ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து டி.டி.வி.தினகரன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜிஎஸ் சிஸ்தானி மற்றும் சங்கீதா திந்த்ரா செகல் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

"உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது": முதலமைச்சர்

இந்தத் தீர்ப்பு குறித்து தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உண்மையான அண்ணா தி.மு.க. நாங்கள்தான் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பலர் இந்த இயக்கத்தை அழிக்கலாம் என்று நினைத்தார்கள். சிலர் அண்மையில் கட்சிக்கு வந்து இந்த இயக்கத்தைப் பிரித்துவிடலாமென்று கங்கணம் கட்டிக்கொண்டு, இடையூறு செய்தனர். அதற்கெல்லாம் நீதிமன்றத்தில் தீர்வு கிடைத்திருக்கிறது. இரட்டை இலை கிடைத்திருக்கிறது. இனி அ.தி.மு.க. வீறு நடை போடும்.

சட்டரீதியாக அவர்களுக்கு இனி வாய்ப்பில்லையென கருதுகிறேன். எங்கு சென்றாலும் அவர்கள் அதே ஆதாரத்தை கொடுப்பார்கள், நாங்களும் அதே ஆதாரத்தை கொடுப்போம். இதே தீர்ப்புதான் கிடைக்கும்.

தி.மு.கவின் சதித் திட்டத்தால் டி.டி.வி. தினகரன் எங்களுக்கு இடையூறு கொடுக்க இந்த வழக்கு தொடரப்பட்டது. இப்போது நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களும் எடுத்துவைக்கப்பட்டதால் உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என இரட்டை இலையை வழங்கியிருக்கிறார்கள். " என்று கூறினார்.

டிடிவி தினகரன் இதுவரை கருத்து எதையும் வெளியிடவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சதித்திட்டத்தால், டி.டி.வி.தினகரன் இந்த வழக்கை தொடுத்தார். ஆனால், எதுவும் நடக்காமல் நாங்கள்தான் உண்மையாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதை இந்த தீர்ப்பு தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தொடுக்கப்பட்டிருந்த ஏழு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: