உத்தரப்பிரதேசம்: கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்பு; கடத்தியவர் சுட்டுக்கொலை

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொகம்மதாபாத் நகரத்துக்கு அருகிலுள்ள கார்சியா என்ற கிராமத்தில் நேற்று (வியாழக்கிழமை) சுமார் 20 குழந்தைகள் மற்றும் சில பெண்களை ஒரு வீட்டில் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்த நபரை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

இதையடுத்து சுபாஷ் எனும் அந்த நபரின் வசம் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

சுபாஷ் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அவரது மனைவியை அக்கம்பக்கத்தினர் அடித்து கொன்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பலமுறை சிறைக்கு சென்றுள்ள சுபாஷ் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள நிலையில், தான் பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால்தான் விடுவிப்பேன் என்று அவர் கூறியதாக கான்பூர் ஐ.ஜி. மோஹித் அகர்வால் தெரிவித்தார்.

முன்னதாக, பிணைக்கைதிகளாக குழந்தைகள் மற்றும் பெண்களை பிடித்து வைத்திருந்த சுபாஷ் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதோடு, கையெறி குண்டும் வீசியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டது.

சுபாஷ் தமது மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக குழந்தைகளை தமது வீட்டுக்கு அழைத்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

பிணைக் கைதியாக குழந்தைகளை பிடித்துவைத்துள்ள நபர் வீசிய வெடிகுண்டால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, அதனால் போலீசார் காயமடைந்தனர்.

குழந்தைகள் பிணையாக பிடித்துவைக்கப்பட்டுள்ள வீட்டின் உரிமையாளர் சுபாஷ் பாதம் என்பவர் மீது கொலை உட்பட பல கொடுங்குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் உள்ளன. இவர் பல முறை சிறை சென்றவர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: