நிர்பயா வழக்கு: மரண தண்டனை ஆதரவு முழக்கங்கள் ஏன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இல்லை?

    • எழுதியவர், பிரியங்கா துபே
    • பதவி, பிபிசி

2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிசியோதெரபி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கும் இன்று மார்ச் 20 வெள்ளிக்கிழமை அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த சில மாதங்களில் உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எரித்துக் கொல்லப்பட்டார். ஹைதராபாத் கால்நடை மருத்துவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்த வழக்கின் சந்தேகக் குற்றவாளிகள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். முசாஃபர்நகர் முதல் நாக்பூர் வரை, நாடு முழுவதும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் வெளிவந்துள்ளன. இவற்றை அடுத்து, பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் சமூக ஊடகங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியது.

பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களுக்கு 'வீதிகளில் நீதி' கொடுக்க வேண்டும் என்றும், அவர்களை பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதே நேரம் நிர்பயாவின் பெற்றோரும் ஹைதராபாத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் என்கவுண்டரில் கொலை செய்தது நியாயமே என்று கூறியதுடன் சர்ச்சைக்குரிய இந்த என்கவுண்டரை 'நீதி' என்றும் வர்ணித்தனர்.

'வல்லுறவு வழக்குகளில் 6 மாதங்களில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என்று கோரி, டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். பாலியல் வல்லுறவு செய்தவரை தூக்கிலிட வேண்டும் ' என்று சமூக ஊடகங்களில் வைரலாகும் இத்தகைய முழக்கங்களுக்கிடையில், நிர்பயா பாலியல் வல்லுறவு குற்றவாளி பவன் குமார் குப்தா மண்டோலி சிறையில் இருந்து டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதோ இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் தூக்கிலிடப்பட்டுவிட்டனர். பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற இந்த வலுவான கோரிக்கைகள், 'மரண தண்டனை' தொடர்பான பல கேள்விகளை நம்மிடையே மீண்டும் எழுப்புகிறது.

தேசிய சட்டப் பல்கலைக்கழக (டெல்லி) ஆராய்ச்சியின் அண்மை தரவுகளின்படி, 2018 ஆண்டில், டிசம்பர் வரை இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 426 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2017 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 371 ஆக இருந்தது.

மரண தண்டனை செயல்முறை

கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, அது உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்படும் வரை தண்டனை நிறைவேற்றப்படாது.

பிறகு குற்றவாளிக்கு உச்சநீதிமன்றம் செல்லும் வாய்ப்பும் உள்ளது. அங்கும், தண்டனையில் எந்தவித மாற்றமும் ஏற்படாவிட்டால், 137 வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை சமர்ப்பிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. அதற்கு அடுத்த கட்டமாக குடியரசுத் தலைவரிடம் கருணை மனு சமர்பிக்கும் இறுதி வாய்ப்பும் இருக்கிறது. இந்த அனைத்து வழிகளையும் முயற்சித்து, சட்டரீதியிலான சலுகை கிடைக்காத நிலையில் குற்றவாளிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படும்.

பாலியல் வல்லுறவு மற்றும் மரண தண்டனை

குற்றவியல் சட்ட திருத்த மசோதா (2018) மூலம் மரண தண்டனையின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது. இதன் பின்னர், 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில் மரண தண்டனைக்கான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் பின்னர், 'பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில்' (போக்ஸோ) மரண தண்டனையை சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. பாலியல் வல்லுறவு மற்றும் கொலை தொடர்பான கொடூரமான வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்படுவதும் உண்டு.

உண்மையில் மரணதண்டனையால் பாலியல் வல்லுறவுகளை குறைக்க முடியுமா?

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நேரத்தில்,பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை தூக்கிலிட வகை செய்யும் சட்டத்தால், தவறு செய்பவர்களுக்கு அச்சம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இருந்தாலும், மரண தண்டனையுடன், பாலியல் வன்கொடுமை குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வல்லுறவு சம்பவம் பதிவு செய்யப்படுவதாக இந்தியாவில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்.சி.ஆர்.பி) சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண தண்டனையால், பாலியல் சம்பவங்களை குறைக்க முடியும் என்று எந்தவொரு அதிகாரபூர்வ அல்லது அதிகாரப்பூர்வமற்ற ஆராய்ச்சியும் கூறவில்லை, மாறாக, அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளின் புள்ளிவிவரங்கள் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சீராக அதிகரித்து வருவதாகவே சொல்கின்றன.

