You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வடசென்னை மக்களவை தொகுதி: துறைமுகம், தொழிற்சாலைகள் மற்றும் மாறாத வாழ்க்கைதரம்
(வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் பற்றிய பிபிசி தமிழின் பார்வை)
திருவொற்றியூர், டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர் (தனி), ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்டது வட சென்னை மக்களவை தொகுதி.
2008ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் வட சென்னை மக்களவை தொகுதியில், ராயபுரம் துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
கூவம் ஆற்றின் வடக்கு பகுதியில் இருக்கும் சென்னையின் பகுதி வட சென்னை என்று அழைக்கப்படுகிறது. சென்னையின் பழமையான பகுதியாக வட சென்னை கருதப்படுகிறது. இங்குதான் சென்னை தொடங்கியது என்றும் சொல்லலாம்.
சென்னை துறைமுகம் மற்றும் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை ஆகிய முக்கிய இரண்டு அம்சங்களை கொண்டது வட சென்னை தொகுதி.
என்ன பிரச்சனை?
சென்னை துறைமுக விரிவாகத்துக்காக வட சென்னையின் முக்கிய பகுதியான காசிமேட்டில் இருக்கும் மீனவர்கள் இடம் பெயர கோரப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அங்குள்ள மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர்.
வட சென்னைக்குள் அடங்கிய திருவொற்றியூரிலிலும் அதன் ஒட்டிய பகுதிகளிலும் பல தொழிற்சாலைகள் இருப்பதால் இங்கு இருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், அதனுடன் காற்று மாசும் வந்தடைகிறது.
மிக குறுகிய சாலைகளையும், மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதியாகவும் உள்ளது வட சென்னை. இருப்பினும் மத்திய சென்னை தென் சென்னை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை இந்த பகுதிகளில் நாம் காணமுடியாது.
மேலும் இங்கு குடிநீர் பஞ்சம் ஒவ்வொரு கோடையும் தவறாமல் வந்துவிடும் அதுவும் பருவ மழை பொய்த்துப் போனால் தண்ணீர் பஞ்சம் உறுதியாக ஏற்படும். அது இந்த பகுதி மக்களின் பெரும் பிரச்சனையாக உள்ளது.
வட சென்னையை பொறுத்த வரையில் உழைக்கும் வர்க்கத்து மக்களே அதிகம் வசிக்கின்றனர்.
வட சென்னை தொகுதியில் திமுக 10 முறை வெற்றிபெற்றுள்ளது. அதிமுக ஒரே ஒரு முறை மட்டுமே இங்கு வெற்றிபெற்றுள்ளது.
1967 -71ஆம் ஆண்டிலிருந்து 1984 -89ஆம் ஆண்டு வரையும், 1996-98ஆம் ஆண்டு முதல் 2009-2014 நடைபெற்ற தேர்தலிலும் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை பத்துமுறை திமுகவை சேர்ந்தவர்கள் அந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வட சென்னையை பொறுத்தவரை திமுகவின் வலுவான தொகுதி என்று கருத்தப்பட்ட நேரத்தில் அதிமுகவின் வெங்கடேஷ் பாபு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்றார்.
ஜெயலலிதா தலைமையிலான அரசு, திமுகவின் வலுவான தொகுதியையும் அதிமுகவுக்கு சாதகமாக மாற்றியது.
தொடர்பான செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்