கோவையில் பெண்கள் உடை மாற்றுவதை படம்பிடித்த மூவர் குண்டர் சட்டத்தில் கைது

கோவையில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண்கள் உடை மாற்றுவதை படம்பிடித்து பகிர்ந்ததாக கைது செய்யப்பட்ட மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று காவல் துறை தெரிவித்துள்ளது.

குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டால் ஒருவருக்கு பிணை கொடுக்காமல் ஓராண்டு காலம் வரை காவலில் வைத்திருக்க முடியும்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் ரூட்ஸ் எனும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண்கள் உடை மாற்றுவதை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு செல்பேசி கேமராவை வைத்து ரகசியமாக படம் பிடித்ததாக அங்கு மேலாளராக பணியாற்றி வந்த சுபாஷ் என்பவர் மீது பெட்ரோல் பங்க் ஊழியர் மணிகண்டன் என்பவர் ஜனவரி 6ஆம் தேதி புகார் தெரிவித்திருந்தார்.

மேலும், அதே பங்கில் பணிபுரிந்து வரும் தனது மனைவி உட்பட பல பெண் ஊழியர்கள் உடைமாற்றுவதை படம்பிடித்த மேலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தபோது தான் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநாளில் பெட்ரோல் திருடுவதாக மணிகண்டன் மீதும் பங்க் நிர்வாகத்தினர் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இந்த நிலையில், பெண்கள் உடை மாற்றும் காணொளிப் பதிவுகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்ட மருதாசலம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் ஜனவரி 8ஆம் தேதி சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததிருந்தார்.

இதனையடுத்து, பெண்கள் உடைமாற்றுவதை ரகசியமாக படம் பிடித்ததாக மேலாளர் சுபாஷ், அந்த காணொளியை ரகசியமாக வைத்திருந்து ஊடகங்களில் வெளியிடுவதற்காக கொடுத்த மணிகண்டன் மற்றும் பெண்கள் உடை மாற்றும் காணொளிப் பதிவுகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்ட தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மருதாசலம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அன்றே மணிகண்டன், சுபாஷ் மற்றும் மருதாச்சலம் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்கள் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது குண்டர் தடுப்புச் சட்டமும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: