You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைதராபாத் என்கவுன்டர்: சட்டம் தன் கடமையை செய்தது’ - சஜநார்
"சட்டம் தன் கடமையை செய்தது" என ஹைதராபாத்தில் நடைபெற்ற என்கவுன்டர் குறித்து காவல்துறை ஆணையர் வி.சி. சஜநார் கூறியுள்ளார்.
ஹைதராபாத் நகரில் பெண் கால்நடை மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
இதைக் குறித்து சைபராபாத் போலீஸ் ஆணையர் வி.சி. சஜநார் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஹைதராபாத் நகரில் பெண் கால்நடை மருத்துவர் 27 தேதியன்று கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்தபோது நவம்பர் 30ஆம் தேதி இது தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டனர்" எனக் கூறினார்.
”சில அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு அந்த நால்வரையும் டிசம்பர் 4 அன்று விசாரணைக்காக போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்தனர். அவர்களை விசாரித்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணின் சில பொருட்களை இந்த பகுதியில் வைத்திருப்பதாக அவர்கள் கூறியதும் அந்த நால்வருடன் 10 போலீசார் என்கவுன்டர் நடந்த இடத்துக்கு இன்று அதிகாலை வந்தனர். இந்த இடத்தை அடைந்ததும் போலீசாரின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்தனர். பின்னர் அங்கே கிடக்கும் கல், கம்பு போன்றவற்றால் காவல்துறையினரை தாக்க முயன்றனர் " என்று சஜநார் கூறினார்.
"மேலும் அதிகாரிகளிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அவர்கள் மீது காவல்துறையினர் என்கவுன்டர் நடத்தியதாகவும் இதில் இரண்டு போலீசார் காயமடைந்ததாகவும் கூறினார்.
நந்திகாமா காவல் நிலையத்தின் உதவி கண்கானிப்பாளர் வெங்கடேஷ் என்பரும் போலீஸ் கான்ஸ்டேபிள் அரவிந்த் கவுன் என்பரும் காயமடைந்ததாக தெரிவித்த அவர், ஆனால் யாருக்கும் குண்டடி படவில்லை" எனக் கூறினார்.
கர்நாடகாவில் வேறு சில வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகப்படுவதாக கூறிய அவர், இந்த என்கவுன்டர் அதிகாலை 5.45 - 6.15 அளவில் நடந்தது. சம்பவம் நடந்தபோது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கைவிலங்கு போடவில்லை என்றும் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட நால்வரும் 20 முதல் 30 வயதுடையவர்கள் ஆவர். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இது போன்ற வழக்குகள் குறித்து விசாரித்து வருவதாக சஜநார் கூறினார்.
இது குறித்து மனித உரிமை அமைப்புகள் எழுப்பும் கேள்விக்கு என்ன பதில் என நிருபர் கேட்டதற்கு, சட்டம் தன் கடமையை செய்தது எனக் கூறினார் சஜநார்.
பிற செய்திகள்:
- ஹைதராபாத் பாலியல் வல்லுறவு வழக்கு என்கவுன்டர்: கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா?
- ஆர்பிஐ-யின் அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி உதவும்?
- தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கு: ’இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு’ - ஸ்டாலின்
- ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்