You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதியின் ஏழைப் பெண்களுக்கு சிலிண்டர் எரிவாயு வழங்கும் திட்டம் வெற்றியா? #RealityCheck
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, உண்மை சரிபார்க்கும் குழு, பிபிசி
நாடு முழுவதும் கிராமப்பகுதியில் வசிக்கும் கோடிக்கணக்கான குடும்பத்தினருக்கு சிலிண்டர் எரிவாயு வழங்கும் அரசின் பேராவலுடைய பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் அதிக மாசு உண்டாக்கும் எரிவாயுவின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்தை '' அரை வேக்காட்டுத்தனமானது. மேலும் கட்டமைப்பு ரீதியாக குறைபாடுடையது'' என விமர்சித்திருக்கிறது.
உண்மை என்ன?
இந்தியாவில் எல்பிஜி எனும் திரவ பெட்ரோலிய வாயு சிலிண்டர் பயன்பாட்டை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க மோதி அரசின் இத்திட்டம் முக்கிய காரணமாக விளங்குகிறது. ஆனால் எரிவாயு சிலிண்டரின் விலை காரணமாக ஒரு சிலிண்டர் தீர்ந்ததும் மீண்டும் நிரப்பாமல் விலையில்லாமல் கிடைக்கும் மாற்று எரிபொருளை அம்மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.
இந்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு சமையல் எரிவாயுவை அனைவரும் பயன்படுத்த ஊக்குவிக்கும் வண்ணம் இத்திட்டத்தை துவக்கிவைத்தது.
சமைப்பதற்கு சிலிண்டரின்றி மற்ற எரிவாயுக்களை பயன்படுத்தவதால் வீட்டுக்குள் ஏற்படும் மாசுகளில் இருந்து ஏழைப் பெண்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்பதே திட்டத்தின் பிரதான நோக்கம்.
பொதுவாக கிராமப் பகுதிகளில் வசிக்கும் பலர் சமைப்பதற்கு சுத்தப்படுத்தப்படாத மண்ணெண்ணெய். மரக்கட்டை, உயிரி எரிபொருள் மற்றும் மாட்டுச்சாண வறட்டி உள்ளிட்டவற்றை சமையல் அடுப்பில் பயன்படுத்தி வந்தனர் .
உண்மையில், கிராமப்பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களை குறிவைத்தே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பர் 2018-ல் நாட்டிலுள்ள அனைத்து ஏழை குடும்பங்களும் பயனடைவதற்காக இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்தது.
இத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டதால் பயனடைபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என பாஜக அரசு குறிப்பிட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி, மோதி அரசு அரை குறையாக கட்டமைப்பு ரீதியாக குறைபாடு உடைய திட்டத்தை பிரபலப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியது.
பத்து கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் சுத்தகமான திரவ பெட்ரோலிய எரிவாயுக்கு பதிலாக இன்னமும் அழுக்கான மண்ணெண்ணெய்யைதான் சமையலுக்கு பயன்படுத்திவருகிறார்கள் என காங்கிரஸ் கட்சி கூறியது.
இத்திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது?
முதலில் இத்திட்டத்தின் கீழ் புதிதாக வீட்டினில் நிறுவப்படும் இலவச சிலிண்டர் எரிவாயு இணைப்புக்கு அரசே சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனங்களிடம் நேரடியாக பணமும் செலுத்திவிடும்.
ஒருமுறை சிலிண்டர் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டால், அதன் பின்னர் முதல் திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டரை அரசின் வட்டியில்லா கடனை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வீட்டினரே வாங்கிக்கொள்ள வேண்டும்.
அதற்கடுத்த சிலிண்டர்களை அரசு தனியாக வழங்கும் மானியத்தொகையை பயன்படுத்தி மேற்கொண்டு விலை கொடுத்து வாங்கவேண்டும்.
கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவில் முந்தைய ஆட்சியாளர்கள் அமல்படுத்திய திட்டங்கள் வாயிலாக 130 மில்லியன் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் மட்டுமே இருந்தன.
இதையடுத்து புதிதாக 80 மில்லியன் சிலிண்டர் இணைப்பை ஏழை குடும்பங்களுக்கு வழங்க இலக்கு வைத்த மோதி அரசு, கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி நிலவரப்படி 64 மில்லியன் சிலிண்டர் இணைப்பு வழங்கியுள்ளது என்கிறது அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள்.
ஆகவே இவ்வருடம் (2019) மே மாதத்துக்குள் இந்திய அரசு தனக்கு தானே நிர்ணயித்துக்கொண்ட இலக்கை எட்டிவிடும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதோடு இந்த கதை முடிந்துவிடவில்லை.
மீண்டும் எரிவாயு நிரப்பப்படுகிறதா?
இத்திட்டம் டெல்லியில் 2016-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டபோது சிலிண்டரை நிரப்ப 466 ரூபாய் (5 பவுண்ட் ஸ்டெர்லிங்) தேவைப்பட்டது. தற்போது மீண்டும் எரிவாயு நிரப்புவதற்கான ஒரு எரிவாயு சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட 80% அதிகரித்திருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 820 ரூபாய்.
எரிவாயு மீண்டும் நிரப்புவதற்கான விலை அதிகரித்து வருவது குறித்து இந்திய நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர் நிதின் சேதி அரசிடம் எத்தனை குடும்பங்கள் புதிதாக எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற்றவுடன் மீண்டும் எரிவாயு நிரப்பினார்கள் என கேள்வி கேட்டிருக்கிறார்.
அதன்படி புதிதாக சிலிண்டர் இணைப்பு பெற்ற குடும்பங்களில் பெரும்பாலானவை இரண்டாவது முறையாக எரிவாயு நிரப்பவில்லை என்றும் ஏனெனில் அவர்களால் அதற்குரிய பணத்தை செலுத்த முடியவில்லை என்றும் நிதின் சேதி தெரிவித்திருக்கிறார்.
இதன்காரணமாக பெரும்பாலானவர்கள் தாங்கள் ஏற்கனவே வந்த சமையல் முறைக்கு திரும்பியிருக்கிறார்கள். அதாவது மாட்டு சாணம், விறகு உள்ளிட்டவற்றை மீண்டும் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர் என்கிறார் அவர்.
ஆனால் அரசின் பார்வை வேறாக இருக்கிறது.
பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான நவம்பர் 2018-ல் பேசும்போது புதிதாக சிலிண்டர் இணைப்பு பெற்ற 80 சதவீதத்தினர் ஏற்கனவே நான்கு முறை எரிவாயு நிரப்பிவிட்டார்கள் என்றார்.
'' 20% மக்கள் மீண்டும் எரிவாயு நிரப்பவில்லை. ஏனெனில் அவர்கள் காடுகளின் அருகே வாழ்கிறார்கள். அவர்களுக்கு எளிதாக விறகு கட்டைகள் கிடைக்கின்றன'' எனத் தெரிவித்திருக்கிறார்.
எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் டிசம்பர் 2018-ல் ஒரு தகவலை வெளியிட்டது. அதாவது புதிதாக சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள் வருடத்துக்கு சராசரியாக மூன்று முறை மீண்டும் எரிவாயு நிரப்பியுள்ளனர். ஆனால் இந்தியாவில் பொதுவாக ஒரு குடும்பம் சராசரியாக ஏழு முறை மீண்டும் எரிவாயு நிரப்புகிறது.
சமையலுக்கு எரியூட்ட பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் எரிபொருள்கள் எளிதாக கிடைப்பதும் மக்கள் எரிவாயு சிலிண்டரை அணுகுவதை தடுக்கின்றன என்ற கூற்றுக்கு சில ஆதாரங்கள் இருக்கின்றன.
நிதி பகுப்பாய்வு நிறுவனமான CRISIL அறிக்கை, 2016-ல் இந்த திட்டம் செயல்படுத்தத் துவங்கியபிறகு சில மாதங்களில் மக்கள் ஏன் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டுக்கு பெரிய அளவில் திரும்பவில்லை என்பதை விளக்குகிறது.
அந்த அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, 35% வீடுகள் விலையின்றி சமையல் எரிபொருள் பெறுகின்றன. இதில் மூன்றில் ஒரு பங்கினர் விலையின்றி விறகை பெறுகின்றனர். மூன்றில் இரண்டு பங்கினர் சமையலுக்கு மாட்டு சாண வறட்டிகளை பயன்படுத்துகின்றனர்.
திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை பொருத்தவரை எரிவாயு நிரப்புவதற்கு காத்திருக்க வேண்டிய காலம் அதிகமாக இருப்பது மற்றும் அதற்கான விலை ஆகியவை பலரையும் அவர்கள் முன்பு பயன்படுத்தி வந்த சமையல் எரிபொருள்களை நாடச் செய்கிறது என்கிறது இந்த அறிக்கை.
ஆகவே, சிலிண்டர் எரிவாயு இணைப்பு பெற்ற பின்னர், மக்கள் மீண்டும் விலை மலிவான அல்லது விலையில்லா எரிபொருள்களை நோக்கி நகருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது தெரியவருகிறது.
மண்ணெண்ணெய் பயன்பாட்டில் வீழ்ச்சி
மண்ணெண்ணெய் பயன்பாடு கடந்த ஐந்து ஆண்டுகளாக வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.
அதாவது அதிகாரபூர்வ தகவலின்படி ஆண்டுக்கு 8.1% அளவில் வீழ்ச்சி இருக்கிறது. மண்ணெண்ணெய்க்கு அரசாங்கம் மானியத்தை படிப்படியாக குறைத்து வருவதும் இதற்கு பகுதியளவு காரணம்.
சமைப்பதற்கும், விளக்குகள் ஏற்றுவதற்கும் சில சமயங்களில் மின் சாதனங்கள் இயங்குவதற்கும் மண்ணெண்ணய் பயன்படுத்தப்பட்டது.
CRISIL நிதி பகுப்பாய்வு நிறுவனத்தின் 2016-ம் ஆண்டு அறிக்கையின்படி ஆய்வுக்குட்படுத்தப்ட்ட குடும்பங்களில் 70% இன்னமும் சமைக்க மண்ணெண்ணெய் பயன்படுத்தி வருகின்றன.
தற்போது துல்லியமாக என்ன நிலவரம் என்பதை தெரிந்து கொள்வதற்கான தரவுகள் இல்லை. ஆகவே காங்கிரஸ் கட்சி சொல்வது போல 10 கோடி குடும்பங்கள் இன்னமும் மண்ணெண்ணெய் பயன்படுத்திதான் சமைக்கின்றன என்ற கூற்று மிகத்துல்லியமாக உண்மையா என்பதை சான்றுடன் நிரூபிக்கமுடியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்