You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரண்பேடி - நாராயணசாமி இடையே வெடித்த புது மோதல் - "ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்" - அடம்பிடிக்கும் முதல்வர்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி இருவருக்குமிடையேயான உறவு பூனையும், எலியும் போன்றது. இந்த சூழலில், பத்ம விருதாளர்களை கௌரவிப்பதில் எழுந்த சர்ச்சையில் இப்போது இருவருக்குள்ளும் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
குடியரசு தினவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் மாளிகையில் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி, குடியரசு தினவிழா அன்று மாலை ஆளுநர் மாளிகையில் கிரண்பேடி தேநீர் விருந்து அளித்தார்.
இவ்விழாவில் பங்குபெற்ற முதல்வர், அமைச்சர்களை கிரண்பேடி வரவேற்றதை தொடர்ந்து விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. அதனை தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி தேநீர் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கிருந்து திடீரென வெளியேறினார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் அமைச்சர்களும் வெளியேறினர்.
"நாராயணசாமிமன்னிப்பு கேட்க வேண்டும்"
இந்நிலையில், குடியரசு தினவிழா தேநீர் நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி வெளியேறியது குறித்து இன்று தனது சமூக வலைத்தளத்தில் கருத்தை பகிர்ந்துள்ள கிரண்பேடி, "ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினவிழா தேநீர் விருந்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு பத்ம விருதுகள் பெற இருக்கின்ற மனோஜ் தாஸ் மற்றும் முனுசாமி இருவரையும் கௌரவிப்பதற்காக முதலமைச்சரை அழைத்தபோது, ஆளுநர் மாளிகை கட்டுப்பாட்டு அலுவலரிடம் எந்தவித முன்னறிவிப்புமின்றி எவ்வாறு இப்படி செய்யலாமா என முதலமைச்சர் சத்தமிட்டுள்ளார். பிறகு, அங்கிருந்து அவர் வெளியேறினார். முதல்வரை தொடர்ந்து அமைச்சர்களும் வெளியேறினர். இந்த சம்பவம் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் நடந்துள்ளது. மேலும், பத்ம விருதுகள் பெற இருக்கும் இருவர்களிடமும், கலைநிகழ்ச்சிக்காக ஜம்மு&காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து இந்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டவர்களிடம் முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். பொறுப்புள்ள பதவிகளில் உள்ளவர்களின் விரும்பும்படியான செயல் இதுவல்ல" என தெரிவித்துள்ளார்.
"கிரண்பேடி தான் தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார்"
குடியரசு தினவிழா தேநீர் விருந்து நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த முதலமைச்சர் நாராயணசாமி, "குடியரசு தினவிழா தேநீர் விருந்திற்கு என்னையும், அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அழைத்திருந்தார், அழைப்பை ஏற்று அங்கே சென்றிருந்தோம்.அங்கு விழா நடைப்பெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென முதலமைச்சர் அவர்கள் பத்ம விருது பெற இருப்பவர்களை கௌரவிப்பார் என அறிவித்தனர்.
ஆகவே, நான் எழுந்து அறிவித்தவரிடம் எந்தவித முன் அறிவிப்புமின்றி எப்படி என் பெயரை அறிவித்தீர்கள் என்று கேட்டேன். குறிப்பாக, துணைநிலை ஆளுநர் பத்ம விருதுகளை பெற இருப்பவர்களை கௌரவிக்க வேண்டுமென்றால் அவர் அலுவலகத்தில் செய்திருக்கலாம் அல்லது விழா வைத்து செய்திருக்கலாம். ஆனால், எல்லாரையும் சந்திக்கிற குடியரசு தினவிழா தேநீர் நிகழ்ச்சியில் எந்தவித முன் அறிவிப்புமின்றி, அவர்களை கௌரவப்படுத்த இருக்கிறோம் என்று அறிவித்தது மட்டுமில்லாமல் விதிமுறைகளை மீறி, சட்டத்தை புறக்கணித்து கிரண்பேடி அவர்கள் சில அதிகாரிகளுக்கு சான்றிதழ் கொடுப்பதாக அறிவிக்கின்றனர்.
எல்லோரையும் அழைத்து வாழ்த்துகளை சொல்வதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த விதிமுறைகளும் இல்லாமல், தன்னிச்சையாக, தான் தோன்றித்தனமாக, தான் நினைப்பதுதான் நடக்கவேண்டும் என்று துணைநிலை ஆளுநர் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், புதுச்சேரி மக்களையும் கிரண்பேடி அவர்கள் அவமதிக்கிறார். ஆகவேதான், வெளிநடப்பு செய்தேன்," என்றார் நாராயணசாமி.
முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் துணைநிலை ஆளுநர் பகிர்ந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, " எந்தவித முன்னறிவிப்புமின்றி, விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகாரிகளுக்கு சான்றிதழை வழங்கியதற்கு அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: