You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேட் கம்மின்ஸ் - ஒரு பௌலருக்கு 15.5 கோடி ரூபாய் ஏன்?
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரராகஉருவாகியுள்ளார்.
2015ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே இதுவரை அதிக தொகையாக உள்ளது.
ஐபிஎல் 2020 சீசனுக்கான ஏலம் இன்று (வியாழக்கிழமை) நடந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது.
டெல்லி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என பல அணிகள் மோதிய போதிலும் இறுதியில் 15.5 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இதுவரை வெளிநாட்டு வீரர்களில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவராக பென் ஸ்டோக்ஸ் விளங்கினார். அவர் ஐபிஎல் 2018 சீசனில் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஒரு பௌலர் இவ்வளவு பெரிய தொகைக்கு ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறை.
இதற்கான காரணம் என்ன? யார் இந்த பேட் கம்மின்ஸ்?
26 வயதாகும் பேட்ரிக் ஜேம்ஸ் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். கடந்த 2011-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இதுவரை 28 டெஸ்ட் போட்டிகள், 58 ஒருநாள் போட்டிகள், 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மிகவும் சிக்கனமாக ரன் விட்டுக்கொடுப்பவர் என்பதே பேட் கம்மின்ஸின் ஸ்பெஷல். டெஸ்ட் போட்டிகளில் வெறும் 53 இன்னிங்சில் 134 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
வலது கை வேகப்பந்துவீச்சாளரான கம்மின்ஸ் வேகப்பந்தின் சொர்க்கபுரியாக விளங்கும் பிட்ச்களில் அசத்தலாக பந்துவீசக்கூடியவர். கடைசி கட்ட வீரராக களமிறங்கி சில நேரங்கில் பௌண்டரிகளும் விளாசக்கூடியவர்.
கடந்த ஜூலை மாதம் நடந்த ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பௌலராக கம்மின்ஸ் விளங்கினார். அந்த தொடரில் 5 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய மண்ணில் பொதுவாக வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவதில் மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது 5 ஒருநாள் போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
மொஹாலியில் 5 விக்கெட்டுகளும் நாக்பூரில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
டி20 போட்டிகளில் இவரது பந்தை விளாசுவது கடினம் என்பதே இவ்வளவு பெரிய தொகைக்கு கம்மின்ஸ் விலை போனதற்கு முக்கிய காரணம்.
2012-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் நான்கு ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதுதான் ஒரு போட்டியில் அவர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்களாகும்.
அனல் பறக்கும் ஐபிஎல் டி20 போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக பவர்பிளே மற்றும் இறுதிக்கட்ட ஓவர்களில் கம்மின்ஸ் எப்படி பந்துவீசப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: