 22 கிலோ மீட்டர் தூரம் சாலை வழியே பயணிப்பார்கள்.
இரு நாட்டு தலைவர்களும் முதலில் புகழ்பெற்ற சபர்மதி காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட உள்ளனர். காந்தி ஆசிரமத்தை பார்வையிட உள்ள முதல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
இதனைத் தொடர்ந்து, சர்தார் படேல் அரங்கம் என்று அறியப்படும் புதுப்பித்து கட்டப்பட்ட மொடேரா விளையாட்டு அரங்கத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைப்பார். பின்னர் அவருக்கு மரியாதை செலுத்துவதற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் வருகைக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களை அகமதாபாத் போலீஸார் பகிர்ந்துள்ளனர்.
பாதுகாப்புக்காக 10,000 போலீஸார்
அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையின்போது, 25 ஐபிஎஸ் அதிகாரிகள், 65 துணை ஆணையர் நிலை காவல்துறை அதிகாரிகள், 200 ஆய்வாளர்கள், 800 துணை ஆய்வாளர்கள் மற்றும் 10,000 காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளதாக அகமதாபாத் நகர காவல்துறை துணை ஆணையர் விஜய் படேல் கூறியுள்ளார்.
விமான நிலையம், சாலை பயணம், காந்தி ஆசிரமம் மற்றும் மொடேரா அரங்க நிகழ்ச்சிகளுக்காக மொத்தம் ஐந்து பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குடிசைகளை ஒளித்து வைக்கும் அதிகாரிகள் | Gujarat | Modi | Trump India visit |
அதே நேரத்தில், தேசிய பாதுகாப்புக் குழு சிறப்புப் பிரிவு அதிகாரி மற்றும் துப்பாக்கி ஏந்திய அதிகாரிகளும் பாதுகாப்பை பலப்படுத்துவார்கள்.
வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றலுக்காக 10 குழுக்கள் நியமிக்கப்படும். இரண்டு மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஹோட்டலில் தங்கவரும் நபர்களின் தகவல்களை போலீஸாரிடம் தெரிவிக்குமாறு அதன் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டிரம்புக்கான பாதுகாப்பின் ஒரு பகுதியாக அவருடைய பாதுகாப்பு கார் ஒன்றை ஏற்றிவந்த அமெரிக்க விமானப்படை கார்கோ விமானம் ஒன்று திங்கட்கிழமையன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் வந்திறங்கியது.
மேலும் அந்த விமானத்தில் பல்வேறு உபகரணங்களுடன் மூன்று லாரிகளும் வந்துள்ளன. இதுபோன்ற மேலும் சில கார்கோ விமானங்கள் நிகழ்ச்சிக்கு முன்னர் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகமதாபாத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க அமெரிக்க சீக்ரட் சர்வீஸ் எனப்படும் ரகசிய சேவை பிரிவினர் இந்தியா வந்துள்ளனர்.
அதிபர் டிரம்பை பாதுகாப்பதிலும் சீக்ரட் சர்வீஸ் பிரிவு ஈடுபடும். அதிபரின் முதல் பாதுகாப்பு வளையமாக இவர்கள் இருப்பார்கள்.
சாலை விரிவாக்கம், கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட 30 கோடி ரூபாய் ஏற்கனவே செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரத்தை "அழகுபடுத்துவதற்காக" 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் குடிசைப்பகுதிகளை மறைக்க கட்டப்பட்ட சுவரும் அடங்கும்.
மேலும் மொடேரா அரங்கம் மற்றும் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
டிரம்ப் மற்றும் மோதி ஆகியோர் பங்குபெறும் நிகழ்ச்சியை காண வருகை தருபவர்கள் இரண்டரை மணி நேரத்திற்கு முன்பாகவே அவ்விடத்திற்கு வந்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
22 கிலோ மீட்டர் சாலைப் பயணம்
விமான நிலையத்தில் இருந்து படேல் அரங்கத்திற்கு இரு தலைவர்களும் காரில் செல்ல உள்ளனர்.
இதனைக் காண வழியெங்கும் 28 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இருவரும் அந்த வழியாக செல்லும்போது கையசைப்பதை மக்கள் காண இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் பயணிக்கும் சாலைகளில் குஜராத்தின் பாரம்பரிய நடனக் கலைஞர்கள் நடனமாடுவார்கள்.
மொடேரா அரங்கத்தில் நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் இருவரும் பிரதமர் மோதியுடன் டெல்லி புறப்பட்டு செல்வார்கள். அங்கு இரு நாடுகளுக்கும் இடையே வணிக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து அதிபர் டிரம்ப், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை காண செல்வார் என்று கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
- குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? உண்மை என்ன?
- சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் முடிவானது எப்படி? - நூற்றாண்டு சர்ச்சையின் வரலாறு
- குடியுரிமை திருத்த சட்டம்: உயர் நீதிமன்ற தடையை மீறி சென்னையில் போராட்டம்
- 'பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்' - டி.எம். கிருஷ்ணா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: