You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெனிசுவேலா 'ராணுவ கிளர்ச்சியை’ முறியடித்ததாக அறிவித்த அதிபர் மதுரோ
வெனிசுவேலாவில், எதிர்கட்சி தலைவர் குவான் குவைடோவால் நடத்தப்பட்ட ராணுவ கிளர்ச்சியை தாம் முறியடித்துவிட்டதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த வன்முறையில், டஜன் கணக்கான பாதுகாப்புப் படையினர் எதிர்கட்சியின் பக்கம் இருந்தனர்.
ஆனால் தொலைக்காட்சி உரை ஒன்றில், அதிபர் மதுரோ தனக்கு எதிராக ராணுவத்தை திருப்பும் முயற்சியில் குவைடோ தோல்வியுற்றதாக தெரிவித்துள்ளார்.
மதுரோ ஆயுதப் படைகளின் கட்டுப்பாடுகளை இழந்துவிட்டதாகவும், அமைதியான முறையில் அவர்கள் தன் பக்கம் மாறுவது நடக்கும் என்றும் குவைடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளால் குவைடோ நாட்டின் இடைகால தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.
ஆனால் தனது போட்டியாளரிடம் தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்பாத மதுரோவை ரஷ்யா, சீனா மற்றும் நாட்டின் ராணுவம் ஆதரிக்கிறது.
என்ன சொல்கிறார் மதுரோ?
போராட்டக்காரர்கள் "தீவிரமான குற்றம்" இழைத்துவிட்டனர் என்றும் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும் தெரிவித்தார் மதுரோ.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, தொடர் மின்வெட்டு, மற்றும் பரவலான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கும் வெனிசுவேலாவில் அதிபர் மற்றும் குவைடோ ஆகிய இருவருமே தங்கள் ஆதரவாளர்கள் தெருவில் இறங்கி போராட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அமெரிக்கா தனக்கு எதிராக சதி செய்வதாக மதுரோ தெரிவித்தார்.
மதுரோ க்யூபாவிற்கு செல்ல விமானம் தயாராக இருப்பதாக அமெரிக்க செயலர் பாம்பேயோ தெரிவித்த கருத்தை மதுரோ மறுத்தார்.
செவ்வாயன்று என்ன நடந்தது?
மூன்று நிமிட வீடியோ ஒன்றில் தன்னுடன் ராணுவ சீருடை அணிந்த பலர் நிற்பது போல் தோன்றும் காணொளி ஒன்றை வெளியிட்டார் குவைடோ.
தலைநகர் கராகஸில் தனக்கு "வீரமான சிப்பாய்களின்" ஆதரவு இருப்பதாக குவைடோ தெரிவித்தார்.
மேலும் வெனிசுவேலா மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவருடன் மற்றொரு எதிர்கட்சி தலைவரான லியோபோல்டோ லோபெஸ் உடனிருந்தார். அவர் 2014ஆம் ஆண்டிலிருந்து வீட்டுக் காவலில் இருந்தார்.
அதன்பிறகு இரு தரப்பு ஆதரவாளர்களும் கராகஸின் பல்வேறு இடங்களில் கூடினர். குவைடோவின் ஆதரவாளர்கள் மற்றும் ஆயுதப் படையினருக்கு மத்தியில் வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்கள் கற்களை எறிந்தனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன, நீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
ஒரு கூட்டத்தின் நடுவே ராணுவ வாகனம் சென்றது வீடியோவாக படம் பிடிக்கப்பட்டது.
செவ்வாய்கிழமை வெனிசுவேலா அரசியல் நெருக்கடியில், வன்முறை மிகுந்த ஒரு தினமாக இருந்தது. வெனிசுவேலாவின் சுகாதார அதிகாரிகள் இந்த வன்முறையில் 69 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.
சிஎன்என் பிபிசி போன்ற தொலைக்காட்சிகள் அங்கு நிறுத்தப்பட்டன.
செவ்வாயன்று சிலி மற்றும் ஸ்பெயின் தூதரகத்தில் குடும்பத்துடன் தஞ்சம் கோரினார் லோபெஸ்.
அமெரிக்க ஃபெடரல் விமான நிர்வாகம் வெனிசுவேலாவின் வான் பரப்பில் 26,000 அடிக்கும் கிழே பறக்கவேண்டாம் என அமெரிக்க விமானங்களுக்கு அவசர தடை விதித்துள்ளது.
வெனிசுவேலாவின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையால் 48 மணி நேரத்துக்குள் அமெரிக்க விமான நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்