எடியூரப்பா தனது பெயரிலிருந்து ஒரு 'D'யை நீக்கிய காரணம் என்ன?

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசிக்காக

அவரது பெயரில் ஒரேயொரு எழுத்தை மட்டுமே மாற்ற வேண்டியிருந்தது. அதை செய்ததும், கர்நாடகத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்றுள்ளார் அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா.

அதாவது, சோதிட நிபுணர் சொன்னதை அப்படியே நடைமுறைப்படுத்திவிட்டார் எடியூரப்பா. அதன் பிறகு, சோதிடர் சொன்னது நடந்துவிட்டது. அப்படிதான் எடியூரப்பா நினைப்பதை போன்றுள்ளது.

நம்புவதற்கு கடினமாக இருக்கிறதா? நேற்று (வெள்ளிக்கிழமை) காலை கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் மாநில அரசை அமைப்பதற்காக எடியூரப்பா கொடுத்த உரிமை கோரல் கடிதத்தை பாருங்கள். அதில் வழக்கமாக எடியூரப்பாவின் ஆங்கில எழுத்தில் வரும் ஒரு 'D' குறைக்கப்பட்டிருக்கும்.

அதாவது, 2008ஆம் ஆண்டு கர்நாடகத்தின் முதலமைச்சராக பதவியேற்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக தனது பெயரில் கூடுதலாக இணைத்துக்கொண்ட ஒரு 'D'-ஐ அவர் தற்போது நீக்கியுள்ளார்.

இன்னும் கடந்த காலத்திற்கு சென்று பார்த்தோமேயானால், 2017ஆம் ஆண்டு முதலமைச்சராக வெறும் ஒரு வாரகாலத்திற்கு மட்டுமே நீடித்த பிறகு, தனது சோதிடரை சந்தித்த எடியூரப்பா, அவரது ஆலோசனையின்படியே முதல் முறையாக தனது பெயரில் ஒரு 'D' இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

"இது அதிகார அரசியலின் சகாப்தம். அரசு அமைக்கப்பட்ட விடயத்தை எவ்வித கருத்தியலுடனும் ஒப்பிட வேண்டாம். மத்தியில் உள்ள தலைமை கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற விரும்பியது. அதை மாநிலத்தின் மூத்த தலைவர் (எடியூரப்பா) நிறைவேற்றியுள்ளார்" என்று பிபிசியிடம் பேசிய கர்நாடக மாநில பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.

இதில் ஆச்சர்யமளிக்கும் விடயம் என்னவென்றால், சோதிடத்தில் நம்பிக்கை கொண்டவராக அறியப்படும் எடியூரப்பா, 'அமங்கலமான மாதமாக கூறப்படும் ஆஷாதா முடிவடைவதற்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையிலும், முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

'அஷாதா' மாதத்தின்போது பொதுவாக புதிய திட்டங்களோ அல்லது செயல்பாடுகளோ தொடங்கப்படுவதில்லை. இதை முந்தைய காலங்களில் எடியூரப்பாவும் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

ஆனால், கர்நாடக அரசியலை பொறுத்தவரை எடியூரப்பாவுக்கு மட்டும்தான் சோதிடத்தில் நம்பிக்கை உள்ளது என்று கூறுவது சரியாக இருக்காது.

சென்ற வாரம், கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை விட அவரது சகோதரர் ரேவண்ணா பற்றிதான் பேச்சு அதிகமாக இருந்தது.

ஆம், அவர் கடந்த வாரம் கர்நாடக மாநில சட்டப்பேரவையில் தனது சகோதரர் குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருக்கையில் வெறும் காலுடன் பேரவைக்குள் வந்தார்.

அதுமட்டுமின்றி, அதே நேரத்தில் அவரது கைகளில் இரண்டு மூன்று நாட்களுக்கு எலுமிச்சை பழமும் காணப்பட்டது பலரது கேலிக்குள்ளானது.

கர்நாடக மாநில அரசியலை பொறுத்தவரை, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை போன்று அவரது மகனான ரேவண்ணாவும் சோதிடவியலில் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார்.

உதாரணமாக, கடந்தாண்டு மே மாதம் மாநில அமைச்சராக பதவியேற்ற ரேவண்ணா, மாதத்திற்கு ஒருமுறையாவது தலைநகர் பெங்களூருவிலிருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தனது வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

காரணம் என்னவென்றால் ரேவண்ணாவுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லம் வாஸ்து ரீதியாக சரியாக இல்லை என்பதுதான்.

இந்த விவகாரம் சட்டப்பேரவையில் பேச்சு பொருளான பிறகு பேசிய குமாரசாமி, "கடவுள் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் கோயிலுக்கு செல்கின்றனர். அப்போது நீங்கள் எலுமிச்சை பழத்தை பிரசாதமாக கொண்டுவர மாட்டீர்களா? எனது சகோதரர் மிகுந்த தெய்வ பக்தி கொண்டவர். ஆனால், பலர் அவரை தேவையில்லாமல் சூனியம் செய்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர்" என்று கூறினார்.

அப்போது குமாரசாமிக்கு அருகிலேயே அமர்ந்திருந்த எடியூரப்பா ஒருவிதமான சிரிப்பை வெளிப்படுத்தினார்.

"கடவுள் பக்தியில் ரேவண்ணாவுடன் எடியூரப்பாவை மட்டுமே ஒப்பிட முடியும். தயவுசெய்து எனது பெயரை வெளியிட்டு விடாதீர்கள். இப்போதிருக்கும் நிலையில், யார் எதை தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியாது" என்று பிபிசியிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :