பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறிய இடத்திற்கு ஊடகங்களை அனுமதித்தது பாகிஸ்தான் - BBC Exclusive

பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததாகக் கூறிய பகுதிக்கு இன்று (புதன்கிழமை) பாகிஸ்தான் அரசு, சில சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்களை அழைத்துச் சென்றது.

பிபிசியின் உஸ்மான் ஜாகித்தும் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார். அங்கு அவர் சென்று தான் கண்ட காட்சிகளை விவரித்திருக்கிறார்.

பாலகோட்டில் உள்ள இந்த பகுதியைத் தான், கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்திய விமானப்படை அழித்ததாகக் கூறியது. பாகிஸ்தானின் கைபர் பக்தூங்வாவில் இந்த இடம் உள்ளது.

தீவிரவாத முகாம் என்று அந்த இடத்தை இந்தியா அழைத்தது. அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெய்ஷ் இயக்கத்தைச் சேர்ந்த ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா கூறியது. ஆனால், வான் தாக்குதலில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் கூறியது. மேலும், அந்த இடம் ஒரு மதரஸா என்றும் அது சேதப்படுத்தப்படவில்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது.

சம்பவ பகுதிக்கு இவ்வளவு தாமதமாக ஏன் அழைத்துச் செல்கிறீர்கள் என்று பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் பிபிசி நிருபர் கேட்டபோது, மக்களை அங்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு சூழ்நிலை சாதகமாக இல்லை என்று பதிலளித்தார்கள். தற்போது ஊடகங்களுக்கு அந்த இடத்தை காண்பிக்க சரியான வாய்ப்பு இருப்பதாக உணர்ந்ததாக அவர்கள் கூறியுள்ளார்கள்.

மதரஸாவில் உள்ள ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு மாணவரிடம் பேசிய நமது நிருபர், கடந்த பிப்ரவரி இருபத்து ஏழாம் தேதி முதல் மார்ச் பதினான்காம் தேதிவரை அந்த இடம் மூடப்பட்டதாக பலகையில் எழுதப்பட்டிருப்பது போல ஏதேனும் நடந்ததா என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள், ஓர் அவசரகால நடவடிக்கையாக தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட மதரஸா தற்போதும் அவ்வாறே உள்ளது என்றார்கள். பிறகு எப்படி இவ்வளவு மாணவர்கள் இங்கிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு, அவர்கள் எல்லாம் உள்ளூர் மாணவர்கள் என்றும் தொடர்ந்து மதரஸா மூடப்பட்டிருப்பதாக பதில் அளித்தார்கள்.

அங்குள்ள சிலரிடம் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி பேச முற்பட்டபோது, அதிக நேரம் பேசக் கூடாது எனக் கூறி அதிகாரிகள் அவசரப்படுத்தியதாக பிபிசி செய்தியாளர் கூறினார். இதன் மூலம், கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், எல்லோருடனும் பேச செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாதது தெளிவாகிறது என்றும் பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதியன்று, பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி இந்திய வான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவித்தன. பாகிஸ்தான் வான் எல்லையில் நுழைந்த இரு இந்தியப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :