You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ப.சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைப்பு: வீட்டு சாப்பாட்டுக்கு அனுமதி
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என பரவலாக அறியப்பட்ட வழக்கிகில் கைதாகியுள்ள இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கள் காவலில் அவரை விசாரிக்க மேலும் ஒரு நாள் தேவை என்று அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை நீதிபதி அஜய் குமார் குகார் நிராகரித்தார்.
அதனால், அமலாக்கத்துறையின் காவலில் இருந்த சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நவம்பர் 13 அன்று அவரது நீதிமன்றக் காவல் முடிகிறது.
திகார் சிறையில் சிதம்பரத்திற்கு வீட்டில் சமைத்து கொண்டுவரப்படும் உணவை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம், தனி அறையைப் பயன்படுத்தவும் மருந்துகள் உட்கொள்ளவும் மேற்கத்திய கழிப்பறையைப் பயன்படுத்தவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
திகார் சிறையில் அவர் இருந்தபோது அமலாக்கத் துறையால் அவர் அக்டோபர் 16 அன்று கைது செய்யபட்டார்.
அக்டோபர் 22 அன்று சிபிஐ பதிவு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. எனினும் அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் பிணை வழங்கப்படவில்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்படவில்லை.
உடல் நலத்தைக் காரணம் காட்டி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்துள்ள பிணை மனு நாளை டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
திங்களன்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.
ப.சிதம்பரத்தின் மீதான ஊழல் புகார் தொடர்பாக அவரை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில்தான் தற்போது சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்