You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி ஏன் அதிமுகவுக்கு முக்கியம்? - தகிக்கும் தேர்தல் வெப்பத்தில் தமிழகம்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது திராவிட முன்னேற்ற கழகம் (திமுக).
அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதும், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலரிடம் திமுக மனு அளித்தது.
15 நாட்களுக்குள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுவது குறித்து பேரவை செயலர் தெரிவிக்க வேண்டிய சூழல் மற்றும் 22 நாட்களில் மக்களவை மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வரவுள்ள நேரத்தில், தமிழகத்தின் அரசியல் நகர்வுகள் எதை காட்டுகின்றன?
தமிழக அரசியல் களத்தின் நிலவரத்தை கூர்ந்து நோக்கும் அரசியல் துறை பேராசிரியர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
மே 19ம் தேதி நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடப்பது ஒரு புறம் இருந்தாலும், அதற்கு முன்னதாகவே இடைத்தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை அதிக கவனத்துடன் ஆலோசித்து அதிமுக அடுத்த நகர்வுகளை முடிவுசெய்கிறது என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
''22 தொகுதிகளில் 11 தொகுதிகளையாவது அதிமுக பெறவேண்டும். இந்த அரசாங்கத்திற்கு இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. சந்தேகம் அதிகமாக இருப்பதால்தான் மூன்று எம்எல்ஏகளை தகுதிநீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்புவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெறும் ஐந்து வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் கூட அதிமுக அரசாங்கத்தை காப்பாற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த எண்ணிக்கைகளுக்கு பின்னால் நாம் புரிந்துகொள்ளவேண்டியது, தொடக்கத்தில் இருந்து இந்த அரசு(ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு உருவான அதிமுக அரசு) நிலையானதாக இல்லை. ஒவ்வொரு முறையும் மத்தியிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆதரவு அதற்கு தேவைப்பட்டது'' என்கிறார் ராமு மணிவண்ணன்.
மேலும், மக்களவை தேர்தல் முடிவுகளும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நிலையாக இருப்பதை தீர்மானிக்கும் ஒரு காரணியாக இருக்கும் என்கிறார் அவர்.
''மத்தியில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கவேண்டும் என்பது அதிமுகவுக்கு முக்கியம். இடைத்தேர்தல் முடிவில் பெறும் எண்ணிக்கையைவிட, பாஜகவின் வெற்றி எந்த அளவில் உள்ளதோ, அதை பொறுத்து அதிமுகவின் பலம் தீர்மானிக்கப்படும். தலைமை இல்லாமல் நடைபெறும் ஓர் ஆட்சியாக அதிமுக ஆட்சி செயல்படுகிறது. இடைத்தேர்தலில் பெரும் வெற்றிபெற்றால் கூட, மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தனிப் பெரும்பான்மை இல்லாமல் ஓர் ஆட்சி அமைத்தால், அதிமுகவின் பிரச்சனைகளுக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்காது,''என்கிறார் அவர்.
தகுதி நீக்கத்திற்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அளித்துள்ளது குறித்து பேசிய அவர், ''அரசியலில் எல்லா விதிகளும் பின்பற்றப்படுவதில்லை. கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற பெயரில் இந்த மூன்று எல்எல்ஏகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விதியை ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் விவகாரத்தில் சபாநாயகர் செயல்படுத்தவில்லை. அரசை தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு நிலையில் செயல்படுவதால், இந்த மூன்று எம்எல்ஏகள் மீதான இந்த நடவடிக்கை பாயும். இதனால்தான் எண்ணிக்கை கணக்கை விட, பாஜகவின் வெற்றியை அதிமுக பெரிதும் நம்பியுள்ளது,''என்கிறார் ராமு மணிவண்ணன்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலுள்ள சமூகவிலக்கம் மற்றும் சேர்த்தல் கோட்பாடு ஆய்வு மையத்தில் தமிழக சமூக அரசியல் பிரச்சனைகள் தொடர்ந்து ஆய்வுகளுக்கு உட்படுத்துகிறார் பேராசிரியர் ராமஜெயம்.
அதிமுக அரசாங்கம் நிலையில்லாமல் இருப்பதால் தனது அரசை தக்க வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் அரசாக மாறிவிட்டது என்கிறார் பேராசிரியர் ராமஜெயம்.
''ஆட்சியின் நிலையற்றதன்மை என்பதைதாண்டி, தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற ரீதியில் செயல்படுவதால், நோட்டீஸ் அனுப்புவது, கட்சி தாவல் தடை சட்டத்தை பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகளில் அது கவனம் செலுத்துகிறது என்பதை அதிமுகவின் செயல்பாடுகள் காட்டுகின்றன. ஜனநாயக அமைப்பு ஒன்று ஆட்சியில் இருப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்தை கேள்விக்குறியாக்கும் அளவுக்கு செயல்படுகிறதோ என்ற அச்சம் எழுகிறது. சட்டமன்றம் என்பது முடிவுகளை எடுக்கும் உயர்ந்த நிலையிலுள்ள ஓர் அமைப்பு. மக்களுக்கான பிரச்சனைகளை பேசவும், தீர்வுகளை முன்வைக்கவும், நாட்டின் வளர்ச்சிக்காக விவாதிக்க வேண்டிய இடமாக இருக்க வேண்டிய சட்டமன்றம், ஆட்சியில் யார் இருக்கவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் எண்ணிக்கை கணக்குகளை பேசும் இடமாக மாறிவிட்டது என தோன்றுகிறது,''என்கிறார் ராமஜெயம்.
மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள், வாக்களித்த மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன என்று கூறும் ராமஜெயம், ''தங்களுக்கு எந்த அரசியல் கட்சியையும், தலைவரையும் பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்க நோட்டாவை வாக்காளர்கள் தேர்வு செய்கிறார்கள். ஆனால் வாக்கை செலுத்திய மக்கள் சிலர் ஓட்டு போட்டதோடு தங்கள் பங்கேற்பு முடிந்துவிட்டது. அரசியல் தலைவர்கள் அவர்களுக்குள் போடும் கணக்குகள்தான் அடுத்த ஐந்தாண்டுகளை தீர்மானிக்கின்றன என உறுதியாக கருதுகிறார்கள்,''என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்