You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகா அரசியல் குழப்பம் - காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் V பா.ஜ.க - இதுவரை நடந்தவை 6 கேள்வி பதில்களில்
கர்நாடகாவில் அரசு மற்றும் அரசியலில் குழப்பம் நீடிக்கிறது. கர்நாடகா அரசியல் விவாகரம் இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கிறது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மக்களவையில் 'சர்வாதிகாரம் ஒழிக, குதிரைபேர அரசியலை நிறுத்துங்கள்' என்று கோஷமிட்டனர், அவர்களுடன் ராகுல் காந்தியும் இணைந்து கோஷமிட்டார்.
கர்நாடகாவில் கடந்த 13 மாதங்களாக காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இப்போது சில சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்ததை அடுத்து அங்கு அரசியல் ஸ்திரமற்றதன்மை நிலவி வருகிறது.
கர்நாடகா அரசியலில் நிலவி வரும் குழப்பத்தை இந்த 6 கேள்வி பதில்களில் விளக்கி உள்ளோம்.
சட்டப் பேரவையில் ஒரு எண்ணிக்கை விளையாட்டு
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த காங்கிரசுக்கு சபாநாயகரையும் சேர்த்து 79 உறுப்பினர்கள் உள்ளனர். மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 37 உறுப்பினர்கள். மேலும் ஒரு பகுஜன் சமாஜ் உறுப்பினரும், 2 சுயேச்சை உறுப்பினர்களும் ஆதரிப்பதால் ஆளும் கூட்டணி அரசுக்கு 119 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இப்போது என்ன குழப்பம்?
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். இதனால் ஆளும் கூட்டணிக்கு நெருக்கடி தொடங்கியது.
ஏன் பதவி விலகல் முடிவு?
பாரதிய ஜனதா கட்சி இதன் பின்னணியில் இருக்கிறது, ஆப்ரேஷன் கமலா என்ற பேரில் அவர்கள் ஆட்சியை கலைக்கும் பணியை முன்னெடுத்துள்ளார்கள் என்று பரவலாக கூறப்படுகிறது. ஆனால், பா.ஜ.கவின் மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் இதனை மறுத்துள்ளார். அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியும், வளர்ச்சி திட்டங்களை கிடப்பில் போடுவதும் தங்கள் பதவி விலகலுக்குக் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
காங்கிரஸ் சொல்வது என்ன?
காங்கிரஸ் எம்எல்ஏகள் தங்களது சொந்த விருப்பப்படி பதவி விலக முன்வரவில்லை. பாஜகவின் மிரட்டல் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் பேரவை குழு தலைவர் சித்தராமையா கூறி உள்ளார். மேலும், கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக பதவி விலகியுள்ள எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்படி காங்கிரஸ் கோரிக்கைவிடுத்துள்ளது.
குமாரசாமியில் நிலைபாடு என்ன?
அதிருப்தியாளர்களை சமாளிக்கும் வகையில், ஒட்டு மொத்தமாக அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ளதாக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
தற்போதைய சூழல் என்ன?
பதவி விலகல் கடிதங்களை பரிசீலித்த சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் 8 உறுப்பினர்களின் கடிதங்களை நிராகரித்துள்ளார். இவர்கள் இன்று (புதன்கிழமை) உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்