You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
CAA Protest: உயர் நீதிமன்ற தடையை மீறி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராட்டம்
சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகை போராட்டம் இன்று (புதன்கிழமை)சென்னையில் நடந்து வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் எனக் கோரி தமிழக சட்டமன்றம் இன்று முற்றுகையிடப்படும் என்று இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தன.
இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.
போராட்ட அமைப்பாளர்களை எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றம் விதித்த தடை தங்களுக்குப் பொருந்தாது என்று இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மட்டுமல்லாது கோவை மதுரை, திருச்சி, கடலூர், திருநெல்வேலி என தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்பினர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் காட்டுங்கள், தவறான அச்சத்தை மக்களிடையே எதிர்க்கட்சிகள் விதைக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை தமிழக சட்டமன்றத்தில் பேசியிருந்தார என்பது குறிப்பிடத்தக்கது.
தடியடிக்கு பின் சூடுபிடித்த போராட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தின்போது நடந்த தடியடி மற்றும் கைதுக்கு பிறகு தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தொடங்கின.
சனிக்கிழமை முதல் வண்ணாரப்பேட்டையில் பெண்கள் திரளாக ஒன்றுகூடிப் போராடத் தொடங்கினர்.
வெள்ளியன்று நடந்த போராட்டத்தின்போது காவல்துறை மீது கல்வீச்சு நடந்ததாகவும், மூன்று காவலர்கள் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
பின்னர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்ற காவல்துறை, பின்னர் சுமார் 120 பேரை கைது செய்தது.
இந்த செய்தி பரவியதும் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் போரட்டம் தொடங்கியது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: மலேசியாவில் பொருட்கள் வாங்க குவிந்த சிங்கப்பூர் மக்கள்
- சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் முடிவானது எப்படி? - நூற்றாண்டு சர்ச்சையின் வரலாறு
- 'பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்' - டி.எம். கிருஷ்ணா
- கொரோனா வைரஸ்: சொகுசு கப்பல், 14 நாட்கள், 500 பயணிகள் - அடுத்து என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :