"பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து" - ராகுல் காந்தி

அரசு பணிகளில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி உயர்வு வழங்குவது அடிப்படை உரிமை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்து இன்று (திங்கள்கிழமை) மக்களவையில் காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மானம் கோரின.

மேலும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு பணி உயர்வு கொடுக்க வேண்டும் என மாநில அரசு கோரக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் வெள்ளியன்று தெரிவித்திருந்தது.

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு

இந்நிலையில், அரசு பணிகளில், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு மழுங்கடிக்கப்படக்கூடாது. அது நமது நாட்டின் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு பலத்த அடியாக இருக்கும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

`மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை`

"பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகள் இட ஒதுக்கீடுக்கு எதிரானது. அவர்கள் பழங்குடியினத்தவர் மற்றும் பட்டியல் இனத்தவர் முன்னேறுவதை ஒருபோதும் விரும்புவதில்லை. அவர்கள் ஒரு நிறுவன அமைப்பை உடைக்க முயற்சிக்கின்றனர். பழங்குடியின மக்கள், பட்டியலின மக்கள், மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், மோகன் பகவத் மற்றும் மோதி எவ்வளவு முயற்சித்தாலும் இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் விட மாட்டோம்," என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு

இதுகுறித்து மத்திய சமூக நீதி மறும் அதிகாரமளித்தல்துறை அமைச்சர் தாவர் சந்த் கேலாட், "இதுகுறித்து அரசாங்கம் உயர்மட்ட விவாதங்களை மேற்கொண்டு வருகிறது இதில் மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் இல்லை" என்று மக்களவையில் தெரிவித்தார்.

"இந்த பிரச்சனை 2012ஆம் ஆண்டு உத்தரகாண்ட் அரசின், பணி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லை என்ற முடிவால் எழுந்துள்ளது. அப்போது காங்கிரஸ் கட்சிதான் அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது," என்று மேலும் தெரிவித்தார்.

இதனால் காங்கிரஸ் எம்.பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

திமுக கூறுவது என்ன?

"மத்திய பாஜக அரசு பதவியேற்றதில் இருந்தே இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு கொள்கையில் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் சமூக நீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்திட பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி, பழங்குடியினத்தவர் மற்றும் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் பொதுப் பணிகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்கு உத்தரகாண்ட் மாநிலத்தில், அம்மாநில அரசு எடுத்த முடிவு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: