You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அரசகுமார் தி.மு.கவில் இணைந்தார்
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசியதால் அந்தக் கட்சிக்குள் கண்டிக்கப்பட்ட பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவர் பி.டி. அரசகுமார் தி.மு.கவில் இணைந்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் இல்லத் திருமணம் நடைபெற்றது. அதில் பேசிய பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் பி.டி. அரசகுமார், "எம்.ஜி.ஆருக்குப் பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் தளபதி அவர்கள்தான். அவர் நாம் வாழ்கிற காலத்தில் வாழ்கிறார். அது நமக்குக் கிடைத்த பெருமை. முதல்வர் இருக்கையைத் தட்டிப் பறிக்க வேண்டுமென நினைத்திருந்தால், ஒரு இரவுக்குள் கூவத்தூர் சென்று அதைச் செய்திருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரம் என்பது ஜனநாயக முறையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறார்" என்று கூறினார்.
பி.டி. அரசகுமாரின் இந்தப் பேச்சுக்கு, பா.ஜ.கவினர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துவந்தனர்.
இதையடுத்து, தனது பேச்சு குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அரசகுமார் விளக்கமளித்தார். "நான் யதார்த்தமாகப் பேசினேன். எதையும் திட்டமிட்டுப் பேசவில்லை. ஜனநாயக ரீதியில் முதல்வராக விரும்புகிறார். முதல்வராக வாழ்த்துகிறேன் என்று சொன்னேன். எனது தனிப்பட்ட உணர்வுகளைத்தான் வெளிப்படுத்தினேன். பா.ஜ.க. கட்சியின் குரலாகவோ, வார்த்தைகளாகவோ வெளியிடவில்லை" என்று விளக்கமளித்தார்.
இந்த நிலையில், பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.எஸ். நாகேந்திரன், பி.டி. அரசகுமாருக்கு கட்டுப்பாடு விதித்து அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டார். அந்த அறிக்கையில், "அவரது இந்தப் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் மீறிய செயலாகக் கருதப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசியத் தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தேசியத் தலைமையில் இருந்து பதில் வரும்வரை அவர் கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ளக்கூடாது" என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமையன்று காலையில் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பி.டி. அரசகுமார் அக்கட்சியில் சேர்ந்தார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பி.டி. அரசகுமார், "என் வாழ்நாளில் இதுவரை கேட்கத் தகாத வார்த்தைகளை எல்லாம் கேட்டு மனம் சோர்ந்து போயிருந்தேன். பல தி.மு.கவினர் என்னிடத்தில், இதற்கு மேல் நீங்கள் பொறுத்திருக்க வேண்டாம் என்று கூறியதைக் கேட்டு, மன மகிழ்வோடு இங்கே சேர்ந்தேன். பா.ஜ.கவின் தேசியத் தலைமையை குறைகூற விரும்பவில்லை. ஒரு சிலரைத் தவிர, மாநிலத்தில் இருப்பவர்கள் அக்கட்சியை வளர விட மாட்டார்கள். என்னை ஒரு உதாரணமாக கொண்டு என்னைப் போல அங்கிருப்பவர்கள் ஒரு முடிவெடுப்பார்கள்" என்று கூறினார்.
இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் ஒன்றுவிட்ட சகோதரரும் சேலம் மாவட்டம் நடுங்குலம் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான விஸ்வநாதன் அவரது மகன்கள் ரஞ்சித், கார்த்தி ஆகியோருடன் அறிவாலயத்திற்கு வந்து மு.க. ஸ்டாலினைச் சந்தித்து தி.மு.கவில் இணைந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: