You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''இந்தியாவின் தாக்குதல் கர்நாடகத்தில் பாஜக 22 இடங்களை வெல்ல உதவும்'' - எடியூரப்பா
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளை இங்கே வழங்குகிறோம்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் : இந்தியாவின் வான் தாக்குதலால் பாஜகாவுக்கு கர்நாடகா 22 இடங்களில் வெல்லும் - எடியூரப்பா
கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவின் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா வான் தாக்குதல் நடத்தியது கர்நாடகாவில் 22 மக்களவை இடங்களை பாஜக வெல்ல உதவும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் எடியூரப்பா.
பாஜகவின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பாகிஸ்தானில் தீவிரவாதிகளை அழித்திருக்கிறோம். மோதிக்கு சாதகமான அலை உருவாகியிருக்கிறது. பிரதமர் மோதியின் தைரியம் காரணமாக 40 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேசமும் மோதியின் நடவடிக்கையை கொண்டாடுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன. இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். இதே சாதக அலை வீசும் நிலை தொடர்ந்தால், கர்நாடகாவில் உள்ள 28 இடங்களில், மக்களவை தேர்தலில் 22 இடங்களை நாம் வெல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என எடியூரப்பா புதன்கிழக்கையன்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடியாக ''ஒட்டுமொத்த தேசமும் மத்திய அரசுக்கும், ஆயுதப்படைகளுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படுவதற்காக ஆதரவு தெரிவித்துள்ளது.ஆனால் பாஜக தலைவர்கள் இந்த நிகழ்வை வைத்து மக்களவை தேர்தலில் எவ்வளவு இடங்களை கூடுதலாக வெல்ல முடியும் என கணக்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ராணுவ வீரர்களின் தியாகத்தை தேர்தல் லாபங்களுக்காக சுரண்ட நினைப்பது அவமானகரமானது,'' என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார் என விவரிக்கிறது இச்செய்தி.
தினத்தந்தி : மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யவுள்ளோம் - நிர்மலா தேவி வழக்குரைஞர் பேட்டி
தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவ்வழக்கில் பல்கலைகழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டார் ஆனால் இவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கிவிட்டது. நிர்மலா தேவி இன்னும் பிணையில் வெளிவரவில்லை.
நேற்று முன் தினம் (பிப்ரவரி 27) நிர்மலா தேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
நேற்றைய தினம் வழக்கு விசாரணையில் நிர்மலாதேவியை ஆஜர்படுத்த காவல்துறை அழைத்து வரவில்லை.
இந்நிலையில் நிர்மலா தேவியின் வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்ததாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
''நிர்மலா தேவையை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது சிபிசிஐடி கால்வதுறையினர் தரதரவென இழுத்து சென்றனர். இது மனித உரிமையை மீறும் செயல். நிர்மலா தேவையை சிறைக்கு கொண்டு செல்லும்போது கடுமையாக தாக்கியுள்ளதால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிறையிலும் சித்ரவதை செய்கின்றனர் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தால் காவல்துறை அவரை தாக்கியது வெளியே தெரிந்துவிடும் என்பதால் அழைத்து வரவில்லை. எனவே மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யவுள்ளோம்,'' என அவரது வழக்குரைஞர் தெரிவித்ததாக அச்செய்தி தெரிவிக்கிறது.
கடந்த முறை ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதற்காக நிர்மலா தேவி முயன்றபோது காவல்துறை கடும் இடைஞ்சலை ஏற்படுத்தியது இதனால் நிர்மலா தேவிக்கு பெரிய காயம் ஏற்பட்டது என்றும் நிர்மலா தேவியின் வழக்குரைஞர் கூறுகிறார்.
தினமணி : கீழடியில் விரிவான ஆய்வு தொடங்கப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு
கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வுக்கான நிதி கிடைத்துள்ளது. கேரளத்தில் பட்டினம் என்ற இடத்தில் ஆய்வு செய்தபோது அது பழைய முசிறிப் பட்டினம் என கண்டறியப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த ஆய்வு மூலம் உலகப் பார்வை வித்தியாசமாக இருக்கிறது. இனி தமிழகத்தின் ஆய்விலும் உலக தரமிக்க பல்கலைகழகங்களுடன் இணைந்து செயல்படவேண்டும் என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என் தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜா தெரிவித்திருக்கிறார்.
''கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வை இன்னும் விரிவாக உலக தரமிக்க பல்கலைகழகங்களுடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். அதை இன்னும் இரு மாதங்களில் தொடங்குவோம். கீழடியில் முதல் நான்கு கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட 14,500 பொருளாக்களையும் காட்சிப்படுத்த அங்கேயே அகழ்வைப்பகம் வைக்க தமிழக அரசு ஒரு ஏக்கர் நிலம் கொடுத்த்துள்ளது. அதற்காக 1 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. மேலும் மத்திய அரசிடம் இரண்டு கோடி கேட்டிருக்கிறோம்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
தினகரன் - ''கோடையில் குடிநீர் பிரச்சனையில் சிக்கப்போகிறது தமிழகம்''
தமிழகத்தில் உள்ள 15 அணைகளில் 62 தி எம் சி தணண்ணீர் மட்டுமே இருக்கிறது . 198 டி எம் சி கொள்ளளவு கொண்ட இந்த 15 அணைகளின் மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவைகள் பூர்த்தி செய்யப்டுகின்றன.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் இந்த அணைகளில் நீர் மட்டம் உயரவில்லை. 93 டி எம் சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 31 டி எம் சி தண்ணீரும் 32 டி எம் சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 14 டி எம் சி தண்ணீரும் மட்டுமே உள்ளது.
அமராவதி, பேச்சி பாறை, கிருஷ்ணகிரி, பெருஞ்சாணி, சோலையாறு, ஆழியாறு ஆகிய ஆறு அணைகளும் வறண்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்னரே குடிநீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்