வோடஃபோன், ஏர்டெல், ஜியோ கட்டண உயர்வு எவ்வளவு?

பட மூலாதாரம், Getty Images
வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ செல்பேசி சேவை நிறுவனங்கள் தங்களின் பிரிபெய்டு (prepaid) வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்த இந்த நிறுவனங்கள், இந்த கட்டண உயர்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை தெரிவிக்கவில்லை.
வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் ஆகியவை இந்த கட்டண உயர்வு டிசம்பர் 3ம் தேதி தொடங்கி அமலுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ள நிலையில், டிசம்பர் 6ம் தேதி இந்த கட்டண உயர்வை அமலாக்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களின் இரண்டாவது காலாண்டு இழப்புகள் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருப்பதாக அறிவித்திருந்தன.
இந்தியாவில் தொலைத்தொடர்பு துறை ஜாம்பான்களாக திகழும் இந்த மூன்று நிறுவனங்களும் சேவை கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், பொதுத்துறையை சோந்த பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டண உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வோடஃபோன் ஐடியா

பட மூலாதாரம், Reuters
வோடஃபோன் ஐடியா 22 முதல் 67 சதவீதம் வரை கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 28 நாளைக்கு ரூ.179 என இருந்த கட்டணம் இனி ரூ.299 ஆக இருக்கும்.
84 நாட்களுக்கு ரூ. 569 என இருந்த கட்டணம் இனி ரூபாய் 699-ஆக இருக்கும். 365 நாட்களுக்கு இதுவரை இருந்துவந்த ரூபாய் 1,699 என இருந்த கட்டணம் இனி 2, 399ஆக இருக்கும்.
இந்த கட்டண உயா்வுக்கு நிதி சுமையை காரணம் காட்டும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.1.17 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறியுள்ளது.

பட மூலாதாரம், Mint/Getty Images
ஏர்டெல்
ஏர்டெல் 14 முதல் 40 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள கட்டணங்களைவிட புதிய கட்டணம் ஒரு நாளைக்கு ரூபாய் 0.50 முதல் 2.85 வரை உயர்த்தியுள்ளது. ஏர்டெல்லில் இதற்கு முன்பு 28 நாளைக்கு ரூ.129 என இருந்த கட்டணம் இனி ரூ.148-யாக இருக்கும்.
84 நாட்களுக்கு ரூ. 448 என இருந்த கட்டணம் இனி ரூபாய் 598-அக இருக்கும். 365 நாட்களுக்கு இதுவரை இருந்துவந்த ரூபாய் 1,699 என இருந்த கட்டணம் இனி 2, 398ஆக இருக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ

பட மூலாதாரம், Getty Images
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் "ஆல்-இன்-ஒன்“ திட்டத்தில் 40 சதவீதம் வரை கட்டண உயர்வை அதிகரிக்க இருப்பதாக உள்ளது. ஆனால் 300 சதவீதம் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாக கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