மரண தண்டனை ஒருபோதும் குற்றத்தை நிறுத்தவில்லை என்று கூறுகிறார் மரண தண்டனை தொடர்பாக நீண்ட காலமாக பணியாற்றி வரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் யுஹ் செளத்ரி. "குற்றங்களைத் தடுப்பதில் ஆயுள் தண்டனை ஏற்படுத்தும் தாக்கத்தை விட மரண தண்டனை ஒருபோதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாலியல் வன்முறைகளின் புள்ளிவிவரங்கள் நம்மிடையே இருக்கின்றன. ஹைதராபாத் வல்லுறவு வழக்கில் என்கவுண்டர் நடைபெற்ற மறுநாளே திரிபுராவில் ஒரு கொடூரமான வல்லுறவு சம்பவம் நடந்தது. மரண தண்டனையையோ அல்லது போலீஸ் என்கவுண்டரில் நடந்த மரணங்களோ, தற்போதும், நாடு முழுவதும் நடைபெற்றுவரும் பாலியல் வல்லுறவு சம்பவங்களை குறைக்கவோ எந்தவித வித்தியாசத்தையோ ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. "

"மரணதண்டனைக்கான கோரிக்கையானது, பெண்களின் பாதுகாப்பு என்ற அடிப்படை பிரச்சனையிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்கான ஒரு சுலபமான வழியாக மாறிவிட்டது" என்கிறார் யுஹ். "வர்மா கமிட்டியின் அறிக்கையில் பெண்கள் மீதான வன்முறை தொடர்பான பிரச்சினைகள் என்ன என்பதை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சிறந்த காவல்துறை மற்றும் பெண்களுக்கு ஆதரவான அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆனால், வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் இன்னும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நிர்பயா நிதியைக்கூட இதுவரை ஒழுங்காக பயன்படுத்தவில்லை. ஆனால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டு, பெண்களின் பாதுகாப்புக்காக கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பதாக அரசாங்கம் பொதுமக்களுக்கு செய்தியை கொடுத்துவிடும். ஆனால், பெண்களுக்கு தேவையான அடிப்படை சீர்திருத்தங்கள் செய்யாமல் இருக்க எளிதான ஒரு வழியாக இது மாறிவிடும்" என்று யுஹ் செளத்ரி கூறுகிறார்.

மரண தண்டனை விதிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் என்ன?

மரண தண்டனையுடன் இணைந்த பல தத்துவ ரீதியிலான, தார்மீக ரீதியிலான மற்றும் நடைமுறை சிக்கல்களும் உள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விவாதத்தில் பொதுமக்களின் கருத்தை துருவப்படுத்தும் சிக்கலாக இது உருவெடுக்கிறது. பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்று ஒரு தரப்பு கோருகையில், மரண தண்டனைக்கு எதிராக வலுவான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. மரண தண்டனையுடன் தொடர்புடைய தத்துவார்த்த சிக்கல்களை விவரிக்கும் யுஹ், " ஒரு குடிமகனைக் கொல்லும் உரிமை அரசுக்கு இல்லை என்பதே அடிப்படையில் கருத்தியல் வேறுபாடு. அரசு மற்றும் குடிமக்களின் சமூக ஒப்பந்தத்தின் எல்லையின் வரம்பை மீறியது தூக்கிலிடுவதற்கான உரிமை. கடவுள் கொடுத்த உயிரை எடுக்க மனிதனுக்கு உரிமை இல்லை என்பது மதரீதியாகவும், தார்மீகரீதியாகவும் முன்வைக்கப்படும் வாதம் ".

மரண தண்டனை நடவடிக்கைகள் என்பது தவறுகளுக்கு அப்பாற்பட்டவையா?

இந்த கருத்தியல் வாதங்களைத் தவிர, மரண தண்டனை செயல்முறையில் பல தவறுகள் இருப்பதான அச்சங்களும் காணப்படுகிறது.

"மரண தண்டனை செயல்முறை தன்னிச்சையானது அல்லது ஏதேச்சதிகாரமானது. இதில் தவறுகளுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மரண தண்டனை செயல்முறை என்பது, சட்டத்தை விட நீதிபதிகளின் விருப்பத்திற்கு உட்பட்டது என்பதை உச்ச நீதிமன்றம் பல முறை ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது, தூக்கிலிட முடிவு செய்யும் ஒருவரின் குற்றம் என்ன, சட்டம் என்ன சொல்கிறது போன்ற அனைத்துமே நீதிபதிகள் என்ன நினைக்கிறார்கள், என்ன உணர்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படுகிறது. பல வழக்குகளில், மரணதண்டனை வழங்கப்பட்ட பல தசாப்தங்களுக்கு பிறகு, நீதிமன்றங்கள் குற்றவாளிகளை விடுவித்திருப்பதையும் பார்க்க முடிகிறது".

இதற்கான ஒரு உதாரணத்தையும் யுஹ் செளத்ரி கொடுக்கிறார், "அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது உச்சநீதிமன்றம். அது மட்டுமல்ல, 16 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்கு இழப்பீட்டையும் அறிவித்தது. நீதிபதியும் மனிதன் தான். மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆகவே மரணதண்டனை விதிக்கும் இந்த செயல்முறை கூட தவறுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல.

ஒரு முறை மரணதண்டனை என்பது வழங்கப்பட்ட பிறகு, நீதிச் செயல்பாட்டில் தவறு இருப்பதாகவோ, அந்த நபர் குற்றவாளி அல்ல என்றோ கண்டறியப்பட்டால், எந்தவித மாற்றத்தையும் செய்யமுடியாது. அது மிகப்பெரிய தவறாகிவிடும்.

பெண்கள் பெயரால் மரண தண்டனை

பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்து 'ஹக்' என்ற அமைப்போடு இணைந்து நீண்ட காலமாக பணியாற்றும் பாரதி அலி இதைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா? "தூக்குதண்டனை விதித்துவிட்டால் ஆணாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது என்று நினைத்துக் கொள்கிறார்கள்! பெண்களின் நலனுக்காக, அவர்களுக்கு நீதியை உறுதி செய்வதன் அடிப்படையில் மரண தண்டனை நியாயப்படுத்தப்படுகிறார்கள்" என்கிறார் பாரதி அலி.

மோசமான நீதி விசாரணை, 'பாதிக்கப்பட்டவர்களை வெட்கப்பட வைக்கும்' அல்லது பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சுமத்தும் மனோபாவமும் மாறாத வரையிலும் எந்தவிதமான பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்கிறார் பாரதி அலி. நகரங்கள் மற்றும் கிராமங்களின் அடிப்படை உள்கட்டமைப்பை பெண்களுக்கு ஆதரவானதாக மாற்ற வேண்டும். அப்ப்போதுதான் அவர்கள் சாதாரண மனிதனைப் போல அன்றாட வாழ்க்கையை வாழ முடியும்.

ஊடக அழுத்தம் மற்றும் பொதுக் கருத்து காரணமாக தூக்கு தண்டனை கொடுக்கப்படலாமா?

தூக்குதண்டனையை தீர்மானிப்பதில் ஊடக அழுத்தம் மற்றும் பொதுக் கருத்தின் பங்கு குறித்து கூறும் யுஹ் செளத்ரி, " ஊடக அழுத்தம், பொதுக் கருத்து, தூக்குதண்டனை கோரிக்கை என்பதுபோன்ற எந்தவொரு விஷயமும் நீதிமன்ற விசாரணையையோ, தீர்ப்பையோ அல்லது கருணை மனுவின் மீதான முடிவெடுக்கும் தன்மையையோ பாதிக்கக்கூடாது. ஆனால் உண்மையில் நீதிபதியும் ஒரு மனிதர் தான், பொதுக் கருத்தின் அழுத்தத்தின் கீழ் அவர்களும் வருகிறார்கள். இந்த விஷயத்தில் ஊடகங்கள் எவ்வாறு மக்கள் கருத்தை உருவாக்குகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது இறுதி முடிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறுகிறார்.

அதுமட்டுமல்ல, "அரசாங்கங்களும் தங்களுக்கு வசதியான நிலைப்பாட்டை எடுக்கின்றன. பொதுமக்களின் சீற்றத்தை அமைதிப்படுத்துவதற்காக நீதிபதிகள் பல முறை மரண தண்டனை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் நான் அதை, மரண தண்டனை என்று கூறமாட்டேன். 'மனித தியாகம்' அல்லது "நரபலி" என்றே கூறுவேன். என்கிறார் யுஹ் செளத்ரி..

'பழிவாங்கும்' நீதி அமைப்பு மற்றும் 'தனிமைப்படுத்தப்பட்ட' நீதி அமைப்பு

இந்திய நீதித்துறை அமைப்பில், பாதிக்கப்பட்டவரின் மறுவாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கும் நிலையே காணப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்திற்கும், ரத்தன் சிங் என்பவருக்குமான வழக்கில் தீர்ப்பை வழங்கும்போது, உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் இவ்வாறு தெரிவித்தார்: "குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற வேண்டுகோளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களுடைய உறவினர்களையும் பற்றி பெரிய அளவில் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட நேரிடுகிறது என்பது நீதித்துறையின் பலவீனம். புதிய சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இந்த அமைப்பின் பலவீனத்தை சரிசெய்ய சரிசெய்ய முடியும் " என்று அவர் கூறினார்.

இருப்பினும், 'விக்டிமாலஜி' பற்றிய அனைத்து நவீன ஆராய்ச்சிகளும் பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர்களுக்கு முழுமையான மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொள்கின்றன. ஆனால் இந்தியாவில், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பழிவாங்கும் நீதியின் இந்த புயலில், பாதிக்கப்பட்டவரின் மறுவாழ்வு பற்றிய கேள்வி எங்கோ தொலைந்து போகிறது... "

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: