மகாராஷ்டிரா தேர்தல்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன?

ஆதித்ய தாக்கரே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆதித்ய தாக்ரே

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பாஜக - சிவசேனா கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மொத்தம் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் தற்போது வரை பாஜக 102 தொகுதிகள், சிவ சேனா 69 தொகுதிகள் என இவ்விரு கட்சிகள் கொண்ட கூட்டணி 171 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முறையே 44 மற்றும் 51 தொகுதிகள் என மொத்தம் 95 தொகுதிகளில் முன்னிலையுடன் இரண்டாவது இடத்தை வகித்து வருகிறது.

முன்னிலை வகிக்கும் நட்சத்திர வேட்பாளர்கள் யார்?

மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தான் போட்டியிட்ட நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் 20,350 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதற்கடுத்த இடத்தில், 9,216 வாக்குகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆசிஷ் தேஷ்முக் உள்ளார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் சவான், 49,134 வாக்குகளுடன் போகார் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் இது 67.59 சதவீதம். மற்ற கட்சியின் வேட்பாளர்கள் இவரை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளனர்.

தேவேந்திர பட்னவிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேவேந்திர பட்னவிஸ்

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்ய தாக்ரே தான் போட்டியிட்ட ஒர்லி தொகுதியில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 74.67% பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் 4,749 வாக்குகளை (12.68%) மட்டுமே பெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவின் பிரதான மாநில கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் உறவினரான அஜித் பவார் பாராமதி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட இவர் 90,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

சரத் பவாரின் மற்றொரு உறவினரான ரோகித் பவாரும் கர்ஜாத் ஜம்கேட் முன்னிலையில் உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்சய் பண்டிதராவ் முண்டே பர்லி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

மகாராஷ்டிராவின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், மத்திய அமைச்சருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் தீரஜ் தேஷ்முக் லத்தூர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :