அஜித்தின் வில்லன், தனுஷ் மீது வழக்கு, விஜயை அரசியலுக்கு அழைக்கும் சுவரொட்டிகள் - கோலிவுட் தகவல்கள்

பட மூலாதாரம், Ajith fans / Twitter
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: அஜித்தின் வில்லன், தனுஷ் மீது வழக்கு, விஜய்அரசியல்
ரஜினிகாந்த் நடித்து 1981-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் நெற்றிக்கண். லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, கவுண்டமணி ஆகியோரும் நடித்து இருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். பாலச்சந்தரின் கவிதாலயா பட நிறுவனம் தயாரித்தது.

பட மூலாதாரம், Twitter/dhanushkraja
நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக தனுஷ் தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை அவர் தொடங்கி இருப்பதாகவும், தற்போதைய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கதையில் சிறிய மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நெற்றிக்கண் ரீமேக்கை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நெற்றிக்கண் படத்தை தனது அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக் கூடாது என்று டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
"தனுஷ் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் பொய் என்றால் கண்டுகொள்ள மாட்டேன். உண்மையாக இருக்குமானால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிடம் அவர் உரிமம் வாங்குவதை விட கதாசிரியரான என்னிடம் வந்து கேட்பதே சரியாக இருக்கும். என்னிடம் உரிமம் பெறாமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்."
இவ்வாறு விசு கூறியுள்ளார்.
வலிமை திரைப்படம்
'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'வலிமை' என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.
கதாநாயகியாக கியூமா குரோஷி நடிப்பதாக கூறப்படுகிறது. வில்லனாக பிரசன்னா நடிக்கிறார் என்று பேசப்பட்டது. வலிமையில் நடிக்கிறீர்களா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசன்னா, தகவலுக்காக காத்திருக்கிறேன் என்றார். பின்னர் அவர் நடிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது நவ்தீப்பை வலிமை படத்தில் அஜித்குமாருக்கு வில்லனாக நடிக்க தேர்வு செய்து இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. நவ்தீப் ஏற்கனவே அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்து இருந்தார். தமிழில் அறிந்தும் அறியாமலும், இளவட்டம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் திரைக்கு வந்த ஜீவாவின் சீறு படத்தில் வில்லனாக வந்தார். வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப் நடிப்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அஜித்துக்கு பிடித்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. வலிமை படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஜய்யை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள்

பட மூலாதாரம், actorvijay
நடிகர் விஜயிடம் சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனை ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை காரில் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய நடவடிக்கையை கண்டித்தனர். விஜய்க்கு ஆதரவாக நடிகர், நடிகைகளும் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் விஜயை அரசியலில் ஈடுபடவேண்டும் என்று அழைப்பு விடுத்து தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ஒரு புறம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுபுறம் அரசியல் ஆலோசகர் பிரசாத் கிஷோர் நடுவில் விஜய் உருவப்படங்கள் உள்ளன.
அந்த போஸ்டரில், "ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். கலங்கி நிற்கும் தமிழகத்தை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்" என்ற வாசகம் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் விஜயை நாங்கள் மாஸ்டராக மட்டுமே பார்க்க விரும்புகிறோம். ஆனால் அவரை ஹெட்மாஸ்டர் ஆக்கி விடாதீர்கள்" என்று குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும் விஜய் உருவப்படத்துடன், "உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துளெல்லாம் உளன்" என்ற திருக்குறள் வாசகத்தோடு போஸ்டர்கள் ஒட்டி உள்ளார்கள். விஜய் ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் கட்சிக்கு இணையாக பூத் கமிட்டி வரை நிர்வாகிகளை நியமனம் செய்து வலுவாக வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்து தமிழ்: தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 7.27 சதவீதம்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 2018-19-ல் 8.17 சதவீதமாக இருந்தது. 2019-20-ல் இது 7.27 சதவீதமாக உள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமான 5 சதவீதத்தைவிட அதிகம். 2020-21-ல் தமிழகம் மேலும் வலுவான பொருளாதார வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கான நிதிப் பகிர்வை 42-ல் இருந்து 41 சதவீதமாக குறைக்க நிதிக் குழு பரிந்துரை செய்துள்ளது. மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் வரி வருவாயிலிருந்து ஜம்மு - காஷ்மீருக்கு இனி பங்கு அளிக்கப்படாது என்பதால், இதனால் பெரும் பாதிப்பு இருக்காது.
மாநிலங்கள் இடையேயான நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு 4.023-ல் இருந்து 4.189 என சிறிய அளவே உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்கு ரூ.4,025 கோடி வழங்க 15-வது நிதிக் குழு பரிந்துரை செய்துள்ளது.
வாடகை ஒப்பந்தம்
5 ஆண்டுகளுக்கு உட்பட்ட குடியிருப்புக்கான வாடகை ஒப்பந்தங்களில் முத்திரைத் தாள் வரி 1 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டு, ரூ.5 ஆயிரத்து மிகாமல் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி: கூவத்தின் அனைத்து வடிகால்களும் ரூ.5,440 கோடியில் மறுசீரமைக்கப்படும்

பட மூலாதாரம், Getty Images
பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்கள், கூவம் அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களும் ரூ.5,440 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:
கூவம் நதியில் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. அடுத்தகட்டத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களும், கூவம் அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களும் ரூ.5,439.76 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் நதிகளில் கழிவுநீா் கலப்பதைத் தவிா்க்கும் திட்டத்துக்காக அரசு ஏற்கெனவே 1,001 கோடி அனுமதி வழங்கியுள்ளது.
பொதுப்பணித்துறை மூலம் ரூ.25 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிட்லப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டம், ஓடந்துறை ஏரியை மீட்டெடுக்கும் பணிகள் ரூ.3.2 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: 2017-ஆம் ஆண்டைக் காட்டிலும் 83.02 சதுர கிலோமீட்டா் அளவுக்கு தமிழகத்தின் வன நிலப்பரப்பு அதிகரித்துள்ளது. மேற்கு மற்றும் கிழக்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் புலிகள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களைப் பேணுவதில் மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக 2014-ஆம் ஆண்டில் 229-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டில் 264-ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு உயிா்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.950.56 கோடி செலவில் தொடங்கப்படும். சீா்குலைந்த காடுகளை சமூகப் பங்களிப்புடன் மீட்டெடுப்பதற்கான ஒரு விரிவான திட்டத்தை ரூ.2,029.13 கோடி செலவில் செயல்படுத்த திட்டங்கள் உருவாக்கப்படும் என்றாா்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













