கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட, தோண்ட தொல்பொருட்கள்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: 'கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு'
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கீழடியில் 2015-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல் பொருட் கள் கண்டறியப்பட்டன. இவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்துள்ளது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இந்த அகழாய்வு துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஆண்டு ஏப்.18 முதல் செப். 30 வரை நடைபெற்றது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வுக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

நிதி ஒதுக்கீடு தாமதம், மக்களவைத் தேர்தல் போன்ற காரணங் களால் அகழாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு ரூ.47 லட்சம் ஒதுக்கப்பட்டு, ஜூன் 13-ல் பணிகள் தொடங்கின. இந்நிலை யில், கருப்பையா என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் முதற்கட்டமாக 4 குழிகள் தோண்டியதில் 5 மீட்டர் ஆழத்தில் பழங்கால மண்பாண்ட ஓடுகள், பானைகள், அழகுப் பொருட்கள் கிடைத்தன.
முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நேற்று குழிகளைத் தோண்டியபோது 2 அடி ஆழத்திலேயே நீண்ட சுவர் ஒன்று தென்பட்டது. அதனருகே பாதி அளவுக்கு மற்றொரு சுவரும் இருந்தது.
இந்த இரண்டு சுவர்களிலும் மூன்று அடி நீளம், ஒரு அடி அகலம், 10 செ.மீ. உயரம் கொண்ட செங்கற்கள் இருந்தன. கற்கள் நல்ல உறுதித் தன்மையுடன் உள்ளன. 'இந்தச் சுவர் கட்டிடத்தின் மேற்பகுதியா, கீழ்பகுதியா என்று கண்டறிய முடிய வில்லை. முழுமையாகத் தோண்டிய பிறகுதான் உறுதியாகக் கூற முடியும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
5-ம் கட்ட அகழாய்வு தொடக்கத்திலேயே இரட்டைச் சுவர் கண்டறியப்பட்டுள்ளதால் தோண்ட, தோண்ட அதிக எண்ணிக்கையில் தொல்பொருட்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "உதகையில் வெப்பம் அதிகரிப்பு"
1960 -2018 ஆகிய காலக்கட்டத்திற்கு இடையேயான தரவுகளை ஆராய்ந்ததில், 90-களுக்கு பிறகு உதகையில் வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
1990 - 2018 இடையேயான காலக்கட்டத்தில், பல ஆண்டுகள் வெப்பமாக இருந்துள்ளது. இது சூழலியல் மற்றும் அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலில் பெரும் தாக்கம் செலுத்தும் என்று இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய எஸ் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

தினத்தந்தி: "முதலில் அரசு பள்ளிகளை மேம்படுத்துங்கள் பின் நீட் தேர்வு வையுங்கள்"

பட மூலாதாரம், Twitter
நிறைய அரசு பள்ளிக்கூடங்களில், போதுமான ஆசிரியர்கள் இல்லை. அந்த வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆவது? அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அப்படி வசதிகளை செய்து கொடுத்த பின், 'நீட்' தேர்வு உள்பட எந்த தேர்வை வேண்டுமானாலும் நடத்தட்டும் என்று நடிகை ஜோதிகா பேசியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.
ஜோதிகா கதை நாயகியாக நடித்து, அறிமுக இயக்குநர் கவுதம் ராஜ் இயக்கிய படம் 'ராட்சசி'. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தின் அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
அந்நிகழ்வில் ஜோதிகா இவ்வாறாக பேசியதாக கூறுகிறது அந்நாளிதழ்.
"இது, அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பற்றிய கதை. இதேபோன்ற கதைகளுடன் ஏற்கனவே 'பள்ளிக்கூடம்', 'சாட்டை' ஆகிய படங்கள் வந்துவிட்டதாக என்னிடம் கூறினார்கள். இதுபோன்ற நல்ல கருத்துள்ள கதையம்சம் கொண்ட நூறு படங்கள் வந்தாலும் பரவாயில்லை. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்ற அக்கறை எல்லோருக்கும் வருவது நல்ல விஷயம்தான்." என்று ஜோதிகா கூறியதாக விவரிக்கிறது தினத்தந்தி.


பட மூலாதாரம், இந்து தமிழ்

தினமணி: 'தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர்: ஆணையம் உத்தரவு'
உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களுக்கான 40.24 டிஎம்சி நீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது என்கிறது தினமணி நாளிதழ்.
"காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காவிரியில் நீர் திறந்து விடுவது தொடர்பாக காவிரிப் படுகைப் பகுதிகளில் உள்ள நீரியல் சூழல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, காவிரிப் படுகைப் பகுதிகளில் மழைப் பொழிவு பற்றாக்குறையாக இருப்பது குறித்தும், பருவமழை தாமதமாகிவிட்டது குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாதம்தோறும் பிலிகுண்டுலுவில் விடப்பட வேண்டிய ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி நீரையும், ஜூலைக்கான 31.24 டிஎம்சி நீரையும் விடுவிப்பதை கர்நாடகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்திய வானியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஜூன் 1 முதல் ஜூன் 20-ம் தேதி வரையிலான காலத்தில் கிருஷ்ணராஜசாகர், கபினி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு பற்றாக்குறையாக இருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கர்நாடகத்தில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களுக்கு ஜூன் 24 வரையிலான காலத்தில் ஒட்டுமொத்தமாக 1.77 டிஎம்சி தண்ணீர் உள்வரத்து இருந்ததும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. பிலிகுண்டுலு பகுதிக்கு ஜூன் 23 வரையிலான காலத்தில் 1.885 டிஎம்சி நீர் வந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் ஜூன், ஜூலைக்குரிய மாதாந்திர நீரைத் திறந்துவிட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம், காவிரிப் படுகையில் உள்ள நீர்த் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு, நீரியல் சூழல் ஆகியவை குறித்து கர்நாடகத்தின் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல, புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி புதுச்சேரிக்கு நீர் திறந்து விடுவது தொடரும்" என்று காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் செய்தியாளர்களிடம் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












