ஹைட்ரோ கார்பன்: விவசாயிகள் குளத்திற்குள் இறங்கி அரை நிர்வாண போராட்டம்

ஹைட்ரோ கார்பன்: தமிழக விவசாயிகள் குளத்திற்குள் இறங்கி அரை நிர்வாண போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்'

குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

பட மூலாதாரம், தினத்தந்தி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில், குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல்வேறு இடங்களில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து மேமாத்தூர் வரை கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இது தொடர்பாக பல இடங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நேற்று நாகையை அடுத்த பாலையூரில் உள்ள அய்யனார் கோவில் குளத்திற்குள் இறங்கி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் முதல் ராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதி அளித்த மத்திய அரசை கண்டிப்பது. இந்த திட்டங்களை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் டெல்டா மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவர்கள் அங்குள்ள வெள்ளையாற்றில் இறங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது மீனவர்களையும், மீன் இனபெருக்கத்தையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம். கடல் வளத்தை அழிக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இதனால் லட்சக்கணக்கில் விவசாய மற்றும் மீனவ குடும்பங்கள் அழியும். வேதாந்தா குழுமத்தின் திட்டத்தை முறியடிப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

Presentational grey line
தேர்தல்

பட மூலாதாரம், தினமணி

Presentational grey line

இந்து தமிழ்: 'மருந்து, மாத்திரைகள், குளுக்கோஸுக்கு தட்டுப்பாடு'

மருந்து, மாத்திரைகள், குளுக்கோஸுக்கு தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

தமிழக அரசு மருத்துவமனைகளில் 33 வகை மருந்து, மாத்திரைகள், குளுக்கோஸுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை வெளியே வாங்கிக் கொள்ள மருத்துவமனை நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மருத்துவ மேம்பாட்டுக்காக கிடைக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்ட நிதி, மருந்து மாத்திரைகளுக்காக கோடிக் கணக்கில் விரயமாகி வருகிறது. என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

தமிழகத்தில் உள்ள அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்குத் தேவையான, மருந்து, மாத்திரைகளை, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மொத்தமாக கொள்முதல் செய்து அனுப்பி வைக்கிறது.

கடந்த பிப்ரவரி முதல் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது. ஆனால், இதை சரிசெய்ய தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகம் உடனடி யாக நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால், தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமல்லாது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோய் கிருமிகளை அழிக்கும் உயிர்க் கொல்லி மருந்துகள் (ஆன்டிபயா டிக்), இதய நோய், சர்க்கரை நோய், மனநல சிகிச்சை, சில புற்றுநோய் மருந்துகள் மற்றும் மயக்கவியல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவத் துறைகளுக்கான 33 வகை மருந்து, மாத்திரைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி களுக்கான அனைத்து வகை குளுக்கோஸ் பாட்டில்கள் நாளொன்றுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பாட்டில்கள் தேவைப்படுகின்றன. தற்போது இந்த குளுக்கோஸ் பாட்டில்களுக்கே தட்டுப்பாடு நிலவுகிறது.

அதனால், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம், அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்கள், மருத் துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர்கள், சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு, தட்டுப்பாடுள்ள இந்த 33 வகை மருந்து, மாத்திரைகளை வெளியே வாங்கிக்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது.

- இவ்வாறாக விவரிக்கிரது அந்நாளிதழ்.

Presentational grey line
Presentational grey line

தினமணி: 'மத்திய அமைச்சர்களுக்கு மோதி, அமித் ஷா நன்றி'

மத்திய அமைச்சர்களுக்கு மோதி, அமித் ஷா நன்றி

பட மூலாதாரம், Getty Images

கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக்கு சேவை புரிந்ததற்காக மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் நன்றி தெரிவித்தனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. மக்களவையின் பதவிக்காலமான 5 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளன.

இந்நிலையில், பாஜக ஆட்சியின் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மோடியும், அமித் ஷாவும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக மட்டுமன்றி, அதன் கூட்டணி கட்சி அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், அப்னா தளம் கட்சியின் அனுப்பிரியா படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்பு, அனைத்து அமைச்சர்களுக்கும் அமித் ஷா சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது." இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

Presentational grey line

டைம்ஸ் ஆஃப் இந்தியா: ‘இன்று இங்கிலாந்து கிளம்பும் இந்தியா - உலகக்கோப்பையை வெல்லுமா கோலியின் படை?’

'இன்று இங்கிலாந்து கிளம்பும் இந்தியா - உலகக்கோப்பையை வெல்லுமா கோலியின் படை?'

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட்தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இன்று புதன்கிழமை) இந்தியாவிலிருந்து கிளம்பவுள்ளது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.

2019 உலகக்கோப்பையில் 45 லீக் போட்டிகள் மற்றும் 2 அரையிறுதி போட்டி மற்றும் 1 இறுதிப்போட்டி உள்பட மொத்தம் 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

30-ஆம் தேதியன்று உலக கோப்பை தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா இடையே நடைபெறவுள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை ஜூன் 5-ஆம் தேதியன்று நடைபெறும் போட்டியில் சந்திக்கவுள்ளது.

இதுவரை 1975,1979, 1983 மற்றும் 1999 ஆகிய உலகக்கோப்பை தொடர்கள் இங்கிலாந்தில் நடந்துள்ளன. இதில் 1983 உலகக்கோப்பை தொடரை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்ற கடந்த (2015) உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியுற்றது.

இந்நிலையில் இன்று இரவு இந்திய அணி இங்கிலாந்து கிளம்பவுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நிச்சயமாக கோப்பை வென்று நாடு திரும்புவோம் என தெரிவித்தார் என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :