You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாகப்பட்டினத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது தாக்குதல்
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாட்டு இறைச்சியால் செய்யப்பட்ட சூப் சாப்பிட்டதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதால் அவர் தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. இது தொடர்பாக நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூரில் பொரவச்சேரி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமது பைசான் (24). இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் இரு புகைப்படங்களை வெளியிட்டார்.
இதில் மாட்டு இறைச்சியினால் செய்யப்பட்ட சூப் சாப்பிடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. "ஆயிரம்தான் சொல்லு மாட்டு கறி மாட்டு கறி தான்யா...." என்றும் அதில் எழுதியிருந்தார்.
இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், நேற்று மாலையே பைசானைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
இதில் பைசானின் தோளிலும் முதுகுப் பகுதியிலும் காயம் ஏற்பட்டது. அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இது குறித்து பைசானிடம் கேட்டபோது, "நான் அந்த மாதிரி ஒரு பதிவை இட்டதும், இவர்களில் சிலர் அந்தப் பதிவிலேயே என்னை மிக மோசமாகத் திட்டினர். அதன் பிறகு அந்த கமெண்ட்களை அழித்துவிட்டனர். பிறகு நேற்று மாலை நான் பொரவச்சேரி மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள மந்தையில் உட்கார்ந்திருந்தபோது கும்பலாக வந்து என்னைத் தாக்கினர்" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தினேஷ்குமார், அகத்தியன், கணேஷ்குமார், மோகன்குமார் ஆகிய நான்கு இளைஞர்களை கீழ்வேளூர் காவல்துறை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இது குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் கேட்டபோது, "ஏற்கனவே முகமது யூனுஸ் என்பவர் 'மாடு உங்களுக்குக் கடவுள் என்றால் அதை நாங்கள் உண்போம்' என்ற வாசகங்களுடன் தனது ஹோட்டலில் விளம்பரம் செய்தார். அது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த இளைஞர் அந்த வாசகங்களை தனது வாகனத்தில் வைத்துக்கொண்டு எங்கள் இளைஞர்களுடன் வம்பிழுத்தார். அதில்தான் இந்தத் தாக்குதல் நடந்தது. நாங்கள் புகார் கொடுத்தபோதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் இது நடந்திருக்காது" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக கீழ்வேளூர் காவல்துறை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கருத்தைப் பெற நடந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக, #WeLoveBeef, #BeefForLife, #Beef4life ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.
மாட்டு இறைச்சி தனக்கு பிடிக்கும் என்றும், அதனை உண்பது தனது உரிமை என்றும் கோபிநாத் பெய்ஜோ என்பவர் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
டுவிங்கிள் ஸ்டார் என்ற பெயரில் பதிவிட்டுள்ளவர், நாம் விதைப்பதையே அறுவடை செய்வோம். நீங்கள் மாட்டு கறி சாப்பிட்டால், நீங்கள் மாடாக மறுபடியும் பிறக்கிறபோது, உங்களை அவர்கள் சாப்பிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்