You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உமர் அப்துல்லா: தாடியுடன் ஆளே மாறிப்போன முன்னாள் முதல்வர் - மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் கவலை
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மத்திய அரசால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட நிலையில், அண்மையில் இணையத்தில் முகம் முழுக்க வெள்ளை தாடியுடன் வெளியான அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.
கடந்தாண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு நீக்கியது.
தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் அறிவிக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், மத்திய ரிசர்வ் படையினரும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆரம்பத்தில், பல இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டன. தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டன.
இந்த சூழலில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல அரசியல் தலைவர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். அப்படி வைக்கப்பட்டவர்களில் அம்மாநிலத்தில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் ஒருவர்.
இந்நிலையில், முகத்தில் நீண்ட தாடியுடன் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போன உமர் அப்துல்லாவின் புகைப்படத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
"உமரை என்னால் அடையாளம் காண முடியவில்லை. நான் சோகமாக உணருகிறேன். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்று நிகழ்வது துருதிஷ்டவசமானது. என்றைக்குத்தான் இது முடிவு பெறும்?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மம்தா கவலைத் தெரிவித்திருந்தார்.
மம்தா பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
பலரும் உமர் அப்துல்லாவின் நிலைமைக்கு வருத்தம் தெரிவித்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
முக்கியமாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், உமர் அப்துல்லாவின் சட்டவிரோத, அலட்சியப்போக்குடன் விதிக்கப்பட்ட நீண்ட தடுப்புக்காவலை ஆதரிப்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் என்றும், கடந்த 6 மாதங்களாக குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) பகிர்ந்துள்ள ஒரு ட்வீட்டில், உமர் அப்துல்லாவின் புகைப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருப்பதாகவும், போதிய விசாரணைகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி மற்றும் பிற காஷ்மீர் தலைவர்களை நினைத்து அதே அளவு கவலை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு உடனடியாக அனைத்து அரசியல் கைதிகளையும் காஷ்மீரில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: