You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் : ஹாங்காங் மருத்துவ ஊழியர்கள் போராட்டம் - நடப்பது என்ன?
சீன பெருநிலப்பரப்பின் எல்லை வழியே ஹாங்காங் வருபவர்களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களின் எல்லை தாண்டி வரும் ரயில் மற்றும் படகு சேவைகளுக்கு ஏற்கனவே ஹாங்காங் தடை விதித்துள்ளது. ஆனால் சுகாதாரத்துறை ஊழியர்கள் முழுமையான தடை கோருகின்றனர்.
முழுமையாக தடை விதிப்பது, உலக சுகாதார அமைப்பின் அறிவுரைக்கு எதிரானது என ஹாங்காங் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹாங்காங்கில் 15 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன பெருநிலப்பரப்பின் எல்லையில் இருந்து ஹாங்காங் வருபவருக்கு முழுமையாக தடை விதிக்காவிட்டால், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும், போதிய மருத்துவ ஊழியர்கள் இங்கு இல்லை என புதிதாக உருவாக்கப்பட்ட மருத்துவமனையின் உயர் அதிகாரி வின்னி யூ கூறுகிறார்.
ஹாங்காங் 7 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட முக்கிய நகரம். சீன அரசாங்கத்திற்கு கீழ் செயல்படும் நகரமாக ஹாங்காங் விளங்கினாலும், அந்த பிராந்தியத்துக்கு சுயாட்சி அதிகாரம் உள்ளது
சீனாவில் இருந்து ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொள்ளவிரும்பும் பயணிகளுக்கான விசாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில், தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்து வருவதால் அந்நாட்டு அரசு ஒரு புதிய மருத்துவமனையை இதற்காக திறக்கவுள்ளது.
1000 படுக்கைகள் கொண்ட வுஹானின் ஹூஷென்ஷான் மருத்துவமனை எட்டே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவிவருவதை கட்டுப்படுத்த ஏற்படுத்த இரண்டு பிரத்யேக மருத்துவமனைகளில் இந்த மருத்துவமனையும் ஒன்றாகும்.
சீனாவில் மற்றும் 17,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 361 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு வெளியே 150 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபிலிப்பைன்சில் உள்ள ஒருவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: