மாணவர் தற்கொலைகளில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் - 5 ஆண்டில் 27 பேர்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (சனிக்கிழமை) வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: "சென்னைக்கு ஐஐடிக்கு முதலிடம்: 5 ஆண்டுகளில் 27 பேர் மாணவர்கள் தற்கொலை"

இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலேயே, சென்னை ஐ.ஐ.டி.யில்தான் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகமாக உள்ளது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யை சோ்ந்த 27 மாணவா்கள் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் தெரியவந்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் விவரங்களையும், அதற்கான காரணங்களையும், தற்கொலைகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆா்டிஐ ஆா்வலா் சந்திரசேகா் கௌா் கோரியிருந்தாா். அவருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் உயா்கல்வித் துறை அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஐஐடி மாணவா்கள் 27 போ் தற்கொலை செய்துகொண்டனா். இந்தக் காலகட்டத்தில், சென்னை ஐஐடியில் 7 மாணவா்களும், காரக்பூா் ஐஐடியில் 5 மாணவா்களும், டெல்லி ஐஐடியில் 3 மாணவா்களும், ஹைதராபாத் ஐஐடியில் 3 மாணவா்களும் தற்கொலை செய்துகொண்டனா்.

மும்பை ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி, ரூா்கி ஐஐடி ஆகியவற்றில் தலா 2 மாணவா்களும், வாரணாசி ஐஐடி, தன்பாத் ஐஐடி, கான்பூா் ஐஐடி ஆகியவற்றில் தலா ஒரு மாணவரும் தற்கொலை செய்துகொண்டனா். இந்தூா், பாட்னா, ஜோத்பூா், புவனேஸ்வர், காந்திநகா், ரோபாா், மண்டி, திருப்பதி, பாலக்காடு, பிலாய், ஜம்மு, கோவா, தாா்வாட் ஆகிய இடங்களில் உள்ள ஐஐடிக்களில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாணவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல"

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நலிந்த நிலையில் உள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்க உதவும் யோசனைகள் என்ற தலைப்பில் ஒரு ஆங்கில வார இதழில் கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"இந்தியாவில் வளர்ச்சி மந்தநிலை நிலவுகிறது. பொருளாதாரத்தில் ஆழ்ந்த சோர்வு காணப்படுகிறது. இந்த பின்னடைவை சரி செய்ய முதலில் இந்த பிரச்சனையை மோதி அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.

அதன் தீவிரத்தன்மையை அங்கீகரிப்பதுடன், விமர்சிப்பவர்களுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது. இது தற்காலிகமான பிரச்சினை என்று கருதுவதை நிறுத்த வேண்டும். தங்களுக்கு அசௌகரியான செய்திகளை முடக்கக்கூடாது.

பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. முடிவு எடுப்பது மட்டுமின்றி, யோசனைகள், திட்டங்கள் ஆகியவை பிரதமரை சுற்றியும், பிரதமர் அலுவலகத்திலும் இருக்கிற தனிநபர்களிடம் இருந்தே வருகின்றன. அது, அரசியல் செயல்திட்டத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், பொருளாதாரத்துக்கு அது உதவவில்லை.

மத்திய அமைச்சர்கள் அதிகாரமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: "தமிழக ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை"

வெங்காய விலை உயர்வு மக்களைப் பாதிக்காமல் தடுப்பதற்காக தமிழக ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

"வெங்காயம் விளைவிக்கப்படும் பகுதிகளில் மழை கூடுதலாகப் பெய்துள்ளதால் தற்போது, விளைச்சல் பாதிக்கப்பட்டு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. இது நிரந்தரம் அல்ல. தற்போது, தமிழக அரசு வெங்காயத்தைக் கூடுதல் விலை கொடுத்து வாங்கி, பசுமைப் பண்ணை கடைகளில் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இறக்குமதி வெங்காயம், வரும் 12, 13 தேதிகளில் தமிழகத்துக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை கூட்டுறவுத் துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: