You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருச்சியில் கோயில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரண்டு லட்சம் நிவாரணம் - பிரதமர் மோதி அறிவிப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பு சாமி கோயிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு புடிக்காசு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பெண்கள் மூன்று ஆண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துறையூர் அருகே முத்தையம் பாளையம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த கருப்புசாமி கோவிலில் ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் சித்திரா பௌர்ணமியில் இருந்து மூன்றாவது நாள் பிடிகாசு வழங்கும் திருவிழா நடைபெறும். அதாவது வருடம் முழுவதும் இக்கோவிலில் உண்டியலில் சேரும் சில்லறை காசுகளை பக்தர்களுக்கு இக்கோயிலில் உள்ள சாமியார் காணிக்கையாக வழங்குவார்.
அவ்வாறு வழங்கப்படும் சில்லரை காசுகளை தமது வீட்டில் எடுத்துக்கொண்டு போய் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சித்ரா பவுர்ணமி பிடிக்காசு வைபவத்திற்காக பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திண்டிவனம், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருடாவருடம் இக்கோயிலுக்கு வருகை தந்து பிடிகாசுகளை பெற்றுச் செல்வார்கள்.
அந்தவகையில் சித்ரா பௌர்ணமியில் இருந்து மூன்றாம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிடிகாசு தரும் விழா இந்த கருப்பு கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அச்சாமியாரிடம் இருந்து பிடிகாசு பெறுவதற்காக முண்டியடித்துக்கொண்டு முன்னால் சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர்.
கீழே விழுந்தவர்கள் மீது பின்னால் வந்தவர்கள் ஏறி மிதித்து சென்றதால் மூச்சு திணறல் ஏற்பட்டு கூட்டத்தில் சிக்கிய 4 பெண்கள் மூன்று ஆண்கள் உட்பட 7 பேர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து துறையூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் உடல்நலம் பெற வேண்டுவதாகவும் பிரதமர் மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பது ஆயிரமும் வழங்கப்படும்" என்று பிரதமர் மோதி தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்